அறிவோம் தொல்லியல்-8 பயணங்கள் முடிவதில்லை…

0

கருவூர் வஞ்சி:

இன்று மாநகராட்சிகளில் ஒன்றாய் திகழும் கரூர் ஈராயிரம் ஆண்டுகள் முன்பாகவும் ஒரு நகராகவே திகழ்ந்ததற்கு எண்ணற்ற சான்றுகள் இலக்கியம் மற்றும் தொல்லியல் ரீதியாகவும் கிடைத்துள்ளது. சங்ககால சேரர்களின் தலைநகராய் இந்நகர் இருந்துள்ளது! தொன்மையான நாகரீகங்கள் ஆற்றங்கரையில் தோன்றியதற்கு சான்றாக இந்நகரும் ஆண்பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது! அன்றைய ஆண்பொருநையே இன்றைய அமராவதி ஆறாகும்.

கரூரின் தொன்மை:

‌சந்தா 1

கற்காலத்தைச் (Paleolithic) சேர்ந்த பொருட்கள் கிடைக்காவிடினும் பெருங்கற்கால (Megalithic) பண்பாட்டிலிருந்து இவ்வூரின் தொன்மை தொடங்குகிறது. கரூரை சுற்றியுள்ள புகழூர், மூக்கணாங்குறிச்சி, நத்தமேடு, பவித்திரம் பரமத்தி, பள்ளபாளையம், வடுகனூர், வாழ்நாயக்கற்பட்டி, வெஞ்சமாக்கூடலூர் முதலிய ஊர்களில் கல்வட்டம், கற்குவை போன்ற ஈமச்சின்னங்கள் பரவியுள்ளது. அரவக்குறிச்சி அருகேயுள்ள நெடுங்கூரில் தமிழக தொல்லியல்துறையால் 2006-2007 ஆம் ஆண்டு ஒரு ஈமச்சின்னத்தை அகழாய்வு செய்து ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. மேலும் புகளூர் அரசுமேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கிடைத்த சங்ககால மட்பாண்டங்கள் மற்றும் சின்ன அண்டாங்கோயில், கொத்தபாளையம் என்ற ஊர்களில் கிடைத்த முதுமக்கள்தாழிகள் கரூர் அகழ்வைப்பகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு கிடைத்துள்ள மண்கலங்கள் ஒரே மாதிரி குறியீடு(Graffiti)  கிடைத்தது சிறப்பான ஒன்று.

கரூரை சுற்றியுள்ள ஊர்களில் சிறப்புமிக்க மண்மேடுகள் பல காணப்படுகிறது, இவை நகரநாகரீகத்தின் தொன்மையை காட்டும் வெளிகள் ஆகும். நத்தமேடு, வனவாசி, பழையஜெயங்கொண்ட சோழபுரம், பஞ்சமாதேவி, திருமுக்கூடலூர், புதுக்கோட்டை, மகாதானபுரம், மேட்டு திருக்காம்புலியூர் இவ்வூர்களில் இத்தகைய மணல்மேடுகள் உள்ளது. இங்கு நிறைய. சுடுமண் பொருட்கள் கிடைத்தது! கருப்புசிவப்பு பானையோடுகள், மத்திமகால பானையோடுகள் மேலடுக்கிலேயே கிடைக்கிறது, இதில் மண்மங்கலம் என்ற ஊரில் கிடைத்த சுடுமண்பொம்மை சிறப்பானது, இதில் ஒருதாயின் இடையில் அமர்ந்து குழந்தை பால் குடிப்பதுபோல் உள்ளது. இப்பொம்மை திருக்காம்புலியூர் மற்றும் பழனியிலும் கிடைத்தது.

 

கொங்குப்பகுதியிலுள்ள குலாலர்கள் இன்றுவரை இவ்வடிவ பொம்மைகளை செய்து வணங்கி வருகின்றனர். காவிரி வடகரைப்பகுதியில் கொப்பட்டிஅம்மன் என வழிபடுகின்றனர். தொன்று தொட்டு இம்மரபு மக்களிடையே பரவியுள்ளதை உணரமுடிகிறது.

 

கரூர்-திருச்சி சாலையில் மாயனூர் என்ற ஊர் உள்ளது. இங்கு மதுக்கரை செல்லாண்டியம்மன் எனும் தெய்வம் இப்பகுதி மக்களிடையே  பிரசித்தி பெற்றது.

சந்தா 2

கொங்கு மண்டல சதகம், மதுக்கரையை மதிற்கரை என கூறுகிறது. இப்பகுதியை கொங்கின் கிழக்கு எல்லையாக குறிக்கிறது.

“மதிற்கரை கிட்டிசை தெற்கு பழனி மதிகுடக்குக்

கதித்துவ வெள்ளிமலை பெரும்பாலை கவின் வடக்கு

விதித்துள்ள நான்கெல்லை சுழ வளமுற்று மேவிவிண்ணோர்

மதித்திட வாழ்வு தழைத்திடு நீள் கொங்குமண்டலமே”

 

இச்சதகம் இவ்வூரையே சேர, சோழ, பாண்டியரின் எல்லை என கூறுகிறது!  மய்யனூர் என்பதே மருவி மாயனூர் ஆனதாகவும் கூறப்படுகிறது. மேலும் மதிற்கரையை பற்றி அருகேயுள்ள அய்யர்மலை, சேந்தமங்கலம் கோவில்களில் கல்வெட்டு குறிப்புள்ளது!  இச்சதகம் காலத்தால் பிற்பட்டது என்றாலும், இதில் உள்ள தகவல்களை மெய்ப்பிக்க சான்றுகள் ஆங்காங்கே பரவி கிடக்கிறது.

சங்ககாலம் தொட்டே கருவூர் வஞ்சி(கரூர்) பெருநகராய் திகழ்ந்ததை பல இலக்கிய, கல்வெட்டு சான்றுகள், பழங்காசுகள் வாயிலாக நாம் அறியலாம்.

கருவூரைப்பற்றி இலக்கியம் சொல்லும் சான்றுகள் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்…

 

Leave A Reply

Your email address will not be published.