பாஜகவின் ஏறுமுகமும், காங்கிரஸின் இறங்குமுகமும்!

0

கடந்த 30 ஆண்டுகளில் இருபெரும் தேசிய கட்சிகளான காங்கிரஸின் வாக்கு விகிதம் இறங்குமுகத்திலும், பாஜகவின் வாக்கு விகிதம் ஏறுமுகத்திலும் இருந்து வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுத் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. சூறாவளிப் பிரச்சாரத்தில் காங்கிரஸும், பாஜகவும் ஈடுபட்டுள்ளன. தற்போது ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி உருவான காலகட்டத்தில், மாநிலக் கட்சிகள் காங்கிரஸுக்கு ஏற்படுத்திய அளவுக்குக்கூட சுமையை ஏற்படுத்தாத சிறிய கட்சியாகத்தான் இருந்தது. 1980ஆம் ஆண்டில்தான் பாரதிய ஜனதா கட்சி உருவானது. அதன்பிறகு நடந்த 1984ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக வெறும் இரண்டு தொகுதிகளை மட்டுமே வென்றிருந்தது.

ஆனால், காங்கிரஸ் கட்சியோ அதற்கு முன்பு வரலாற்றில் அக்கட்சி பெற்றிராத அளவுக்கு ராஜீவ் காந்தி தலைமையில் 414 இடங்களை அப்போது வென்றது. நேரு ஆட்சிக்காலத்தில் கூட காங்கிரஸ் கட்சி 414 இடங்களை வென்றதில்லை. ஏன், நேரு ஆட்சியில் இருந்தவரை 400 இடங்களைக் கூட காங்கிரஸ் வென்றதில்லை. அதிகபட்சமாக 1952ஆம் ஆண்டு 364 இடங்களில் நேரு வென்றிருந்தார். அதற்குப் பிறகு வந்த இந்திரா காந்தி 1980ஆம் ஆண்டில் 353 இடங்களில் வென்றிருந்தார்.

பாஜகவின் ஏறுமுகம்

1984ஆம் ஆண்டில் இரண்டு இடங்களை மட்டுமே வென்றிருந்த பாரதிய ஜனதா கட்சி அடுத்த தேர்தலிலேயே 1989ஆம் ஆண்டில் 85 இடங்களை வென்று வலுவான கட்சியாக வளர்ந்தது.

அடுத்தடுத்த தேர்தல்களில் மெல்ல அதிக இடங்களை வெல்ல ஆரம்பித்தது. பாஜகவின் கிராஃப் உயர்ந்துகொண்டே போனது. 1989க்குப் பிறகு இன்றுவரை பாஜக வென்ற இடங்களின் எண்ணிக்கை 100க்குக் குறையவே இல்லை.
1991ஆம் ஆண்டில் 161 இடங்களை வென்று வாஜ்பாய் தலைமையில் முதன்முறையாக பாஜக ஆட்சியமைத்தது. ஆனால், கூட்டணி அரசின் குழப்பங்களால் 1998ஆம் ஆண்டில் மீண்டும் தேர்தலை எதிர்கொண்டது.

 

இம்முறை 182 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் 13 மாதங்களில் பாஜகவுக்குக் கொடுத்த ஆதரவை ஜெயலலிதா திரும்பப் பெற்றதால் பெரும்பான்மையை இழந்து பாஜக மீண்டும் ஆட்சியை இழந்தது.
1999ஆம் ஆண்டு மீண்டும் 182 இடங்களை வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. இருப்பினும் 2004ஆம் ஆண்டில் 138 இடங்களையும், 2009ஆம் ஆண்டில் 116 இடங்களையும் வென்று ஆட்சியை இழந்தது. ஆனால், மோடி தலைமையில் 2014ஆம் ஆண்டில் பாஜக 282 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. 1980 முதல் 2014 வரையிலான பாஜகவின் கிராஃப் இரண்டிலிருந்து 282ஆக உயர்ந்துள்ளது.

 

food

1984ஆம் ஆண்டில் பாஜகவின் வாக்கு விகிதம் 7.74 விழுக்காடாக மட்டுமே இருந்தது. இது 2014ஆம் ஆண்டில் 31.34 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் பாஜகவின் முகம் ஏறுமுகமாகத்தான் இருந்துள்ளது என்பதற்கு அக்கட்சி பெற்றுள்ள வாக்கு விகிதமே சான்றாக உள்ளது.

காங்கிரஸின் இறங்குமுகம்

காங்கிரஸ் கட்சி 1984ஆம் ஆண்டில் 414 இடங்களை வென்றிருந்தபோது அக்கட்சியின் வாக்கு வங்கி 48.12 விழுக்காடாக இருந்தது. ஆனால் 1989 தேர்தலில் காங்கிரஸ் வென்ற இடங்களின் எண்ணிக்கை 197 ஆகவும், வாக்கு வங்கி 39.53 விழுக்காடாகவும் குறைந்தது. அச்சமயத்தில் பாஜக பெற்றிருந்த 85 தொகுதிகளின் ஆதரவுடன் ஜனதா தளம் ஆட்சி அமைந்தது. வி.பி.சிங் பிரதமரானார். அதன்பிறகு காங்கிரஸின் வாக்கு வங்கி படிப்படியாகச் சரிந்து 1999ஆம் ஆண்டில் 28.30 விழுக்காடாகக் குறைந்துவிட்டது.

2004ஆம் ஆண்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருந்தபோதும், அக்கட்சியின் வாக்கு வங்கி 1.6 விழுக்காடு சரிந்து 26.70 விழுக்காடாகக் குறைந்தது. 2009ஆம் ஆண்டில் காங்கிரஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது வாக்கு வங்கி 2.02 விழுக்காடு அதிகரித்து 28.55 விழுக்காடாக உயர்ந்தது. ஆனால், 2014ஆம் ஆண்டில் மிக மோசமான அளவில், 9.03 விழுக்காடு சரிந்து 19.52 விழுக்காடாகக் குறைந்தது.

வெற்றிபெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் 44 ஆகக் குறைந்தது. ஆனால் 2014ஆம் ஆண்டில் பாஜகவின் வாக்கு வங்கி 12.5 விழுக்காடு உயர்ந்து 31.34 விழுக்காடாக அதிகரித்தது. ஆக மொத்தம் 1984 முதல் 2014 வரையிலான 30 ஆண்டுகளில் காங்கிரஸின் வாக்கு வங்கி 28.6 விழுக்காடு சரிந்துள்ளது. அதே சமயத்தில் பாஜகவின் வாக்கு வங்கி சுமார் 23.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் 17ஆவது மக்களவைக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

2014ஆம் ஆண்டில் பாஜகவுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த மோடி அலை இம்முறையும் மீண்டும் ஓங்கி அடிக்குமா அல்லது காங்கிரஸுக்கு புதிய இளம் தலைவராக உருவாகியுள்ள ராகுல் காந்தியின் அலை ஓங்குமா என்பதை அறிய மே 23ஆம் தேதி வரை பொறுத்திருந்தே ஆக வேண்டும். வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பதைத் தாண்டி காங்கிரஸின் வாக்கு வங்கி இறங்குமுகத்திலும், பாஜகவின் வாக்கு வங்கி ஏறுமுகத்திலும் தொடரும் 30 ஆண்டுக்கால வரலாறு முற்றுப்பெறுமா அல்லது நீடிக்குமா என்ற முக்கியத்துவம் பெற்ற தேர்தலாகவும் 17ஆவது மக்களவைத் தேர்தல் அமைந்துள்ளது.

– பிரகாசு

gif 4

Leave A Reply

Your email address will not be published.