தஞ்சை மாவட்டத்தில் ரூ.62 லட்சம்-500 குத்துவிளக்குகள் பறிமுதல்.

0
Full Page

தஞ்சை மாவட்டத்தில் வாகன சோதனை தீவிரம்: ரூ.62 லட்சம்-500 குத்துவிளக்குகள் பறிமுதல்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று பறக்கும்படை தாசில்தார் திருஞானசுஜாதா தலைமையிலான குழுவினர் தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.61 லட்சம் இருந்தது.

அந்த பணம் குறித்து அதிகாரிகள் கேட்டபோது, தஞ்சையில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ஒரத்தநாட்டில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு கொண்டு செல்வதாக வாகனத்தில் வந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் பணக்கட்டுகளில் ஒரு நகைக்கடையின் சீல் இருந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் கேட்டபோது நகைக்கடையில் வசூலான பணத்தை வங்கி சார்பில் எடுத்துக்கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணங்களை அவர்கள் காட்டவில்லை. இதையடுத்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் உதவி செலவின பார்வையாளர் அர்ஜூன்ராஜிடம் ஒப்படைத்தனர். பின்னர் ரூ.61 லட்சம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அதேபோல் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த தெலுங்கன்குடிக்காடு அருகே தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி நடராஜன் தலைமையிலான அதிகாரிகளை கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை அதிகாரிகள் நிறுத்தி சோதனை நடத்தினர்.

Half page

இந்த சோதனையின்போது அந்த காரில் 2 வாள், 1 கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 பேர் பயணம் செய்தது தெரிய வந்தது. மேலும் காரில் ரூ.99 ஆயிரத்தை எடுத்து செல்வது தெரியவந்தது. அதற்கான ஆவணம் இல்லை. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் ரூ.99 ஆயிரம், ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் பயணம் செய்த 4 பேரையும் பிடித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காரில் வந்தவர்களில் ஒருவர் பட்டுக்கோட்டையை அடுத்த தம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் லோக நாதன்(வயது 47) என்பதும், இவர் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய உறுப்பினராக பதவியில் இருப்பதும் தெரிய வந்தது.

மேலும் அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும், அவருடன் காரில் வந்தவர்கள் அதே தம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்த பால்சாமி(45), பரக்கலக்கோட்டையை சேர்ந்த விஜய்(25), அதிராம்பட்டினத்தை சேர்ந்த கணேசன்(46) ஆகியோர் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதன், பால்சாமி, விஜய், கணேசன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.99 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் ஒரத்தநாடு தேர்தல் துணை தாசில்தார் செல்வக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இவர்கள் ஆயுதங்களுடன் காரில் எதற்காக சென்றனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாபநாசம் அருகே இரும்புதலை பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி மகாலட்சுமி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன், ஏட்டு ஆசைத்தம்பி ஆகியோரை கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தில் 210 கிலோ எடை கொண்ட 500 குத்து விளக்குகள் இருப்பது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.89 ஆயிரத்து 500 ஆகும்.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, காரைக்குடியில் இருந்து நாச்சியார்கோவிலுக்கு குத்து விளக்குகளை கொண்டு செல்வது தெரிய வந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் அதிகாரிகள் 500 குத்து விளக்குகளையும் பறிமுதல் செய்து பாபநாசம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி இளங்கோ, பாபநாசம் தாசில்தார் கண்ணன், தேர்தல் துணை தாசில்தார் செந்தில் குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் உரிய ஆவணங்களை சம்பந்தப் பட்டவர்கள் காட்டியதால் அதிகாரிகள், குத்துவிளக்குகளை திரும்ப ஒப்படைத்தனர். தஞ்சை மாவட்ட பகுதிகளில் நேற்று நடந்த வாகன சோதனையில் ரூ.61 லட்சத்து 99 ஆயிரம், 500 குத்து விளக்குகள், கார் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.