மணப்பாறையில் தவணை முறை விற்பனைத் திட்டத்தை தோற்றுவித்த ராமசாமிக்கவுண்டர் இயற்கை எய்தினார்.

0
1

மணப்பாறையில் தவணை முறை விற்பனைத் திட்டத்தை தோற்றுவித்தவர்

ராமசாமிக்கவுண்டர் இயற்கை எய்தினார்.

நேற்று 29.03.2019 மாலை 5 மணி வாக்கில் பெரியார் சிலையைக் கடந்து மதுரை சாலையில் சென்று கொண்டிருக்கும்போது கண்ணீர் அஞ்சலி போர்டு ஒன்றைப் பார்த்தேன். அந்த இடத்தைவிட்டு கடந்து சென்ற பிறகுதான் அறிவிப்பை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மீண்டும் ரவுண்டாணாவைச் சுற்றி வந்து பார்த்த போதுதான் விபரம் தெரிந்தது.

2

“ஸ்ரீமுருகன் ரேடியோ சைக்கிள் மார்ட்” உரிமையாளர் ராமசாமிக்கவுண்டர் இயற்கை எய்தினார் என்ற செய்தி இருந்தது. “முருகன் ரேடியோ சைக்கிள் மார்ட்” நிறுவனத்திற்கும் எங்கள் குடும்பத்திற்கும் மூன்று தலைமுறைத் தொடர்பு உண்டு.

பழைய ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தின் எல்லையாகவும், இன்றைய கரூர் மாவட்டத்தின் எல்லையாகவும் இருக்கக்கூடிய சின்னத்தாராபுரம் அருகே அமராவதி ஆற்றங்கரையின் ஒருபகுதியாக உள்ளது “பெரிய மதியாக் கூடலூர்” என்னும் கிராமம். இந்த அழகிய கிராமத்தில் பெரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ராமசாமிக் கவுண்டர்.

ரமசாமிக் கவுண்டரின் தகப்பனார் கரூரில் உள்ள ஒரு வர்த்தக மண்டியில் விளை பொருட்களை விற்கும் வழக்கத்தைக் கொண்டிருந்திருக்கிறார். நாளடைவில் அந்த மண்டிக்கடையின் வரவு செலவுகளை பராமரிக்கும் பணிக்கு தனது மகனான ராமசாமி அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார். மண்டிக்கடைப் பணி மூலம் ரமசாமிக்கவுண்டருக்கு பலரது தொடர்புகளும் கிடைத்திருக்கிறது.

மண்டிக்கடையில் கிடைத்த நண்பர்களில் ஒருவர்தான், மணப்பாறையைச் சேர்ந்த கணேசன். அந்த நட்பு ரமசாமிக்கவுண்டரின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கணேசன் அவர்கள் ஒத்துழைப்போடு மணப்பாறையில் “ஸ்ரீமுருகன் ரேடியோ சைக்கிள் மார்ட்” என்ற ஒரு வர்த்தக நிறுவனத்தை தொடங்குவது என்று ரமசாமிக்கவுண்டர் திட்டமிட்டிருக்கிறார்.

1970-ஆம் தொடங்கப்பட்ட “ஸ்ரீமுருகன் ரேடியோ சைக்கிள் மார்ட்” நிறுவனம்தான், மணப்பாறை நகரின் முதலாவது வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனமாகும். ஆரம்ப காலத்தில் இந்த நிறுவனத்தில் மூன்றில் ஒரு பங்கு உரிமை கணேசன் அவர்களுக்கு இருந்திருக்கிறது. பின்னாளில் கணேசன் தனியாக “ஸ்ரீகுமரன் ரேடியோ சைக்கிள் மார்ட்” என்னும் பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கிவிட்டார்.

மணப்பாறையில் ‘கோல்டன் பிராண்டி சாப்’ என்ற பெயரில் மதுகசாயக்கடையையும் ராமசாமிக்கவுண்டர் நடத்தியிருக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் மது கசாயம் குடிப்பவர்கள் வட்டாட்சியரிடம் பர்மிட் வாங்கிக் கொண்டு, அதை கடையில் கொடுத்து அதில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே வாங்கியிருக்கிறார்கள். நாள்தோறும் வாங்கும் மதுவின் அளவு அந்த பர்மிட்டில் கழித்துக் கொள்ளும் நடைமுறை இருந்திருக்கிறது. பர்மிட் முடிந்தவுடன் குடிமகன்கள் மீண்டும் வட்டாட்சியரைச் சந்தித்து பர்மிட் புதிதாக வாங்கும் நடைமுறையும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த முறையே தொடர்ந்து இருந்திருக்கலாம்?

1970-களில் மணப்பாறையில் தொடங்கப்பட்ட முதலாவது நிறுவனமான “ஸ்ரீமுருகன் ரோடியோ சைக்கிள் மார்ட்” நிறுவனம்தான், மணப்பாறைப் பகுதியில் தவணை முறையில் வீட்டு உபயோகப் பொருட்களை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த நிறுவனத்தின் சேவை பரந்து விரிந்திருக்கிறது.

வாடிக்கையாளர்களிடம் ராமசாமிக்கு கவுண்டர் காட்டும் அன்பு இன்று வரை இப்பகுதி மக்களால் போற்றப்படுகிறது.

4

1970-களில் இராசாளிப்பட்டியில் ஆர்.என்.ஏ சைக்கிள் என்ற பெயரில் வாடகை சைக்கிள் கடையை ஆரம்பித்த எனது தகப்பனார் ஆறுமுகம் அவர்கள், 1972 வரை திருச்சி சென்று சைக்கிள் பூட்டி உள்ளார். 1973 இல் இருந்து ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது பழைய சைக்கிள்களை விற்றுவிட்டு, புதிய சைக்கிள்களை ராமசாமிக்கவுண்டரிடம் தான் வாங்கி அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

அதன்பிறகு ரமசாமிக்கவுண்டரின் அக்காள் மகனும், மருமகனுமான ரெத்தினம் அவர்கள் கடையின் நிர்வாகப் பொறுப்பை கவனித்து வந்திருக்கிறார். முருகன் ரெத்தினம் அவர்களோடும் நல்ல தொடர்பில் இருந்த எனது தகதப்பனார் 1985 இல் பராமரிக்க இயலாமல் வாடகை சைக்கிள் கடையை நிறுத்திவிட்டார்.

திரு. முருகன் ரெத்தினம் அவர்கள் பொறுப்பில் இருந்த காலத்தில்தான் வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களுடன் வியாபாரத்தை விரிவு படுத்தினார். திரு.முருகன் ரெத்தினம் அவர்கள் வியாபாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் பொதுவாழ்க்கையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வைகோ அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென இயற்கை எய்தியது அந்தக் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் அவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்த பலருக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது.

அதன்பிறகு முருகன் சந்துரு அந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஒரு வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் என்ற நிலையைத் தாண்டி ஒரு இலக்கிய வாதியாகவும் சந்துரு பரிணமித்திருக்கிறார் என்பது அந்தக் குடும்பத்தின் சிறப்பாகும்.

எனது தந்தையாரைத் தொடர்ந்து நான், தற்போது எனது குழந்தைகள் என மூன்றாவது தலைமுறையாக “ஸ்ரீமுருகன் ரேடியோ சைக்கிள் மார்ட்” கடையுடன் தொடர்பில் இருக்கிறோம்.

தற்போது ராமசாமிக்கவுண்டர் தனது 90-ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

ராமசாமிக்கவுண்டரின் இறப்புச் செய்தியை காலதாமதாமாக அறிய முடிந்தது. எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை இன்று அவரது வீட்டிற்குச் சென்று துக்கம் விசாரித்துவிட வேண்டும் என்ற ஆவலில், நண்பர்கள் வளநாடு சுப்பிரமணி, மிகாவேல் ஆகியோருடன் பயணப்பட்டு மணப்பாறை, தோகைமலை, பாளையம், அரவக்குறிச்சி, சின்னத்தாராபுரம் வழியாக இரவு 9 மணிவாக்கில் “பெரிய மதியாக் கூடலூரை”ச் சென்றடைந்தோம்.

சின்னத்தாராபுரத்தை நெருங்கும்போது மழைக்காற்று வீசுவதாக உணர்ந்து வியந்துபோனோம். அப்படி ஒரு குளிர்ச்சியான காற்று. தென்னந்தோப்புகளுக்கு இடையேயான ஒற்றை வழிச்சாலையில் நீண்டு செல்ல வேண்டியிருந்தது. தோட்டமும் தோட்டம் சார்ந்திருந்த வீடுமாக இருந்த இடத்தை அடைந்தோம்.

அதிகாலைவரை வெளியில் தூங்கிய ராமசாமிக்கவுண்டர் 4 மணி வாக்கில்தான் வீட்டிற்குள் சென்று படுத்து உறங்கினாராம். அதுவே நிரந்தரமான உறக்கமாக மாறிவிட்டதை 6 மணி வாக்கில்தான் பார்த்திருக்கிறார்கள். ராமசாமிக் கவுண்டரின் கடும் உழைப்பை சந்துரு அவர்கள் எங்களோடு நினைவுபடுத்தி பேசிக்கொண்டிருந்தார்.

ரமசாமிக்கவுண்டருக்கு சந்துருவின் தாயாரைத் தவிர மற்றொரு மகளும் மகனும் உள்ளனர். மகன் ஜெகதீசன் அவர்கள் ‘ஆசான் கலை அறிவியல் கல்லூரி’யை நிறுவி நடத்தி வருகிறார். அந்தக் கல்லூரின் முதலாவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்ற , அதே நாளில் தான் ராமசாமிக்கவுண்டர் இறந்திருக்கிறார்.

“ஸ்ரீமுருகன் ரோடியோ சைக்கிள் மார்ட்” நிறுவனத்திற்கு இது பொன்விழா ஆண்டு. எல்லோரும் வாழ்கிறோம் ஒரு சிலர்தான் வரலாறு படைக்கிறார்கள்.

 

-முகநூலில் தமிழ்மணி ஆறுமுகம் வழக்கறிஞர்

3

Leave A Reply

Your email address will not be published.