ஆதிமகள் 13

0

அரசியல் கட்சியின் பிரச்சனையால் அன்று இரவு மைசூரில் ஜி.கே.வீட்டில் விசாலி தான் தங்கியதையும், புதிதாக பார்த்த அன்றே சில நிமிடங்களிலேயே ஐந்து வயது சிறுவனாக இருந்த கரண் தன்னுடன் உறங்கிப் போனதையும், அந்த இரவு நேரத்தில் அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவை யாரோ தட்டியதையும் சொல்லிக்கொண்டிருந்த விசாலிக்கு, தான் ஏன் இவ்வளவு விலாவாரியாக தனது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை காயத்ரியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று விசாலிக்கு புரியவில்லை.

காயத்ரியால் கதவை தட்டியது ஜி.கே.யாகத்தான் இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ள முடிந்தது. காயத்ரி நினைத்தது போலவே விசாலியும் அங்கு நடந்ததை கூறினாள். “தான் அறையின் விளக்கை போட்டுவிட்டு கதவை திறந்தபோது அங்கு ஜி.கே. நின்று கொண்டிருந்தார். அவர் கரணை தன்னுடைய அறைக்கு தூக்கிச் செல்ல என்னிடம் சம்மதம் கேட்டார். நான் அவன் என்னிடமே தூங்கட்டும். காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்றேன். அந்த நேரத்தில் வெகுநேரமாக என் மனதில் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை ஜி.கே.யிடம் கேட்டேன்.  “கரணின் அம்மாவை வீடெங்கும் தேடியும் காணவில்லையே. கரணிடம் கேட்டும் அவன் பதில் சொல்லாமல் அசதியால் தூங்கி விட்டான்” என்றேன். அதற்கு அவர் நான் தங்கியிருந்த அறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு பெண்ணின் போட்டோவை காட்டினார். நான் அவ்வளவு நேரம் எப்படி அந்த போட்டோவை பார்க்காமல் போனேன் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அந்த போட்டோவை திரும்பி பார்த்தபோது, கரண் போட்டோவை நோக்கி படுத்தபடி தூங்கிக் கொண்டிருந்ததும், போட்டோவில் அந்த பெண் சிரித்துக் கொண்டிருப்பதும் எனக்குள் ஒரு இரக்கத்தை, ஒரு இனம் புரியாத அவலச்சுவையை, என் மனம் உணர்த்தியது. என்னை அந்த உணர்வுகள் மேலும் மனதளவில் பலவீனப்படுத்தியது. எனக்கு அந்த குடும்பசூழல் முற்றிலுமாக புரிந்து போனதால் மேற்கொண்டு என்ன பேசுவதென்று புரியாத சூழலில் நான் திகைத்து நின்ற நிலையில், ஜி.கே.யும் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றார். அந்த நேரத்தில் மேற்கொண்டு ஜி.கே. எதுவும் பேசாமல் சென்றதே எனக்கும் சரி என தோன்றியது. இப்படியாக விசாலி தனது அப்போதைய நிலையை கதையாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே, காயத்ரியின் போன் ரிங் ஆனது. அதை எடுத்து காயத்ரி தனது அப்பாவிடம் பேசினாள்.

விசாலி அவளது போனை எடுத்து நேரம் பார்த்தாள். இரவு மணி பதினொன்று ஆகியிருந்தது. நேரம் போனது தெரியாமல் இடைவிடாமல் தான் மட்டுமே பேசிக்கொண்டிருந்தது விசாலிக்கு ஆச்சரியத்தையும், அசதியையும் ஒரு சேர தந்தது.

‌சந்தா 1
சந்தா 2

காவேரி பாலத்தில் அங்கும் இங்குமாக சிலர் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தனர். பெரும்பாலானவர்கள் இல்லாத நிலையில் தானும் காயத்ரியும் மட்டுமே பாலத்தின் மேல் நிற்பது போல் விசாலிக்கு தோன்றியது. காயத்ரி போனில் பேசி முடிக்கவும், “சரி வா காயத்ரி போகலாம். நேரம் போனதே தெரியவில்லை” என விசாலி பேசிக்கொண்டே வர, காரில் ஏறி இருவரும் புறப்பட்டனர். கார் காயத்ரியின் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. காயத்ரி காரில் போகும் போதே அவளது அனைத்து சந்தேகங்களையும் கேட்க, விசாலி கரண் மீது இரக்கம் கொண்டது, ஜி.கே.யின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் அவர் மீது அக்கறை கொண்டு, தான் அவரை மனதார விரும்பியது, தனக்கு முறைமாப்பிள்ளை வசதியான இடத்தில் இருந்தும், பிடிவாதமாக குடும்பத்தின் எதிர்ப்போடு ஜி.கே.சொன்னதை ஏற்றுக்கொண்டு தான் அவரை திருமணம் செய்து கொண்டது. வாழ்க்கையின் ஓட்டத்தில் இனிமையும், சுகமும் இருந்தபோதும், தான் உள்ளூர ஏதோ ஒன்றை தவற விட்டுவிட்டதாக தன்னையும் மீறி தனக்குத் தானே பல சமயங்களில் மன உளைச்சலுக்கு உள்ளானது பற்றியும், திருச்சிக்கு கரணின் கல்லூரி படிப்பிற்காக அனைவரும் இங்கு வந்து குடியேறியதோடு, தற்சமயம் கரண் சென்னையில் நல்லதொரு வேலையில் இருப்பதையும், விசாலி சொல்லி முடிப்பதற்கும், காயத்ரியின் வீட்டை கார் வந்தடைவதற்கும், சரியாக இருந்தது.

கார் காயத்ரியின் வீட்டு வாசலில் வந்து நின்றவுடன் சண்முகநாதன், அவசரமாக கேட்டை திறந்து காரின் அருகே சென்று விசாலியை தனது வீட்டிற்குள் அழைத்தார். காயத்ரியும் விசாலியை வீட்டினுள் அழைக்க விசாலி இரவு வெகு நேரமாகிவிட்டதையும் இன்னொருநாள் தான் வருவதாகவும் கூறிவிட்டு விசாலி கிளம்பிப் போனாள்.

இரவு வெகுநேரமாகியும் காயத்ரிக்கு தூக்கம் பிடிக்கவில்லை. திடீரென தன்னுடைய வண்டியை நாளை கரணிடம் விசாலி கொடுத்தனுப்புவதாக சொன்னது, அவளை முழு விழிப்பு நிலைக்கு கொண்டு வந்தது. இன்று நடந்தவை எதுவுமே அவள் நினைவில் இல்லாமல், நாளை கரண் வரப் போவதையும் தனது வண்டியை அவன் எடுத்து வருவானா? மாட்டானா? இல்லை நாம் தான் போய் எடுத்து வர வேண்டுமா? என்பது போன்ற பல சிந்தனையில் ஆழ்ந்தவள், கண்டிப்பாக நாளை கரண் தனது வீட்டிற்கு வருவான் என்ற நம்பிக்கையில் புரண்டு படுத்தாள்.

 

 

Leave A Reply

Your email address will not be published.