15 வருடங்களுக்கு முன்னால் ஜோதிமணி

0
Business trichy

காலநினைவை பத்துப்பதினைந்து வருடங்கள் பின்சுழற்றிப் பார்க்கிறேன். நினைவு சரியான ஞாபகங்களாக எடுத்துத் தருகிறது. அப்பொழுது, முருகானந்தமும் நானும் சேர்த்து ஜோதிமணி அக்கா வீட்டிற்கு முதன்முறையாக சென்றிருந்தோம். பொழுதுசாயத் துவங்கும் மாலை நேரம் அது. வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில், அக்கா ஒரு தொலைபேசி அழைப்பில் மும்முரமாக உரையாடிக் கொண்டிருந்தார். பேசிமுடித்து வந்தபிறகு முருகானந்திடம் “அந்த தண்ணீ பிரச்சன தான். இன்னும் தீரல. வெவ்வேற வடிவத்துல பெருசா போய்ட்டே இருக்கு. அதான் நல்லகண்ணு அய்யாட்ட பேசிட்டிருந்தேன்” எனச் சொல்லி அய்யாவுடன் பேசியதை எங்களோடு பகிர்ந்துகொண்டார். அன்று அவ்வாறு நிறைவாய் முடிந்தது அச்சந்திப்பு.

அதன்பின், கீரனூர் சமரச சன்மார்க்க குருகுலத்தில். வள்ளலாரின் மொழிதல்களைப் பின்பற்றி இயங்குகிற சின்னதொரு சபை அல்லது மடம். அந்த ஆசிரமத்தில் இருந்த பெரும் ஆலமரத்தின் கீழே, ஓடுகள் வேய்ந்த கட்டிட வகுப்பறையோடு ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. தொண்ணூறு வயதுகடந்த குலசை குப்புசாமி அய்யா, அக்கல்விக்கூடத்தை அங்கு பொறுப்பேற்று நடத்திவந்தார். அப்பள்ளியிலேயே படித்து படிப்புமுடிந்து வெளியில் வந்த ஒருத்தரே, அப்பள்ளிக்குத் தலைமையாசிரியராகவும் இருந்தார்.

அந்தப் பள்ளிக்கூடத்தில் வைத்துதான் ‘குக்கூ குழந்தைகள் இயக்கம்’ என்ற கருத்துரு செயலாக முதல்துளிர்விட்டது. அந்த முதல்நிகழ்வுக்கு ஜோதிமணி அக்காவும் வந்திருந்தார். பள்ளிக்கூடத்தின் சமையலறை நுழைவுச்சுவற்றில் பழைய நாட்காட்டி அட்டையொன்று மாட்டப்பட்டிருந்தது. தூசு படிந்திருந்த அதில் மங்கலாக ஒரு பின்னுருவம் தெரிந்தது. இருவிரல்களால் அத்தூசியினை துடைத்தகற்ற மெல்லமெல்ல மங்கல்படிவுகள் நீங்கி உள்ளிருக்கும் படம் வெளித்தோன்றியது. அது காந்தி! அப்புகைப்படத்தைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, பின் பேசியபடி எனது கைகளை பிடித்துக்கொண்டே நிகழ்விடத்துக்கு வந்தார்.

loan point

இங்கு ஒரு நூலகம் துவங்கலாம் என்கிற நம்மெண்ணத்தை அக்காவிடம் சொல்ல அவரும், “நிச்சயம் நூலகம் ஆரம்பிக்கலாம்” என்றுரைத்து அடுத்தடுத்து அங்கு என்னென்ன வேலைகள் முன்னெடுக்கலாம் என்பதனைப்பற்றியும் வெகுநேரம் சொல்லிக்கொண்டிருந்தார். அடுத்தப் பதினைந்து நாட்களில், முதன்முதலாக குக்கூ நூலகம் அப்பள்ளிக்கூடத்தில் துவங்கப்பட்டது. பழங்குடிமக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த வி.பி.குணசேகரன் அய்யாவுக்கு குக்கூவின் முதல் ‘முகம் விருது’ அளிக்கப்பட்டது அங்குவைத்துதான். குக்கூவின் முதற்துவக்க நிகழ்வினை குத்துவிளக்கேற்றித் துவங்கிவைத்தது சசிரேகா, ஜோதிமணி அக்கா இருவரும்தான்.

nammalvar

அதன்பிறகு, சின்னச்சின்னதான உரையாடல்கள் மற்றும் சந்திப்புகள் என பழக்ககாலம் நீண்டு நகர்ந்தது. அக்காலகட்டத்தில், ஈழப்போராட்டம் அதன் உச்சநிலையை எட்டி பதட்டம் நிலவியிருந்தது. எங்கள் எல்லோருக்கும் மிக நெருக்கமான நண்பர் பெருந்துறை ராம். பொறியியல் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த துடிப்பிளைஞர் அவர். கல்விப்படிப்பு மட்டுமல்லாது, அதிதீவிரமாக மக்கள் சிந்தனைப் பேரவையோடும் அதன் தோழர்களோடும் கூட்டிணைந்து இயங்கி முழங்கிக்கொண்டிருந்தார். இளைஞர்கள் கூட்டத்தில் பேசுவதும், இளையவர்களோடு இயங்குவதும் அவருக்கு வெகுப் பிடித்தமானது.

தற்போது நாம் தமிழர் கட்சியில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் ராஜீவ் காந்தி, கலியாண சந்தரம் இவர்களோடு நானும் சேர்ந்துகொண்டு அக்காலகட்டத்தில் பேச்சுக்கூட்டங்களுக்கு நிறையமுறை செல்வதுண்டு. அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருப்பேன். அப்படியே, மெல்லமெல்ல ஈழத்தீ தமிழகமெங்கும் அகம்பற்ற ஆரம்பித்திருந்த காலகட்டமாக அது மாறியது. ஈழப்போராட்டத்துக்கான மாணவர்கள் கூட்டமைப்புகள் நிறைய உருவாகின. அதில் ஒரு குழுவுக்கான தலைமைப்பொறுப்பு ராமிடம் ஒப்படைக்கப்பட்டது. ராம், வெவ்வேறு அரசியல் கருத்துருக்களைச் சுமந்த அர்த்த ஆழமான நிறைய கட்டுரைகளை எழுதுகிறவர்.

அச்சமயத்தில், கோயம்புத்தூரில் நடந்த கண்டனக்கூட்டம் ஒன்றில், “எனக்கு ரெண்டு தோட்டாக்கள் கிடைச்சதுனா, நான் ராஜபக்‌ஷேவைக் கொல்லமாட்டேன். கருணாநிதியையும் சோனியா காந்தியையும்தான் சுட்டுக்கொள்ளுவேன்” என உக்கிரமானதொரு பேச்சை முன்வைத்தார். உணர்ச்சிக்கொந்தளிப்பான பேச்சாக அதுவிருந்தது. அதன்பிறகு இரண்டொரு நாட்களில் ராமுடைய பேச்சின் வீச்சும், அக்கூட்டம் ஏற்படுத்தியத் தாக்கமும் வெவ்வேறு மட்டங்களில் அதிர்வுகளையும் சலனங்களையும் உண்டாக்கியது. ராமையும் சேர்த்து மேலும் சில நண்பர்களையும் காவல்துறையினர் கைதுசெய்தார்கள். தேசியப்பாதுகாப்புச் சட்டம் அவர்கள்மீது பாயும் அபாயச்சூழல் இருந்தது.

ராமின் குடும்பம் அடிப்படையில் மிகவும் ஏழ்மையானது. ராம் படித்துமுடித்து வெளியில் வந்தால்தான் அடுத்தகட்ட வாழ்வியலை நோக்கி அக்குடும்பம் நகரும். கடன்சுமை பெருகி நின்றிருந்த சூழலில், கல்விக்கடன் பெற்றே ராம் படித்துவந்தார். ராம் கைதானவுடன் நண்பர்கள் குடும்பவுறவுகள் அனைவருக்கும் பதட்டமுருவானது. ஒருவேளை வழக்கு உறுதியானால், சிறையைவிட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு அச்சட்டத்தால் தண்டனைகள் வழங்கப்படும். அச்சத்திலும் பதட்டத்திலும் எங்கெங்கோ முயற்சி செய்தோம் ராமை விடுவிக்க. ஆனால் எல்லாமே இக்கட்டானதாகவே இருந்தது. நேரம் நகர்ந்து நகர்ந்து அன்று பின்னிரவு தாண்டியது.

என்னசெய்வதென்றே தெரியாமல், முருகானந்தம் Muruganantham Ramasamy கைபேசியிலிருந்து ஒரு குறுஞ்செய்தியை அக்காவுக்கு அனுப்பினோம். அந்நேரத்திலும் அக்கா உடனே அழைத்து “என்னடா என்னாச்சு?” என்று வினவ “என்ன பண்றதுன்னே தெரியலகா” எனச்சொல்லி பதட்டப்பட “சரிடா, சரிடா பாத்துக்கலாம். நான் முயற்சி பண்றேன். நாளைக்கு ஒரு அரைநாள் நேரங்கொடு. ஏதாச்சும் பண்ணலாம். எனக்கே என்ன செய்யன்னு புரியல” என்று நம்பிக்கைச் சொற்களை எங்களுக்குத் தந்தார். ஆனால், அவர் குரலிலும் ஒரு பதட்டமிருந்தது. அடுத்தடுத்த நாட்களில் சூழல் வெவ்வேறாக சாதகப்பட்டது. ராம் வழக்கு விசாரணைக்கு முன்பாகவே காவல்துறையால் விடுதலை செய்யப்பட்டார். தேசியப்பாதுகாப்புச் சட்டம் பாயாமல் ராமின் விடுதலைக்கு முழுமையான பின்காரணமாக இருந்தது ஜோதிமணி அக்காதான்.

விடுதலையாகி வெளிவந்த ராமிடம் அக்கா ஒன்றை அறிவுறுத்தியது எனக்கு நினைவிருக்கிறது. “ராம்… உன்னோட துறைசார் அறிவுல நிபுணத்துவம் பெற்றவனா நீ மாறு. மானுடவியல்ல நல்ல ஆய்வுமாணவனா நீ இருக்க… சமூகப்பிரச்சனைகள சமூகவிஞ்ஞானத்தோட அணுகிற மனநிலை உனக்கிருக்கு. அந்தப்பிரச்சனைகள உலகளாவிய கட்டுரையா மாத்து. அத விவாதத்துக்கு உட்படுத்து. அறிவுக்கூர்மய வளர்த்துக்க. நிறைய படி, கட்டுரை எழுது. பல்கலைக்கழகங்கள் மாதிரியான இடங்கள்ல பிரச்சனைகளின் அடியாழத்தப் பேசு. எந்தத் தளத்துல ஒலிச்சா உன்னோட குரல் செயலாகுமோ அங்கநின்னு சொல்லு”.

web designer

காலங்கள் நகர நகர, அச்சம்பவத்துக்குப்பின் ராமுடைய நிலை வேறொன்றாக மாறியது. இன்று… ராமின் கட்டுரைகள் மிகமுக்கிய ஆய்வேடுகளிலும் வெளிவருகிறது, நிறைய பல்கலைக்கழகங்களில் விவாதிக்கப்படுகிறது. திருமணமாகி, ஒரு குழந்தையுடன் ராம் தன் சிந்தனைகளை வெவ்வேறு தளங்களில் நிலைப்படுத்தி வருகிறார். ஆனாலும், காங்கிரஸ் குறித்த முழுக்க எதிரான கருத்துப்போக்கே இன்றளவும் ராமுக்கிருக்கிறது. ஆனாலும் அவரும் ஜோதிமணி அக்காவும் மாறாத நட்போடேயே இன்றவும் நீடிக்கிறார்கள்; உரையாடுகிறார்கள். இருவருறவிலும் சிறிதும் காழ்ப்பு கலக்கவில்லை.

காந்தியைப்பற்றி அக்கா சொல்வதுண்டு, “காந்தியப்பத்தி எவ்ளோவோ விமர்சனங்கள வைக்கலாம். ஆனா அதுக்கான ஸ்பேச அவர்தான் உருவாக்கிக் கொடுத்திருக்காரு”. இந்த மனநிலைதான் அக்காவைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் நெஞ்செழுகிறது. ஏதிர்மறையான கருத்தியல்வழி ஒருத்தன் உக்கிரமாகத் தாக்கியபோதிலும், ” அவன் கோபத்துல இருக்க நியாயத்த நாம புரிஞ்சுக்கனும்” என்று நினைக்கிற முதிர்ச்சியெல்லாம் அக்காவை தனித்தொரு ஆளுமையாகவே எனக்குணர்த்தியது.

“மத்த ஊர்கள்ல சாதி வெளிப்படையானதுய்யா. ஆனா ஈரோடு கோயம்புத்தூர்ல சாதி ரொம்ப நுட்பமானதுய்யா…” என நம்மாழ்வார் கொங்குப்பகுதியில் நிலவும் உள்மன சாதியைப்பற்றி அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். அப்படி சாதி மனம்சூழ்ந்த தன் பகுதியில் தனது சாதியினராலேயே அக்கா தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். அங்கிருக்கும் தலித் மக்களுக்குத் தண்ணீர் பெற்றுத்தருவதற்கு அக்கா எடுத்த முன்னெடுப்புகளும் போராட்டங்களும் அதன்வழி நீரைப் பெற்றுத்தந்ததும் எளியமக்களுக்கான ஆளாக அக்காவை முகவரிப்படுத்தியது.

தண்ணீர் சார்ந்த தன் கண்ணோட்டங்களையும் களமாற்றிய அனுபவங்களையும் ஒன்றிணைத்து ‘நீர் பிறக்கும் முன்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். எவ்வளவு எழுத்து வேண்டுமானாலும் உலகில் படைக்கப்படலாம். ஆனால், தாகந்தீர்க்கிற ஒரு செயலின்முன் எல்லா எழுத்துக்களும் ஒன்றுமில்லாமலாகிறது. களத்தில்நின்று மக்களை செயலோடு அணைத்துக்கொள்ளும் மனப்போக்கு அக்காவுடையது.

ஒருசமயம், கொடைக்கானலில் இயங்கிவந்த ஒரு மாற்றுப்பள்ளிக்கு மிகுந்த நெருக்கடி உண்டானது. மதுரையிலிருக்கும் அரசியல் பிரமுகரால் கைப்பற்றக்கூடிய அளவுக்கு அப்பள்ளிக்கூடத்தின் நிலை மோசமானது. வேறுவழியற்று அக்காவைச் சந்தித்து தகவலைத் தெரியப்படுத்தினோம். அந்நேரத்தில் தான், ராகுல் காந்தியை அக்கா நேரில் சந்திக்க வைத்தார். சோனியா காந்தியின் உதவியாளர்வரை இத்தகவல் சென்றடைந்த பிறகு, இருவாரங்கள் கழித்து அப்பிரச்சனை சுவடற்று விலகியது. இன்று அப்பள்ளியில் பயில்கிற அத்தனைக்குழந்தைகளும் கல்வியைத்தொடர்வதற்கு… அக்காவுடைய ஒற்றைக்கைபேசி அழைப்புதான் காரணமாக அமைந்தது.

சிறுவயதிலேயே தந்தையை இழந்து, தாயின் அன்பாலேயே வளர்த்தெடுக்கப்பட்டவர் ஜோதிமணி அக்கா. லட்சுமண அய்யரை, கிருஷ்ணம்மாள் ஜெகநாதனை, சுந்தர ராமசாமியை, ஞாநியை… மானசீக ஆசான்களாக வைத்து மகிழ்ந்துகொண்டாடும் ஆளாகவும் அக்கா எப்போதுமிருக்கிறார். சாதாரண மனிதனால் எவ்வித மனத்தடையுமின்றி அணுகக்கூடிய ஆளுமையாகவும் அக்கா தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தும்பி சிறுவரிதழ் துவங்கிய காலகட்டத்தில் அலைபேசிக்கு அழைத்து அக்கா சொன்ன வாழ்த்து, மனதுச்சொற்களாகத் தேங்கிக்கிடக்கிறது. அக்கா, தேசிய அளவில் பொறுப்புபெற்று ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகியிருந்த காலமது. அதிகாரத்தின் எவ்வித நிழல்சாயலும் இல்லாமல் அக்காவின் பேச்சும் அன்பும் இருதயத்திலிருந்து சுரந்தது.

ஏதோவொருவகையில், கர்நாடக மாநிலம் மேல்கோட்டை மலைப்பகுதியில் இருக்கும் நூற்றியெட்டு நீர்க்குளங்களைப் பராமரித்து, புணரமைப்பு செய்கிற நண்பர்களும் மாணவர்களும் இணைந்து… இச்சமயத்தில் ‘நீர் பிறக்கும் முன்’ புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிகளில் மொழிபெயர்க்கத் துவங்கியிருக்கிறார்கள். அன்று நீங்கள்செய்த களச்செயல்தான் இன்று தூரங்கள்தாண்டி வெளிச்சமாக மாறுகிறது. உள்ளார்ந்த பரிதவிப்போடு நீங்கள் பணிசெய்த ஈடுபாடுதான், மொழிதெரியாத ஒரு மலைநிலத்தில் அறிவுப்பரப்பில் திறப்பை நிகழ்த்துகிறது. நற்சொல் அனைத்தும் நம்பிக்கையாக மாறுகிறது.

கிருஷ்ணம்மாள் ஜெகநாதனோடு நடந்துதிரிந்த என் அப்புச்சி அய்யாவு போன்று அமரராய் மாறிப்போன எல்லா மனிதர்களின் மானுட அன்பும் செயல்வழி அகவலிமையாக உங்களை வந்தடையட்டும் என பிரார்த்திக்கிறேன். அனைத்தும் நல்வழிப்படும்.

 

-நன்றி- சிவராஜ்

IAS academy

Leave A Reply

Your email address will not be published.