அறிவோம் தொல்லியல்-10 பயணங்கள் முடிவதில்லை…

0
1

தமிழி கல்வெட்டில் கருவூர்:

கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் புகழூர் அமைந்துள்ளது. வேலாயுதம்பாளையம் என்றும் தற்பொழுது அழைக்கப்படுகிறது, இவ்வூரிலுள்ள ஆறுநாட்டார்மலையில் தெற்கு மற்றும் வடபகுதியில் இயற்கையாய் குகைத்தளங்கள் உள்ளது. இக்குகைத்தளத்தின் முகப்பு பகுதி மற்றும் கற்படுக்கைகளில் தமிழி எழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளது. மொத்தம் பன்னிரண்டு கல்வெட்டுகள் காணப்படுகிறது. 1927-28ஆம் ஆண்டு வாக்கில் இக்கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது. இதில் பதிற்றுப்பத்தின் பாட்டுடைத்தலைவர்களான சேரமன்னர்களின் பெயர்கள் வருகிறது.

ஐயர்மலை
4

மேலும் இலக்கியம் தவிர்த்து கரூரை குறிக்கும் முதல் கல்வெட்டு இங்குதான் காணப்படுகிறது. அவ்வகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. தென்புற முகப்பில் இரு கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு நான்கு தலைமுறை சேரமன்னர்களின் பெயரை தருகிறது.

கல்வெட்டு : 1

1.முதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறை

2.கோ ஆதன் செல்லிரும் பொறை மகன்

3.பெருங்கடுங்கோன் மகன் ளங்

4.கடுங்கோளங்கோ ஆக அறுத்த கல்

பொருள்:

யாற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்ற மூத்த சமணத்துறவிக்கான இடம் இது. இதனை அரசனான ஆதன் செல்லிரும்பொறையின் மகன், பெருங்கடுக்கோவின் மகனான, இளங்கடுக்கோ இளவரசனாக வந்தபொழுது அமைத்துக்  கொடுக்கப்பட்டது என்பது இதன் பொருள். இதில் பொறை என்பது சேரனின் வம்சத்தினை குறிக்கும் சொல்.இக்கல்வெட்டு அதன் எழுத்தமைதி வைத்து கி.பி 2 ம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டுள்ளது.

கரூர் பெயர் வரும் நடுகற்கள்

கல்வெட்டு :2

தெற்குநோக்கிய குகைத்தளத்தின் கீழ்ப்பகுதியில் வெட்டப்பட்டுள்ள படுக்கைகளில் மூன்றாவது படுக்கையில் கருவூர் என்ற சொல் வருகிறது.

1.கருஊர் பொன் வாணிகன்

2.நத்தி அதிட்டானம்

பொருள்:

கரூரைச் சார்ந்த பொன்வானிகன் அமைத்து கொடுத்த புனித இருக்கை என்பது  இதன் பொருள். கல்வெட்டில்  கருவூர் என்ற பெயரினைச் சொல்லும் முதல் கல்வெட்டு இது. இதன் காலம் கி.பி.3 என கணிக்கப்பட்டுள்ளது.

புகழூர், சேரவம்சம் கல்வெட்டு
2

இவை நீங்கலாக இன்னும் பத்து தமிழி கல்வெட்டுகள் காணப்படுகிறது! இவை அனைத்தும் துறவிகள் தங்க இருக்கை அமைத்த கொடையாளரின் பெயரையும், ஊரினையும் குறிக்கிறது. இதில் குறிப்பிட்டப்பட்ட நல்லியூர்  இன்னும் அப்பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

குளித்தலை ஐயர்மலை தமிழி:

குளித்தலை வட்டத்தில் அமைந்துள்ளது இம்மலை, இம்மலையில் மேலே இரத்தினகிரிஸ்வர் எனும் பாடல் பெற்ற தலம் உள்ளது. அம்மலையின் பின்புறம் இயற்கையாய் அமைந்த குகைத்தளம் உள்ளது. இதில் படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளது. இப்படுக்கையின் முதலாவது படுக்கையில் ஒரு தமிழி கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.

1973-74ஆல் மத்திய தொல்லியல்துறையால் இக்கல்வெட்டு கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மலையேற்றத்திற்கு சரியான பாதையில்லாமல் சற்று ஆபத்தான சரிவில் இக்கல்வெட்டு அமைந்துள்ளது. கல்வெட்டு : 3

பனைதுறை வெஸன் அதட் அனம்

 

விளக்கம்:

பனைதுறை என்ற ஊரைச் சார்ந்த வெஸன் என்பவரால் செய்யப்பட்ட இருக்கை என்பது இதன் பொருள். பனை என்பது மரத்தின்பெயராகவும், துறை என்பதற்கு நீர்நிலையுள்ள இடமாகவும் பொருள் கொள்ளலாம்.  இவ்வூரின் அருகே காவிரி ஓடுவதால் இப்பெயர் வந்திருக்ககூடும். பனை என்பது சேரமரபின் அடையாளமாய் கொள்கின்றனர். அல்லது பனைமரம் சூழ்ந்த துறையாய் இருக்கலாம்.

புகழூர்

வெஸ்ஸ எனும் சொல் விஸ்ஸ எனும் சொல் அடிப்படையில் பிறந்த வைஸ்ஸ எனும் சொல்லால் வைசியன் அல்லது வணிகன் என பொருள் கொள்ளப்படுகிறது. அதிட் அனம் என்பது அதிட்டானம் என்பதன் பொருளாய் கொண்டு இருக்கை என பொருள்கொள்ளப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் காலம் கி.மு முதலாம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புகழ்பெற்ற சேரர்குலமும், கருவூரும் கி.பி 7 ம் நூற்றாண்டிற்கு பின் தளர்ச்சியடைய ஆரம்பித்தது. களப்பிரர்க்குபின் பல்லவர், பாண்டியர் எழுச்சியால் இடர்வு ஏற்ப்பட்டது.  கரூரரை தலைநகராய் கொண்டு பாலக்காடு கணவாய் வழியே மேலைக்கடற்கரை வரை ஆண்டனர், இக்கடற்கரையின் வடபுறம்வரை ஆட்சி செலுத்தினர். தென்புறம் சங்ககால வேளிரான ஆய்மன்னர்கள் ஆண்டனர். அதன்பின் திருவாங்கூர் வரை ஆட்சி செலுத்தி கன்னியாகுமரி வரை பேரரசாக ஆண்டனர்.

வேள்விக்குடி செப்பேடு ராஜசிம்ம பாண்டியன் சேரனின் மழகொங்கம், கொடுமுடி ஆகியபகுதிகளை வென்றதை கூறுகிறது. ராஜசிம்மன் மகன் பராந்தக நெடுஞ்சடையன் புகளூரில் அதியனை வெல்கிறான். அதியனுக்கு ஆதரவாய் பல்லவனும், சேரனும் வருகின்றனர். அவர்களையும் வென்றதாக தாளவாய்புரம் செப்பேடு கூறுகிறது.

இக்குறிப்பு

“காடவனை கரூரில் கால்கலங்கக்

களிறுதைத்த கூடலூர்க்கோன்”

என வருகின்றது.

இவை தவிர்த்து எட்டாம்  நூற்றாண்டு நடுகல் ஒன்றிலும் கரூர் குறித்த குறிப்பு வருகிறது!

“கோ கலியன் மகன் கரூரிடை தன் ஆநிரை கொளல் எறிந்து பட்டான்”

மற்றொரு நடுகல்லில் “ஸ்ரீவஞ்சி வேளடியான்” என்ற பெயர் வருகிறது, மற்ற வரிகள் சிதைந்துவிட்டது.

இதன் பின் 9 ம் நூற்றாண்டில் சோழர் ஆதிக்கம் பெறுகின்றனர். முதலாம் ஆதித்த சோழன் கொங்கு நாடு முழுவதும் வெல்கினான். இதன் பின் ராஜராஜர் காலத்தில் கேரளாந்தக வளநாடு என பெயர் மாறுகிறது. குலோத்துங்கன் காலத்தில் முடிவழங்குசோழபுரம் என மாறுகிறது. இவ்வாறு பெயர்களில் மாற்றம் பல நிழ்ந்தாலும் இன்றும் தன் பழைய பெயராலேயே கரூர் அழைக்கப்பட்டு வருகிறது.

கரூரில் நடைபெற்ற அகழாய்வு குறித்து வரும் வாரம் காண்போம்.

 

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்