‘சூப்பர் டீலக்ஸ்’ படம் பார்த்தேன்.

0
1

‘சூப்பர் டீலக்ஸ்’ படம் பார்த்தேன்.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் எத்தனையோ நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் இருந்தாலும்…

ஆண்மைக்குறைவு, நரம்புதளர்ச்சி, குழந்தையின்மை, பைல்ஸ், பவுத்திரம், பால்வினை உள்ளிட்ட அந்தரங்க பிரச்சனைகளுக்காக மட்டுமே சிகிச்சை அளிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி, தொலைக்காட்சிகளில் 24 மணிநேரமும் குறிப்பாக மிட்நைட்டுகளில் பேசிக்கொண்டேஏஏஏ இருப்பார்கள் லாட்ஜ் லேகிய டுபாக்கூர் வைத்தியர்கள். அப்படிப்பட்ட, லாட்ஜ் லேகிய வைத்தியர் போல்தான் படம் முழுக்க பாலியல் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார் இயக்குனர் தியாகராஜன் ‘காம’ ராஜா.

2

கணவனுக்கு தெரியாமல் காதலனுடன் வீட்டில் இணைந்திருக்கும்போது திடீரென்று காதலன் இறந்துவிட்டால்?

பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் நண்பர்களுடன் ‘ஏ’ படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அந்தமாதிரி படத்தில் தனது அம்மாவே நடித்திருப்பதைப் பார்த்தால்?

அம்மாவை விட்டு ஓடிப்போன அப்பா பலவருடங்கள் கழித்து வருகிறார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும்போது அந்த அப்பா திருநங்கையாக மாறி திரும்பிவந்தால்?
என்னென்ன நடக்கும் என்பதுதான் கதை.

இதில், முதல் சம்பவம் கடந்த வருடம் சென்னை திருவொற்றியூரில் நடந்த உண்மைச் சம்பவம்தான். ஆனால், அச்சம்பத்தில் இருவரும் திருமணமாகாதவர்கள். காதலன் இறந்த துக்கம்… வேதனை… சுற்றுச்சூழல் கொடுத்த மன அழுத்தத்தின் காரணமாக அந்த இளம்பெண்ணும் தற்கொலை செய்துகொண்டார்.

அதுவும், இப்படத்தில் வரும் காட்சியில் இறந்துபோன காதலனுக்கு கடைசியாக வந்த போன்கால் காதலி சமந்தாவிடமிருந்து என்பதால் ஈஸியாக காவல்துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து விடும் என்பதுகூட தெரியாமல்
காதலனின் மரணத்தை மறைக்க ப்ளான் பண்ணும் காட்சிகளில் ரசிகர்களை மிகவும் ஈஸியாக ஏமாற்றுகிறார் இயக்குனர். அதுவும், அவர்களுடைய காரிலேயே பிணங்களை வைத்துவிட்டு கிளம்புகிறார்கள்.

சமந்தா காதலனுடன் அப்படி இருந்ததை கணவனிடம் விவரிக்கும் வார்த்தை உச்சரிப்பு, அதையே போலீஸிடமும் உச்சரிப்பது எதார்த்தமாக இல்லை.

ஆர்.சி. எனப்படும் பாரம்பரிய ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள்தான் சிலை வழிபாடு செய்துகொண்டிருப்பார்கள். இவர்கள், யாரும் உடல்நிலை சரியில்லையென்றால் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் ஜெபித்துக்கொண்டிருப்பதில்லை. வேலூர் சி.எம்.சி உள்ளிட்ட மருத்துவமனைகளை கொண்டுவந்து ஏழை எளிய மக்களுக்கு மருத்துவச் சேவை செய்ததே இவர்கள்தான்.

புதிதாக மதம் மாறிய பெந்தகோஸ்தே கிறிஸ்துவர்கள் உருவ வழிபாடு செய்வதில்லை. ஒரு அடையாளத்திற்காக சிலுவைக்கு முன்னால் ஜெபிப்பார்கள். பெரும்பாலும் வெள்ளைநிற உடை உடுத்தியிருப்பார்கள். ஏதாவது, ஒரு சபைக்குச்செல்வார்கள். இப்படி, பலப்பிரிவுகளில் ஒரு சிலர்தான் மருத்துவமனைக்கே செல்லாமல் எல்லாவற்றிற்கும் அற்புதம் நடக்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். இப்படி, அறியாமையில் இருப்பவர்கள் அனைத்து மதத்திலும் நிறைந்திருக்கிறார்கள்.

அப்படியிருக்க, மிஷ்கின் காதாப்பாத்திரத்தின்மூலம் ஒரு சிறுபான்மை மதத்தை இழிவுபடுத்திவிட்டு பஹத் ஃபாசில் கதாப்பாத்திரத்தின் மூலம், தேசப்பற்று போல் சாதிப்பற்று இருந்தால் என்னத் தவறு? என்று கேட்டு சாதிவெறியை ஊக்குவித்திருக்கிறார் இயக்குனர்.

அதுமட்டுமா? வக்கிரம் பிடித்த சப்- இன்ஸ்பெக்டர் பெயரும் கிறிஸ்துவ பெயரான பெர்லின்.

பாசிச பா.ஜ.கவுக்கு ஆதரவாக படம் எடுத்தால் சென்சார் போர்டில் ஈஸியாக அனுமதி கிடைத்துவிடுகிறது என்று நன்றாகவே அறிந்திருக்கிறார்கள் தற்போதைய இயக்குனர்கள்.

படத்தில் பாராட்டப்பட வேண்டியது விஜய்சேதுபதியின் திருநங்கை கதாப்பாத்திரம்தான். காவல்நிலையங்களில் சிக்கிக்கொள்ளும் சராசரி திருநங்கைகள் தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒருநாள் அப்படியொரு கொடூரத்தை நிச்சயம் அனுபவித்திருப்பார்கள். அவரைச்சுற்றி நடக்கும் காட்சிகள் அனைத்தும் நெகிழ வைக்கின்றன. ஆனால், டீன் ஏஜ் பருவத்தை அடையத்தொடங்கும்போதே தான் ஆண் இல்லை… ஒரு பெண் என்பதை முழுமையாக உணர ஆரம்பித்துவிடுவார்கள் திருநங்கைகள். அதனால், அவர்களுக்கு ஆண்கள் மீதுதான் ஈர்ப்பு ஏற்படும். திருமணமாகும்வரை தன்னை எப்படி உணராமல் இருந்தார் என்பது கேள்விக்குறி. ஆனால், குடும்ப நிர்பந்தத்தின் காரணாமாக திருமணம் செய்துகொள்வதுமுண்டு. திருநங்கைகளின் வாழ்வியல் வலியை விஜய்சேதுபதியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளதற்கு பாராட்டுகள்!

தியாகராஜன் குமாரராஜா சேலம் சித்த வைத்திய சாலை சிவராஜிடம் உதவியாளராக இருந்திருப்பாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. எந்தக் காரணத்தைக்கொண்டும் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழைத்தவிர வேறு சான்றிதழ் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக ரொம்பவே சிரமப்பட்டு படம் முழுக்க ஆபாச வார்த்தைகளை அள்ளிக்கொட்டி, மெனக்கட்டிருக்கிறார்.

அதுவும், குழந்தைகள்… பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் சிறுவர்கள் ‘ஏ’ படம் பார்ப்பதை மட்டுமே மையப்படுத்தியும் பெண்களைக் கண்டால் ஏங்குவது போலவும் எடுத்து தவறான பாதைக்குத்தான் படத்தின்வழி கொண்டு செல்கிறார்.

பெண்களை இழிவுபடுத்தும் “தே…” போன்ற வசனங்களை அதிகம் வைத்து, தான் எப்படிப்பட்ட இயக்குனர் என்பதற்கு “அவரே சாட்சி”.

எஸ்.ஜே. சூர்யா, சாமி போன்ற இயக்குனர்கள் எப்படி காணாமல் போனார்களோ, அப்படித்தான் பாலியல் சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர்கள் தொடர்ந்து நீடிக்க முடியாது. படம் சுமார் டீலக்ஸ்தான். ஆஹோ… ஓஹோ என்று கொண்டாடும் அளவுக்கு சூப்பர் டீலக்ஸ் இல்லை!

” டிஸ்லைக்ஸ்”!!!

– வினி சர்பனா

3

Leave A Reply

Your email address will not be published.