பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனம் பறிமுதல்.. தேர்தல் ஆணையம் அதிரடி

கன்னியாகுமரி: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனம் இன்று தேர்தல் ஆணையம் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது. லோக்சபா தேர்தலுக்கு தமிழக அரசியல்வாதிகள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாம் பிரச்சாரத்தை தொடங்கி மிக தீவிரமாக நடத்தி வருகிறது. லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் ஐந்து தொகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பாஜக சார்பாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட உள்ளார்.

இதற்காக அவர் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனம் இன்று தேர்தல் ஆணையம் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்திற்காக இந்த வாகனம் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டது.

எல்.இ.டி பொருத்தப்பட்ட நவீன பிரச்சார வாகனம் ஆகும் இது. இந்த நிலையில் இன்று காலை பிரச்சாரத்திற்கு தயாராகும் வேளையில், தேர்தல் பிரச்சார எல்.இ.டி. வாகனத்தை தடுத்து நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவிலில் இன்று காலை சோதனை நடந்த போது, இந்த வாகனமும் சோதனை செய்யப்பட்டது.

ஆனால் பிரச்சாரம் செய்வதற்கான உரிய ஆவணங்கள் இதில் இல்லை. இதையடுத்து உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் வாகனத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அங்கு பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
