சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 3-வது வார பூச்சொரிதல் விழா

0

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 3-வது வார பூச்சொரிதல் விழா

 

 

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான கடந்த 10-ந் தேதி அன்று பூச்சொரிதல் விழா தொடங்கியது. அன்று முதல் 28 நாட்களுக்கு அம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொண்டு வருகிறார். இந்த நாட்களில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர் மோர், கரும்பு, பானகம், மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

 

 

இந்நிலையில் 3-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. சமயபுரம் கடைவீதி வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக 59-வது ஆண்டாக நடைபெற்ற விழாவில் சமயபுரம் கடைவீதியில் உள்ள கருப்பண்ணசாமி, மதுரை வீரனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

 

food

அதைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் படம் வைக்கப்பட்டு 2 யானைகள் முன்னே வர அந்த சங்கத்தின் திருச்சி மாவட்ட துணை தலைவர் பெ.கலியபெருமாள், இணை செயலாளர் கோவி.கண்ணன், விழா குழு துணைத்தலைவர் தினேஷ் என்ற நடராஜமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் பூக்கூடையில் பூக்களை சுமந்து கோவிலுக்கு சென்று அம்மனுக்கு சாற்றினர்.

 

இதேபோல் ச.கண்ணனூர் பேரூராட்சி சார்பாக செயல் அலுவலர் மத்தியாஸ் தலைமையில் பேரூராட்சிகளின் இணை இயக்குனர் மலைமான்திருமுடிகாரி, உதவி இயக்குனர் முத்துக்குமார், செயல் அலுவலர்கள் லால்குடி குமரன், மேட்டுப்பாளையம் சேகர் உள்பட பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பூக்கூடையில் பூக்களை ஊர்வலமாக எடுத்துச்சென்று அம்மனுக்கு சாற்றினர்.

 

காலை 8 மணியில் இருந்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தியும், மாலை அணிந்தும் பாதயாத்திரையாக கூடைகளில் பூக்களை சுமந்து வந்த பக்தர்கள், அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர். கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாமக்கல், சேலம், ஆத்தூர் போன்ற தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சமயபுரத்துக்கு வந்து, அம்மனை வழிபட்டனர்.

 

பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறையின் சார்பாக திருச்சி, துறையூர் போன்ற இடங்களில் இருந்து சமயபுரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு அமைப்புகள் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் புதிய பஸ் நிலையத்தில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.