அறிவோம் தொல்லியல்-9 பயணங்கள் முடிவதில்லை…

0
full

கரூர்-திருச்சி சாலையில் மாயனூர் என்ற ஊர் உள்ளது. இங்கு மதுக்கரை செல்லாண்டியம்மன் எனும் தெய்வம் இப்பகுதி மக்களிடையே  பிரசித்தி பெற்றது. கொங்கு மண்டல சதகம், மதுக்கரையை மதிற்கரை என கூறுகிறது. இப்பகுதியை கொங்கின் கிழக்கு எல்லையாக குறிக்கிறது.

“மதிற்கரை கிட்டிசை தெற்கு பழனி மதிகுடக்குக்

கதித்துவ வெள்ளிமலை பெரும்பாலை கவின் வடக்கு

poster

விதித்துள்ள நான்கெல்லை சுழ வளமுற்று மேவிவிண்ணோர்

மதித்திட வாழ்வு தழைத்திடு நீள் கொங்குமண்டலமே”

இச்சதகம் இவ்வூரையே சேர, சோழ, பாண்டியரின் எல்லை என கூறுகிறது!  மய்யனூர் என்பதே மருவி மாயனூர் ஆனதாகவும் கூறப்படுகிறது. மேலும் மதிற்கரையை பற்றி அருகேயுள்ள அய்யர்மலை, சேந்தமங்கலம் கோவில்களில் கல்வெட்டு குறிப்புள்ளது!  இச்சதகம் காலத்தால் பிற்ப்பட்டது என்றாலும், இதில் உள்ள தகவல்களை மெய்ப்பிக்க சான்றுகள் ஆங்காங்கே பரவி கிடக்கிறது.

சங்ககாலம் தொட்டே கருவூர் வஞ்சி(கரூர்) பெருநகராய் திகழ்ந்ததை பல இலக்கிய, கல்வெட்டு சான்றுகள், பழங்காசுகள் வாயிலாக நாம் அறியலாம்.

இலக்கியம் சொல்லும் கருவூர்:

நமக்கு கிடைத்த இலக்கியத்தின் வாயிலாக சேரரின் முதல் மன்னனாக “கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை” என்பவரை அறிகிறோம். இவரது காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு என கணிக்கப்படுகிறது. இவருக்குபின்  சேரமான் அந்துவன் இரும்பொறை இவர் தன் புலவர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவருடன் மாடத்தில் அமர்ந்திருந்தான் அச்சமயம் முடித்தலை கோப்பெருநற்கிள்ளி என்ற சோழமன்னன் யானையில் வருகிறார். யானை மதம் பிடித்து வருவதை தன்னை தாக்க வருவதாக தவறாய் புரிந்து கொள்கிறான், பின் புலவர் தவறை எடுத்துரைப்பதாய் புறப்பாட்டில் வருகிறது!

சேரமான் பெருஞ்சோற்று உதியன் யவனரை வெற்றி கொண்டவன் என பதிற்றுப்பத்து மூலம் அறியலாம்.

தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இருபெரும் வேந்தரையும், வேளிரையும் அவர்களது தலைநகரில் வென்ற குறிப்பு புறநானூற்றில் வருகிறது!  அச்சமயம் கருவூரில் ஆண்டவன் சேரமான் யானைகட்சேய் மாந்தரம் சேரலிரும்பொறை ஆவான். சோழன் நலங்கிள்ளியும் கருவூரை கைப்பற்றியுள்ளான். கோவூர்கிழார் “பூவா வஞ்சியையும் தருகுபவன்” என கூறுகிறார். பூவாவஞ்சி என்பது கருவூருக்கு புறம்படி என கருதப்படுகிறது.

half 2

சேரன் செங்குட்டுவன் கரூரரையே தலைநகராய் கொண்டவன், சிலப்பதிகாரம் இதனை,

“வாழியரோ வாழி வருபுலல்

நீர் ஆண்பொருநை

சூழ்தரும் வஞ்சியார் கோமான்

தன் தொல்குலமே”

என ஆண்பொருநை நதிக்கரை வஞ்சியை கூறுகிறது!

 

அகநானூறு பாடல் ஒன்றும்,

“கடும்பகட்டு யானைநெடுந்தேர் கோதை

திருமாவியல் நகர் கருவூர் முன்துறை”

பதிற்றுப்பத்து வாயிலாக சேரர்களை “அந்துவன்”, “உதியன்” என வழியினராக பிரிக்கலாம். சேரநாட்டுப்பகுதியில் கிடைத்த மட்பாண்டங்களில் இப்பெயரையுடைய தமிழி எழுத்துகள் நிறைய கிடைக்கிறது!

புறநானூற்றில் 17 சேரர்கள் பற்றிய குறிப்புள்ளது. பதிற்றுப்பத்தையும் சேர்த்தால் மொத்தம் 22 சேரமன்னர்கள் குறிப்புகள் கிடைக்கிறது, இவர்கள் அனைவரும் கரூவூரை தலைநகராய் கொண்டு ஆண்டவர்களே, அமராவதி ஆற்றின் வளமையாலும், இயற்கையாய் கிடைக்கும் அரியவகை கற்களாலும் இந்நகரம் மட்டுமின்றி சேரதேசமே செல்வம் கொழித்தது, ஆகவே இப்பகுதியில் நிறைய ரோமானியர்களின் வருகையும் இருந்நது. மலைவளம் மிகுந்து காணப்பட்டதால் இயல்பிலேயே “சேரநாடு வேழமுடைத்து” எனும் சான்றோர் சொல்லைப் பெற்றது. கிரேக்க அறிஞர் தாலமி “கொரேவூரா” என்று கருவூரை குறிப்பிட்டுள்ளார்.

வரும் வாரம் கருவூரை குறித்த செப்பேட்டு குறிப்புகளையும், சங்ககால நீங்கலாக பிற இலக்கிய குறிப்புகள், தமிழி கல்வெட்டில் வரும் கருவூர், மற்றும் சேரமன்னர்கள் பற்றி அடுத்த இதழில்  காண்போம்.

half 1

Leave A Reply

Your email address will not be published.