ஆதிமகள் 10

0

விசாலி தன்னை வரவழைத்ததற்கான காரணத்தை காயத்ரி யோசித்துக்கொண்டிருக்கும்போதே, கரண் மாடியிலிருந்து இறங்கி இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

மிக அருகாமையில், விசாலியின் பக்கமாய் கரண் வந்து நின்றபோதுதான் தத்தமது சிந்தனையிலிருந்து விசாலியும், காயத்ரியும் மீண்டனர்.

துக்கத்தின் படிமம், சூழலிலும், மூவர் மனதிலும் படர்ந்திருந்ததால் புலன்களிலும், வார்த்தைகளிலும் உணர்வுகள் ஊர்ந்து வந்து வெளிப்பட்டன.

‌சந்தா 1

அருகே வந்து நின்ற கரணை பார்த்தவுடன், விசாலிக்கு கண்களில், கண்ணீர் முட்டி, தேங்கி நின்றது. தன்னை சுதாரித்துக் கொண்டு காயத்ரியின் பக்கமாக திரும்பிய விசாலி, காயத்ரியிடம், கரணை அறிமுகம் செய்து வைத்தாள்.

காயத்ரி தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து தனது தலையை சற்றே உயர்த்தி மெலிதாய் கரணைப் பார்த்து புன்னகைத்தாள். கரணும் காயத்ரியை, அவளது விழிகளை மட்டும் பார்த்ததோடு அறிமுகத்தை நிறுத்திக் கொண்டான். அவன் பார்த்த பார்வையின் கணங்கள் காயத்ரிக்கே அர்த்தம்.

கரணை அருகாமையில் பார்த்தவுடன், காயத்ரிக்கு அங்குள்ள சூழல் அனைத்தும் மறந்து போயின. அவனது பார்வையையும், சமிக்ஞையையும் தன்னுள் உள்வாங்கி நிலைகுலைந்து போனாள். பல சமயங்களில் தன்னைப் பற்றியே பெருமைப்பட்டுக் கொண்டவள்தான் காயத்ரி. மலரின் மென்மை கொண்டவள் நான், ஆனால் இரும்பின் தன்மை கொண்டவள், என தன் நெஞ்சை நிமிர்த்தி தனது தோழி அகிலாவிடம் தனது இயல்பு பற்றி பறை சாற்றி தீர்த்தவள்தான். ஆனால், இன்று, இப்படி ஏன் இந்த நிலைகுலைவு, எல்லோருக்குமே அவர்களது இயல்பில், உறைந்த தீர்க்கத்தில் இதுபோன்ற ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில், அவர்களுள் மாற்றம் ஏற்பட்டு அவர்களை புரட்டிப் போடுமோ, அவர்களுக்குள்ளும் எதிர்திசை உதிக்குமோ!

தன்னை பெண் பார்த்து சென்ற ஆணின் ஒத்திசைவை அந்த சூழல் அவளுக்கு பெற்றுத் தந்தது. உடலின் ரசாயன மாற்றத்தை காயத்ரி உணரத் தவறினாள். உணர்வுகளின் அகங்காரத்திற்கு இரையாகிப் போனாள்சுழன்று சுழன்று நீரில் மூழ்கும் சுழியானாள் காயத்ரி. அவளுள் ருப்பாய் இருகிய சுழியை யாரால் அவிழ்த்து எறிய முடியும். உள்ளிருக்கும் மகாகாளியின் முடிச்சை யார் றுக்க முடியும். காதலின் ஆக்ரோசம், அவளுள் பிடரி சிலிர்த்து, மெல்ல விழிகள் சிவந்து கிறங்க, தன்னை இரண்டாய் பிளந்து ஒரு பாதியாய் அவனையும் இணைத்து ஆதிமகளாய் அடங்கிப் போனாள் காயத்ரி. விசாலியும் கரணும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதே காயத்ரியின் காதில் விழவில்லை. கரண் விசாலியிடம் விடைபெற்று, காயத்ரியிடம் இதைவிட சின்னதாய், சிரிக்க முடியாத அளவீடாய் பத்தாவது நவரசத்தை தோற்றுவித்துவிட்டு அவளுள் அவன் நிலைத்தவனாய் அங்கிருந்து நகர்ந்து சென்றான் கரண்.

அவன் செல்வதையே காயத்ரி பார்த்துக் கொண்டிருந்தாள். தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர முடியாத நிலையிலேயே தீய்ந்து, பின் உணர்ந்து, மீண்டும் பற்றினாள் காயத்ரி.

தரையில் இரண்டு காபி கோப்பை, வெறும் கோப்பையாக இருந்தது. அதை பார்த்த காயத்ரி இதில் ஒன்றின் முழுமையை நான் எப்போது குடித்தேன் என கலவரப்பட்டாள்.

தன்னுள் வெடித்த பிளவு சத்தம் வெளியில் கேட்டிருக்குமோ என ஐயப்பட்டாள் காயத்ரி.

விசாலியின் கண்களில் நீண்ட நேரமாய் தேங்கியிருந்த கண்ணீர் விழாமல் போகவே மூக்கு கண்ணாடியை அகற்றி முந்தானையில் வாங்கிக் கொண்டாள்.

இடையினில் மௌனம் கரைந்தது. நேரம் கடந்ததை உணராமல் இருந்தாள் காயத்ரி.

சந்தா 2

எதற்காக தன்னை விசாலி அழைத்தாள் என்ற கேள்வி காயத்ரிக்குள் இப்போது எழவில்லை. இனி எழவும் வாய்ப்பில்லை.

ஆயினும் விசாலிக்கு காயத்ரியை அழைத்ததின் பொறுப்பை அவிழ்க்க வேண்டும்.

விசாலி பேசத் துவங்குவதற்கு முன்பு அவளது உடலில் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காயத்ரிக்கு வியப்பை தந்தது. விசாலியின் அந்த மாற்றத்தை உணர்ந்த காயத்ரிக்கு தனது நுணுக்கமான உணர்வின் தன்மை, சிலிர்ப்பை தந்து, தன்னைத்தானே உள்ளூர மெச்சிக்கொண்டாள்.

காயத்ரியை விசாலி தன் வீட்டிற்கு அழைத்தபோது அப்பா சண்முகநாதன் சந்தேக கோடிட்டு, விசாலிக்கு பெண் சொந்தங்கள் ஏதும் இந்த ஊரில் இல்லாத காரணத்தால் ஒரு ஆறுதலுக்கு உன்னை விசாலி கூப்பிட்டிருக்கலாம் என அவர் சொன்னதை விசாலி இப்போது தன் வாய்மொழியாய் பகிர்ந்து கொண்டாள்.

விசாலி தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தவளாய், வா, காயத்ரி வெளியே சென்று வரலாம் என்றாள். எங்கே போகலாம் என்றாள் காயத்ரி. காவேரி பாலத்திற்கு போக இருவரும் முடிவு செய்தார்கள். இருவரும் வெளியே கிளம்பி வர காயத்ரி தனது ஸ்கூட்டியை எடுக்க ஆயத்தமானாள். விசாலியோ அதை எடுக்க வேண்டாம், இருவரும் காரிலேயே போய் விடலாம். நாளை கரணிடம் ஸ்கூட்டியை காயத்ரியின் வீட்டிற்கே கொடுத்து விடுவதாக கூற, காயத்ரி மறுப்பேதுமின்றி அதற்கு சம்மதித்தாள்.

காரை விசாலி ஓட்டினாள். காயத்ரிக்கு கார் ஓட்ட தெரியுமா எனக் கேட்டாள் விசாலி. தான் இருபது நாட்கள் டிரைவிங் ஸ்கூல் சென்று கார் ஓட்ட கற்றுக்கொண்டதாகவும், அதன் பிறகு நான் இதுவரை கார் ஓட்டி பழகவில்லை என்றும், அதற்கான சந்தர்ப்பங்கள் அமையாததையும் காயத்ரி கூறினாள். விசாலி மௌனமாக அதை கேட்டுக் கொண்டாள்.

காயத்ரிக்கு விசாலியிடம் பேசுவதற்கு, பழகுவதற்கு எந்தவிதமான இடைவெளியும், தயக்கமும் ஏற்படவில்லை. இருவரும் சகஜமாக இருந்தார்கள். காயத்ரிக்கு இந்த நிலை வியப்பாகக் கூட இருந்தது. இந்த சகஜம் தனது மனநிலையின் மாற்றமா, இல்லை விசாலியின் தோற்றமும், பேச்சின் நாகரீகமும் இந்த சகஜநிலையை தோற்றுவித்ததா என்று குழம்பிப்போனாள்.

இந்த நெகிழ்வான நிலைக்கு யார் காரணம் என்று காயத்ரிக்கு புரியவில்லை. தான் விசாலியை பார்க்க வருவதற்கு முன்பிருந்த மனநிலையிலிருந்து முற்றிலும் மாறி போயிருந்தாள் காயத்ரி.

கார் காவேரி பாலத்தை அடைந்தபோது இரவு மணி 8 ஆகியிருந்தது. பாலத்தின் இருபுறத்திலும் இரு சக்கர வாகனங்களும் கார்களும் நிறுத்தப்பட்டிருந்தன. அங்கு எல்லாவகையான மனிதர்களும் நிரம்பி இருந்தனர். காரை இடம் பார்த்து ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் காரிலிருந்து இறங்கி பாலத்தின் கைப்பிடி திண்டை பிடித்தவாறு காவேரியை பார்த்தபடி நின்றனர்.

ஆற்றின் ஓரத்தில் சிறிய ஓடை போல் குறைவான நீர் தேங்கி கிடந்தது. அந்த இரவில் நிலவெளியில் அது தெளிவாக குறையேதுமின்றி தெரிந்தது, வலதுபுறம் தலை நிமிர்த்தி பார்த்தால் ஶ்ரீரங்கம் கோவில் பிரகாசமாக எழிலுடன் காட்சி தந்தது. வானத்தில் விமானம் ஒன்று தரையிறங்க பெரும் இரைச்சலுடன் பறந்து சென்று கொண்டிருந்தது.

ஆற்றின் வறட்சியும், வீசும் காற்றின் சுகத்தையும் காயத்ரியால் ரசிக்க முடியவில்லை. ஆற்றில் நீரில்லாமல் எதையுமே ரசிக்க, சேவிக்க அவளுக்கு ஏனோ மனம் கூசியது.

விசாலி மௌனமாக கையை கட்டியபடி நின்று கொண்டிருந்தாள். நீண்ட நேரம் கேட்க வேண்டும் என்ற யோசனையிலிருந்த காயத்ரி விசாலியிடம் கேட்டாள். உங்களுக்கு ஒரு மகன் மட்டும் தானா என்றாள்.

விசாலி மெதுவாக காயத்ரியின் பக்கம் திரும்பி, நிதானமாக அவன் எனது மகனல்ல. நான் அவனது சித்தி என்றாள்.

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.