ஆதிமகள் 12

0
full

விசாலி தனது வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை காயத்ரியிடம் பகிர்ந்து கொள்ள, விசாலி பேசிய தொனி, அவள் சொல்கின்ற விசயங்கள் அனைத்தும் அந்த காலகட்டத்தில்,  விசாலிக்கு மகிழ்ச்சியை தந்ததா அல்லது தான் தவறு செய்து விட்டேன், என தனக்குத்தானே  அவள் ஆதங்கப்பட்டுக் கொள்கிறாளா என காயத்ரியால் விசாலியின் உணர்வை புரிந்து கொள்ள முடியவில்லை.

வானத்தில் முழு நிலவும் மேகத்தினுள் புகுந்து மறைந்து கொண்டதால் வெளிச்சம் குறைந்து ஆற்றின் வெளியில் சூன்யம் அப்பி கிடந்தது. காயத்ரி விசாலியை பார்த்தபடி நின்றிருந்தாள். காற்றின் போக்கில் மெதுவாக கருமேகங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. மேலும் தொடர்ந்தாள் விசாலி.

 

‘’ஜி.கே. குடும்பம் இரண்டு தலைமுறையாக ஊட்டியில் வாழ்ந்தவர்கள். அங்கு அவர்களுக்கென்று இருந்த டீ எஸ்டேட்டை கவனித்துக்கொண்டு இன்னும் சில தொழில்களும் செய்து வந்தனர். ஜி.கேயின் அப்பா ஊட்டியில் ஒரு சாக்லெட் நிறுவனத்தை ஆரம்பித்து நல்ல வருமானமும் பார்க்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் இவர்களுக்கு வியாபாரத்தில் போட்டி ஏற்பட, சமாளிக்க முடியாமல், உடனடியாக தொழிலை மாற்ற யோசித்து வேறு வேறு தொழில்கள் செய்ய, அதில் வெற்றி பெற முடியாமல் அடுத்த தலைமுறை தடுமாறி வியாபாரத்தில் தோற்றுப் போனது.  சென்ற தலைமுறை சம்பாதித்து சேர்த்ததை விற்று பிழைப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாயிற்று.

poster

ஜி.கே. தனது குடும்பத்தில் பேசி தனக்கான பங்கை பணமாக எடுத்துக்கொண்டு தன்னுடைய மனைவி அப்போதுதான் இறந்திருந்த சூழ்நிலையில், தனது  நான்கு வயது மகன் கரணுடன் மைசூர் வந்தவர், ஏதாவது தொழில் செய்ய வேண்டுமே என்று யோசித்து தன்னிடம் இருக்கும் பெருந்தொகையைக்கொண்டு விலை உயர்ந்த உபயோகப்படுத்திய கார்களை வாங்கி,  அதை மேலும் லாபத்திற்கு தனக்கு அறிமுகமான பணக்காரர்களிடம் திறமையாகப் பேசி, வியாபாரம் செய்து ஒரு வருடத்திற்குள்ளாகவே தொழிலில் நல்ல முன்னேற்றம் கண்டார். அதே நேரத்தில் தனது மகனுக்கும் எந்த ஏக்கமும் வந்துவிடக்கூடாதென, தனது வீட்டையே கார் விற்கும் அலுவலகமாக மாற்றிக்கொண்டு, எல்லாவற்றிற்கும் வேலையாட்கள் நியமித்து கரணையும் சந்தோசமாகவே பார்த்துக் கொண்டார்.

இந்த சூழலில்தான் எங்கள் குடும்பத்திற்கும் கார் தேவைப்பட்டது. எங்கள் வீட்டில் நானும், எனது அப்பாவும் கார் ஓட்டத் தெரிந்தவர்கள் என்பதால் கார் வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.”

இதை விசாலி சொன்னபோது காயத்ரிக்கு, காரில் வரும்போது, ‘தன்னை கார் ஓட்டத் தெரியுமா’ என கேட்டது அவள் நினைவுக்கு வந்தது.

மேலும் விசாலி பெங்களூரில் வசித்து வந்த நாங்கள், மைசூரிலிருக்கும் ஜி.கேயிடம் உபயோகப்படுத்திய விலையுயர்ந்த கார்கள், நல்ல பராமரிப்புடன் நியாயமான விலைக்கு கிடைக்கும் என்பதை கேள்விப்பட்டு ஜி.கே.யை தொடர்பு கொண்டோம். ஜி.கே.யின் பேச்சும், அவர் வைத்திருந்த காரும் பிடித்துப்போக, நாங்கள் அதை வாங்கிச் செல்ல, பெங்களூரிலிருந்து மைசூர் வந்தடைந்தோம்.  நாங்கள் மைசூர் சென்ற நேரம், ஒரு அரசியல் கட்சியின் பெரும் போராட்டத்தால் திடீரென போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டு, ஊரே அடங்கி, மைசூரே  ஸ்தம்பித்து போனது. எங்களால் ஜி.கே.யிடம் காரை வாங்கிக்கொண்டு மைசூரை விட்டு உடனே கிளம்ப முடியாத சூழலில், ஜி.கே. என் அப்பாவிடம் பேசினார். “வெளியில சூழ்நிலை சரியில்லை. உங்களுக்கு சவுகரியப்பட்டால் எனது இருப்பிடத்தில் தங்கி செல்லலாம் என கூறினார். அப்பாவும் சிறிது நேர யோசனைக்கு பிறகு சரி என சம்மதித்தார்.  நானும், அப்பாவும் அன்று ஒருநாள் ஜி.கே. வீட்டில் தங்கிச் செல்ல முடிவெடுத்தோம்.

ukr

ஜி.கே. முன்புற அலுவலக அறையை கடந்து வீட்டினுள் சென்றார். நானும் அப்பாவும் அவரை பின்தொடர்ந்து செல்ல சற்று தயக்கமாக இருந்தது. அவர் எங்களை திரும்பி பார்த்து சங்கடப்பட வேணாம் உள்ள வாங்க. சூழ்நிலை நீங்க இங்க தங்கும்படி ஆகி போச்சு” என்றார்.

“நான் ஜி.கே.வை கவனித்த அளவில் சூழ்நிலை situation என  அடிக்கடி இந்த வார்த்தையை பிரயோகித்தபடியே அவர் இருந்தார்.”

“இந்தவிதமான கவனிப்பை ஒரு ஆணின் மேல் நான் செலுத்தியது அதிகமாக எனக்கு பட்டது. ஆனாலும் என்னால் ஜி.கே.வின் உடல் மொழி, பேச்சு, செயல் என எதையும் விடுத்து, அங்கிருந்து கடந்து போக, எனது மனம் சம்மதிக்கவில்லை.

அப்போது தான் ஐந்து வயது சிறுவன் கரண், அப்பா என ஓடிவந்து ஜி..கே.வின் கால்களைக் கட்டிக் கொண்டான். அவர் அவனைத் தூக்கி வாரி அணைத்து கொஞ்சியதும். பேசியதும் ஒரு வசந்த காலத்தின் மலர்ச்சியை அப்போது எனக்கு உணர்த்தியது.

நான் கரணின் அம்மாவை வீடெங்கும் கண்களால் தேடினேன். ஜி.கே.யிடம் சிறுவனின் அம்மாவை பற்றி கேட்பதற்கு எனக்கு சங்கோஜமாக இருந்தது. அந்த இடத்தில் ஜி.கே. ஒரு வியாபாரி. நான் ஒரு கஸ்டமர் என்ற உணர்வு மறைய தொடங்கியது. ஒரு அறையை காண்பித்து, அதில் தங்கிக்கொள்ளும்படி ஜி.கே. அறிவுறுத்தினார். உணவு ஏற்பாடு செய்து தருவதாகக் கூறினார்.

அப்பா உணவு வாங்க பணம் கொடுக்க முன்வந்ததை ஜி.கே. மறுத்துவிட்டார். அறையினில் நானும் அப்பாவும் தங்கினோம். உணவு வந்ததும், எங்களை சாப்பிடச் சொல்லிவிட்டு ஜி.கே. சென்றுவிட்டார். அப்போது, ஐந்து வயதாக இருந்த கரண், அறையின் வாசலில் என்னையே பார்த்தபடி நின்றிருந்தான். அவனை ஜி.கே. வாரி அணைத்து கொஞ்சியது எனக்கு நினைவுக்கு வந்தது. நான் எனது இரண்டு கைகளை என்னை அறியாமல் அவன பக்கமாய் நீட்டினேன்.

நான் அழைத்ததும் அவன் சற்று கூட தாமதமின்றி ஓடிவந்து என் கைகளுக்குள் புகுந்த போது எனக்கு தெரியவில்லை நான் அவர்களின் வாழ்க்கையில் அப்போதே புகுந்து விட்டேன் என்று. இதில் மிகப் பெரிய ஆச்சரியம் கரண் என்னோடு, என் அருகினில் படுத்தே அன்று தூங்கிவிட்டான். அன்று இரவு நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது யாரோ நாங்கள் தங்கியிருந்த அறையின் கதவை தட்டும் சத்தம் கேட்டது.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.