பெண் ஊழியரை கீழே தள்ளி 8 பவுன் நகை பறிப்பு.

0
1

பெண் ஊழியரை கீழே தள்ளி 8 பவுன் நகை பறிப்பு.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சன்குறிச்சி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜான். இவருடைய மனைவி ஹெலினா அலங்கார சோபியா (வயது 46). இவர் லால்குடி தபால் நிலையத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் தனது ஸ்கூட்டரில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

அதுபோல் நேற்று வேலைக்கு செல்வதற்காக காலை 9 மணிக்கு அவர் தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் தபால் நிலையத்துக்கு புறப்பட்டார். பல்லபுரம் பெருவள வாய்க்கால் பாலத்தை கடந்து அவர் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார்.

2

அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 2 மர்ம ஆசாமிகள், ஹெலினா அலங்கார சோபியாவின் ஸ்கூட்டரை திடீரென மறித்தனர். பின்னர், அவர்கள் ஸ்கூட்டருடன் அவரை கீழே தள்ளிவிட்டனர்.

ஹெலினா அலங்கார சோபியா சுதாரிப்பதற்குள், அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலி சங்கிலியை மர்ம ஆசாமிகளில் ஒருவன் பறித்துக்கொண்டான். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர்.

இந்த சம்பவத்தில் கீழே விழுந்ததில் ஹெலினா அலங்கார சோபியாவுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள், ஹெலினா அலங்கார சோபியாவை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஹெலினா அலங்கார சோபியா லால்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.