வரிசையாக விலகும் நிர்வாகிகள்: வருத்தத்தில் கமல்

0
Business trichy

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கவுள்ளது. தேர்தலைச் சந்திக்க திமுக, அதிமுக என இரு கட்சிகளின் தலைமையில் அணி அமைந்துள்ள நிலையில், தனித்துப் போட்டியிடவுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இரண்டு கட்டமாக கட்சியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்திலிருந்து அதன் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகவும், கடலூர் தொகுதி வேட்பாளராகவும் போட்டியிட இருந்த நேச்சுரல்ஸ் நிறுவனத் தலைவர் சி.கே.குமரவேல் நேற்று முன்தினம் கட்சியிலிருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து அக்கட்சியின் கடலூர் வடக்கு மண்டல பொறுப்பாளர் வெங்கடேஷ், கடலூர் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் நவீன் ஆகியோரும் கட்சியிலிருந்து விலகினார். முன்னதாக, கட்சியின் பொருளாளர் சுகா பதவி விலகிவிட்டதாகவும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலாவிவருகிறது.

loan point
web designer

கட்சி தொடங்கி ஓராண்டு முடிந்த நிலையில் இப்படி நிர்வாகிகள் வரிசையாகப் பதவி விலகி வருவதால், கமல் கடும் வருத்தத்தில் இருக்கிறாராம். தனது வருத்தத்தை நெருக்கமானவர்களிடத்திலும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் வருத்தத்தைச் சரிகட்டும் விதமாக இந்தியக் குடியரசு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது மக்கள் நீதி மய்யம்.

 

nammalvar

சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்துக்கு சென்ற செ.கு.தமிழரசன், கமல்ஹாசனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு இந்தியக் குடியரசு கட்சிக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், மூன்று சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதிகளும் ஒதுக்கப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். பின்னர் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

முதலில் பேசிய தமிழரசன், “அம்பேத்கரியவாதியான நாங்கள் பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம். திமுக கூட்டணியானது சந்தர்ப்பவாதக் கூட்டணியாக அமைந்துள்ளது. தமிழக மக்கள் மாற்று அரசியலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். அதற்காகவே மக்களவைத் தேர்தல், 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

அப்போது குமரவேல் ராஜினாமா தொடர்பாக கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், “அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவர் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வதற்குக் கீழ் மட்டத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். மேலும், அவர் என் மீது குற்றச்சாட்டு வைத்தால் அது குறித்து பதிலளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.