திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பள்ளி மாணவ-மாணவிகள் !

0
Business trichy

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பள்ளி மாணவ-மாணவிகள் !

 

இந்தியாவில் முதன் முதலாக 1802-ம் ஆண்டு மார்ச் 18-ந் தேதி கொல்கத்தாவில் கோசிப்பூர் என்ற இடத்தில் துப்பாக்கி தொழிற்சாலை தொடங்கப்பட்டது. 217 ஆண்டுகள் சேவை முடிந்து 218-ம் ஆண்டை தொடங்கி உள்ளது. முதன் முதலாக தொடங்கப்பட்ட தினத்தைதான் படைக்கலன் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்தியாவின் பழமையான துப்பாக்கி தொழிற்சாலை அதுதான்.

திருச்சியில் துப்பாக்கி தொழிற்சாலைக்கு 1964-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 1966-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி துப்பாக்கி தொழிற்சாலையை தொடங்கி வைத்தார்.

 

Full Page

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 18-ந் தேதியை படைக்கலன் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள சமுதாய கூடத்தில் நேற்று 218-வது படைக்கலன் தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டி, அங்குள்ள சமுதாய கூடத்தில், துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பல்வேறு வகையிலான துப்பாக்கிகள் காட்சிப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

 

இந்த கண்காட்சியை பொதுமேலாளர் ஷிரிஷ் கரே தலைமை தாங்கி, ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார். உதவி பொதுமேலாளர்கள் சந்திரமூர்த்தி, ராஜாராம், குமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர். கண்காட்சியின் போது, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் கடந்த நிதியாண்டில் ரூ.150 கோடி மதிப்பில் படைக்கலன்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்ததாகவும், இந்த இலக்கை எட்டிவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

கண்காட்சியில், எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களுக்கான ஆயுதம், விமானங்களை தாக்கக்கூடிய நவீன துப்பாக்கி, சிறிய துப்பாக்கிகள், பழங்கால துப்பாக்கிகள், எதிர்கால ஆயுதங்கள் என வகைப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

 

30 எம்.எம். தானியங்கி கிரெனட் லாஞ்சர், ரப்பர் புல்லட்களை போட்டு தாக்கி அதிகம் சேதம் விளைவிக்கக்கூடிய 38 எம்.எம். மல்டி ஷெல் லாஞ்சர், நிமிடத்திற்கு 800 புல்லட்டுகளை வெளியேற்றி தாக்கும் வல்லமை கொண்ட எந்திர துப்பாக்கி (மிஷின் கன்), 2 கிலோ மீட்டர் தூரம் வரை இலக்கு நோக்கி தாக்கும் நவீன துப்பாக்கி, எதிரி நாட்டு விமானங்களை சுட்டு வீழ்த்தக்கூடிய துப்பாக்கி, போரின்போது பீரங்கிகளில் பயன்படுத்தக்கூடிய அதாவது நிமிடத்திற்கு 550 புல்லட்கள் பாய்ந்து செல்லக்கூடிய துப்பாக்கிகள் மற்றும் ஏ.கே-47 நவீன ரக துப்பாக்கி, ஏ.கே.-47 பழைய மாடல் துப்பாக்கி என 40-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ரகங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.

 

படைக்கலன்கள் கண்காட்சியில் உள்ள துப்பாக்கி குறித்து ஊழியர்கள், பார்வையாளர்களுக்கு விளக்கம் அளித்தனர். பள்ளி-மாணவிகள் பல்வேறு வகையிலான துப்பாக்கிகளை பார்த்து வியப்படைந்தனர். ஆர்வமிகுதியால் அவற்றை கையில் எடுத்து குறிபார்த்தும் மகிழ்ந்தனர். விவசாயிகள் சிலரும் ஆர்வமாக வந்தனர். அவர்கள், கையில் எடுத்து துப்பாக்கி குறிபார்த்து அங்கிருந்த ஊழியர்களிடம் விளக்கம் கேட்டனர். மேலும் இளம்பெண்கள் சிலரும் கண்காட்சியில் உள்ள துப்பாக்கிகளை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். சிலர், துப்பாக்கிகளை கையில் பிடித்தபடி தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து கொண்டனர். சிலர், ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். அத்துடன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பலரும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை பார்த்து சென்றனர். முடிவில் கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கையுடன் கண்காட்சி நிறைவு பெற்றது.

Half page

Leave A Reply

Your email address will not be published.