திருச்சியில் தண்ணீர் தேடி வந்தபோது நாய்கள் கடித்து புள்ளி மான் பலி !

0
Business trichy

திருச்சியில் தண்ணீர் தேடி வந்தபோது நாய்கள் கடித்து புள்ளி மான் பலி !

 

திருச்சி மாவட்டம் துறையூரை அருகே புலிவலத்தில் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் சுமார் 100 ஏக்கருக்கும் மேல் அரசுக்கு சொந்தமான காப்புக்காடு உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டெருமை, புள்ளி மான்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

Half page

தற்போது இங்கு கடும் வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடும், உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. எனவே இங்குள்ள வனவிலங்குகள் தண்ணீரை தேடி வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களுக்கு வரத்தொடங்கியுள்ளன. குறிப்பாக புள்ளி மான்கள் அதிக அளவில் தண்ணீரை தேடியும், உணவை தேடியும் தோட்டங்களுக்கு வருகின்றன.

 

இவ்வாறு வரும் புள்ளி மான்களை தெருநாய்கள் விரட்டி கடித்து குதறிவிடுகின்றன. மேலும் நெடுஞ்சாலையை மான்கள் கடக்கும் போது, வாகனங்களில் அடிபட்டு விடுகின்றன. இதில் படுகாயம் அடையும் புள்ளிமான்கள் உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது நடந்துவருகிறது.

 

குறிப்பாக கடந்த சில வாரங்களாக இவ்வாறு புள்ளி மான்கள் பலியாகும் சம்பவம் அதிகரித்துள்ளது. எனவே வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தரைமட்ட தொட்டிகள் கட்டி, அதில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

 

இந்தநிலையில் திருச்சி-துறையூர் நெடுஞ்சாலையில் புலிவலம் பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காக புள்ளி மான்கள் கூட்டம் நேற்று காலை வந்தது. அப்போது அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்கள் அவற்றை துரத்தி கடித்தன. இதில் படுகாயம் அடைந்த 2 வயது பெண் புள்ளி மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

 

இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் வனஅதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த புள்ளி மானின் உடலை மீட்டனர். பின்னர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்து, புள்ளி மானின் உடலை காப்புக்காடு பகுதியில் புதைத்தனர்.

Full Page

Leave A Reply

Your email address will not be published.