ஆதிமகள் 11

0
1 full

கரணைப்பற்றி கேட்ட காயத்ரிக்கு மேற்கொண்டு என்ன பேசுவது, என்ன கேட்பது என்று காயத்ரியின் புத்திக்கு புலப்படவில்லை. தான் இந்த நேரத்தில் எடுத்ததும் இதைப்பற்றி பேசியிருக்க கூடாதோ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, காயத்ரியின் கையில் இருந்த போன் மணி அடித்தது. போனை கவனித்தாள். அப்பாதான் போன் செய்தார். தான் அப்பாவிற்கு போன் செய்யாமல் போனதற்கு தனக்கு தானே வேகமாக தலையில் தட்டிக்கொண்டு, போனை ஆன் செய்து பேசினாள். அவள் அப்பாவிற்கு போன் செய்ய மறந்து போனது நினைவுக்கு வந்தது.

காயத்ரி தலையில் தன்னை தட்டிக் கொண்டது விசாலிக்கு காயத்ரி தனது அப்பாவிடம் பேச சலிப்பை வெளிப்படுத்தியது போல விசாலி தவறாக புரிந்து கொண்டாள்.

போனை கொடு, நான் ‘‘சண்முகத்திடம் பேசிடுறேன்’’ என காயத்ரியிடம் போனை வாங்கிய விசாலி, சண்முகத்திடம் “அவர்கள் காவிரி பாலத்தில் இருப்பதையும்,  இன்னும் சிறிது நேரத்தில் நானே காயத்ரியை அழைத்து வந்து வீட்டில் விடுவதாகவும் கூறினாள்’’. பின்பு போனை வாங்கிய காயத்ரி, ‘’சரிப்பா வச்சிடறேன்’’ எனக் கூறி போனை கட் செய்தாள்.

2 full

விசாலி நிறைய பேசுவாள் என எதிர்பார்த்தாள் காயத்ரி. அப்படி எதுவும் பேசிவிடவில்லை. செல்ல குழந்தையை, கைபிடித்து கடைவீதிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்களின் மனோநிலையில் விசாலியும், குழந்தையின் மனோநிலையில் தானும் இருப்பதாக காயத்ரிக்கு தோன்றியது. மீண்டும் யார் பேச்சை ஆரம்பிப்பது என்ற சலனம் சூழலை இறுக்கமாக்கியது.

விசாலியே மீண்டும் பேச்சை துவக்கினாள். “கரணுக்கு ஐந்து வயது இருக்கும்போதே அவனது தாய் அவனை தவிக்கவிட்டு இறந்து போனாள். அதன்பிறகு நான் கோகுல கிருஷ்ணனுக்கு மனைவியானது ஒரு சுவாரஸ்யம்” என்று பேச்சை நிறுத்தினாள்.

நிலவொளி, வீசும் காற்று, சுற்றிலும் நிற்கும் மனிதர்கள், இரைந்தோடும் வாகனங்கள், சுண்டல், கடலை, சுக்கு மல்லி காபி, காதலர்களின் கிசுகிசு, தோழர்களின் விரக்தி, நண்பர்களின் வெடிச்சிரிப்பு, தும்மலை ஏற்படுத்தும் வெட்டிய மாங்காயில் தூவும் மிளகாய்பொடி, கையேந்தும் குழந்தையுடன் பிச்சை கேட்டு நடந்து வரும் தாய், ஓயாத ஆம்புலன்ஸ் சத்தம், அங்குமிங்குமாய் நடமாடும் காக்கிகள் வாகனத்தை ஒழுங்குபடுத்தும் பெண் போலீஸ், சிதறியோடும் குழந்தைகளை கைப்பற்றும் பெற்றோர்கள், உலக நடப்புகளின் விமர்சன பேச்சு, அரசியல் சத்தம், குடும்ப பஞ்சாயத்து, தனித்தனியே நிற்கும், ஆண், பெண் என எதுவுமே அவர்கள் இருவரையும் பாதிக்கவில்லை.

காயத்ரிக்கு விசாலியை பற்றியும், கரணின் குடும்ப பின்னணி பற்றியும் தெரிந்து கொள்ள பெரும் ஆவல் ஏற்பட்டது. இன்று இந்த விசயங்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அங்கிருந்து போவதில்லை என்று தனக்குத்தானே முடிவு செய்து கொண்டாள் காயத்ரி.

நேரம் கடந்து கொண்டிருந்தது. கூட்டம் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்தது. ஒரு குழந்தையின் “அழுகுரல்”, காயத்ரி, விசாலி இருவரையுமே நிகழ்விடத்திற்கு திரும்பச் செய்தது. இருவரும் பாலத்தின் திண்டில் சாய்ந்தவாறு சாலையின் பக்கம் திரும்பினர். வாகனங்கள் குறைந்தபாடில்லாமல் வெளிச்ச வெள்ளத்தில் வேகமாகவும் மெதுவாகவும் நீந்தி சென்றன. விசாலிக்கு மலைக்கோட்டை உச்சியின் வெளிச்சம் கவனத்தை திசை திருப்பியது. காயத்ரியை பார்த்தாள்.

காயத்ரியிடம் ‘’ஏதாவது சாப்பிடலாமா’’ என கேட்டாள். ‘’வேண்டாம்’’ என்றாள் காயத்ரி. எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாள் காயத்ரி. அதற்கு அவசியமே இல்லாமல் விசாலியே பேசத் தொடங்கினாள்.

“இப்ப நான் இருக்கிற மனநிலையில் உன்னிடம் பேசுறதில என் மனசுக்கு ஆறுதல் கிடைக்கும்னு நம்புறேன் காயத்ரி,”  “கோகுல கிருஷ்ணன் இல்லாத வாழ்க்கைய என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியல, இனி நான் எப்படி வாழப்போறேன். அப்படின்னெல்லாம் நான் பொய் சொல்ல விரும்பல. இருபத்திரெண்டு வருடங்களுக்கு முன்பாக ஜி.கே.வை (கோகுல கிருஷ்ணனை பெயர் சுருக்கி அழைத்தாள்) நான் எந்த மனோநிலையில் சந்தித்தேனோ அதே மனோநிலையில் தான் இன்றுவரை நான் வாழ்ந்திட்டுருக்கேன். என்னுடைய சுதந்திரம், ஆசை, உணர்வுகள்னு எதிலையுமே ஜி.கே. குறுக்கிட்டதில்லை. அதனால் தானோ என்னவோ ஒரு நண்பனை பிரிந்த சோகத்தை தவிர என்னால எனக்குள்ள வேறெதையும் உணர முடியல. என்னையும், ஜி.கே.வையும் தெரிஞ்சவுங்க கூட இவ இரண்டாவது பெண்டாட்டி தானே அதனாலதானோ என்னவோ இவ கலங்கலைன்னு கூட தப்பா பேசுவாங்க.” என இடைவெளி விட்டவள், காயத்ரியின் முகம் பார்க்காமல் மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

‘’நான் என்னோட மார்ல அடிச்சுக்கிட்டு, தலைவிரிச்சு போட்டுக்கிட்டு கண்ணீர் விட்டு ஜி.கே உடம்புல விழுந்து புரண்டு அழல, ஏன்னா எனக்கு அழுகையே வரல காயத்ரி, திடீர்னு எனக்கு பயமாக் கூட இருந்திச்சு. அய்யோ என்னுடைய ஜி.கே என்னை விட்டு போயிட்டாரு. எனக்கு பதறலயே, துடிக்கலையே. ஒரு அதிர்ச்சியை தவிர வேற எதையும் நான் உணரலயே என்ன காரணம்னு நானும் தேடி தேடி பார்த்தேன்’’.

‘’அவர் என்னை பாசமா நல்லா பாத்திக்கிட்டாருன்றத தாண்டி, நமக்கு ஒரே மகன்தான். அது கரண்தான். இனி உனக்கும் எனக்குமான குழந்தை. நமக்கு வேணாம்னு என்கிட்ட சத்தியம் வாங்கிட்டுதான் என் கழுத்தில தாலியே கட்டினாரு. எனக்கு அப்ப ஜி.கேவ கல்யாணம் பண்ற உத்வேகத்துல உணர்ச்சிவசப்பட்டு சத்தியம் பண்ணிட்டாலும் போகப் போக ஒவ்வொரு நாளும் எனக்குள்ளேயே வளர்ந்து வெளிப்படாம அடங்கி நின்ன கோபத்தால கூட நான் ஜி.கே. இறப்புக்கு கலங்காம இருந்திருக்கலாம் இல்லையா’’ என கேள்வி கேட்டபடி மீண்டும் ஆற்றை பார்த்து திரும்பிக் கொண்டாள் விசாலி.

3 half

Leave A Reply

Your email address will not be published.