மும்முனைத் தாக்குதல்: கடும் நெருக்கடியில் தினகரன்

0
Full Page

“தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சூடுபிடித்திருக்கிறது. திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட ஆரம்பித்துவிட்டனர். அதிமுக அணியும் விரைவில் தொகுதிப் பங்கீட்டை அறிவிக்க இருக்கிறது. எல்லாரும் களத்தில் இறங்கிவிட்ட நிலையில் தினகரன் தலைமையிலான அமமுக வருகிற மக்களவை தேர்தலில் பொதுச் சின்னமான தீவிரமாக எழுந்திருக்கிறது. இதற்கான முயற்சியை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்.

 

டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து இன்று ஓராண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு ஆரம்பிக்கிறது. இந்த இரண்டாம் ஆண்டு ஆரம்பிக்கும் நாளிலே தினகரனுக்கு நெருக்கடி மேலும் முற்றியிருக்கிறது.
தேர்தலில் நிற்கக் கூடாது என்று பாஜக தொடர்ந்து தன்னை மிரட்டுவதாக சிறையில் சசிகலாவை சந்தித்தபோது தினகரன் சொல்லியிருந்தார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த சின்னம் தொடர்பான வழக்கு மார்ச் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ‘ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையம் எங்களை வஞ்சித்து வருகிறது’ என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

 

இந்த வழக்கின் அடுத்த விசாரணை தேதி, வேட்புமனு தாக்கலாகும் தேதிகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது தினகரன் வருகிற மக்களவைத் தேர்தலில் குக்கர் மட்டுமல்ல வேறு எந்த பொது சின்னத்திலும் நிற்க முடியாத நிலை வருமோ என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

எடப்பாடி பழனிசாமி – பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று கடந்த மாதம் 28ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா, தினகரன் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டுமெனவும் இடைக்காலமாக தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மென்ஷன் செய்தது. ஆனால், தினகரனின் மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 15 விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது என்றும் அதில் ஆஜராக வேண்டும் என்றும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்று தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் அழைத்ததோடு, வழக்கு விசாரணைக்கு வருவதற்கான நகலைக் கொடுத்து அதில் தேர்தல் ஆணையத்தின் சார்பிலான கையெழுத்தையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் உச்ச நீதிமன்றத் தலைமை அமர்வு முன்பு வழக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்தின் சார்பில் யாரும் ஆஜராகவே இல்லை. இத்தனைக்கும் தொடர்ச்சியாக 9 நாட்கள் உச்ச நீதிமன்றம் விடுமுறை.

 

தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்றதுமே தினகரன் தரப்பினருக்கு அலாரம் அடித்துவிட்டது. ‘தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதன்படி மார்ச் 19 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி, 26 ஆம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். நாங்கள் எங்கள் கட்சி சார்பில் போட்டியிட வேண்டியுள்ளது. எனவே சின்னம் தொடர்பாக உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று தலைமை நீதிபதி அமர்விடம் கோரினார்கள் தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள்.
தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தால் நீதிமன்றத்திலேயே அதற்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

 

Half page

ஆனால் தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகதாதால், உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப் போவதாகத் தெரிவித்தது. அப்போது தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள், ‘தேர்தல் வேட்பு மனு தாக்கல் தேதிகள் தாண்டிவிட்டால் எங்களுக்கு அது ஜனநாயக இழப்பாகும்’ என்பதை சுட்டிக்காட்ட, ஒன்பது நாட்கள் விடுமுறை முடிந்ததும் வரும் முதல்வேலை நாளான மார்ச் 25 ஆம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம் என்று கூறி ஒத்தி வைத்தனர்.

 

இதன் பின் உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ’இன்னிக்கே ஒரு உத்தரவு கொடுக்கப்பட்டிருந்தால் சந்தோஷப்பட்டிருப்போம். ஆனால் தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி தெரிவித்தும் அவர்கள் ஆஜராகவில்லை. தேர்தல் ஆணையம் தன்னால் ஆன எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறது.
ஆனால் நாங்கள் சட்ட ரீதியான போராட்டத்தைத் தொடர்வோம். தேர்தல் ஆணையம் எங்களை வஞ்சிக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

 

இன்னும் ஒரு மாத காலத்தில் தமிழகத்தில் தேர்தல் வரும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னார். அவர் சொன்ன மாதிரியே இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்சுக்கு நீதிமன்றம் கொடுத்த அடுத்த நாளே தேர்தல் ஆணையம் நோட்டிபிகேஷன் வெளியிட்டது. அதனால்தான் அந்த வழக்கை நாங்கள் இழந்தோம். நோட்டிபிகேஷன் வந்துவிட்டதால் தலையிடமுடியாது என்று அன்று நீதிபதி சொன்னார். நாங்கள் வஞ்சிக்கப்பட்டதெல்லாம் தேர்தல் ஆணையத்தால் மட்டுமே. ஒவ்வொருமுறையும் தேர்தல் ஆணையம் விதவிதமான முறையில் சட்டத்துக்குப் புறம்பாக செயல்படுகிறது’ என்று கூறியிருக்கிறார்.

 

ஆக தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்கக் கூடாது அல்லது கிடைப்பது தள்ளிப் போக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நினைப்பதாக அமமுக வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறது.குக்கர் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அது 25 ஆம் தேதி வரை கிடைக்குமா என்பது தெரியமால் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் தினகரன் தரப்பினர்”
“சட்ட ரீதியாக தேர்தல் ஆணையம் அமமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது என்றால் அரசியல் ரீதியாக மேலும் நெருக்கடியில் இருக்கிறார் தினகரன். பெங்களூரு சிறையில் சசிகலாவை தினகரன் சந்திப்பதற்கு முன்பே, சசிகலாவை பாஜக சார்பில் ஒரு நபர் சந்தித்து சமரசம் செய்ய முயற்சித்துள்ளார்.

 

‘தினகரன் ஓவர் ஸ்பீடு போகிறார், இந்தத் தேர்தலில் அமமுக போட்டியிட்டால் அது திமுகவுக்கு சாதகமாகிவிடும். அதனால் போட்டியிடுவடைத் தவிர்க்கச் சொல்லுங்கள்’ என்று அந்த பாஜக பிரமுகர் சசிகலாவிடம் கூறியுள்ளார். மேலும், ‘இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் மீண்டும் போட்டியிடவைத்து வெற்றிபெறச்செய்வோம். அந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரோடும் அதிமுகவில் இணையச் சொல்லுங்கள். சட்டமன்ற இடைத்தேர்தலில் நிற்பதற்கான செலவுகளையும், அவர்களுக்கு கணிசமான தொகையும் கொடுக்கிறோம். ஆட்சியில் நீங்கள் சொல்பவருக்கு மந்திரி கொடுக்கிறோம். முடிவை சீக்கிரம் சொல்லுங்கள்’ என்றும் அவர் சசிகலாவிடம் சொல்லியிருக்கிறார்.

 

இதன் பின் சசிகலாவை சந்தித்த தினகரனிடம் இதை சசிகலா சொல்ல, தினகரன் அதற்கு சம்மதிக்கவில்லை. மேலும் வேட்பாளர் தேர்வுக்காகதான் சசிகலாவை சந்தித்ததாக வெளியே வந்து பேட்டியும் கொடுத்தார். இதையடுத்து அமமுக கூடாரத்தை காலிசெய்யவேண்டும் என்று ஆபரேஷனை துவங்கியுள்ளது அதிமுக. இதன்படி அமமுகவில் உள்ள ஒரு முன்னாள் அமைச்சரிடம் ஆளும் தரப்பு பேசியுள்ளது.

 

‘நீங்கள் எதிர்பார்ப்பதைவிட எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்க முதல்வர் ரெடியாகவிருக்கிறார், நீங்கள் தினகரனைச் சம்மதிக்க வையுங்கள் அல்லது நீங்கள் வெளியில் வாருங்கள்’ என்று அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் மாநில கூட்டுறவு வங்கி தலைவரும் முதல்வருக்கு நெருக்கமானவருமான சேலம் இளங்கோவன், அமமுக பிரமுகர்கள் வீட்டுக்கு நேரடியாகச் சென்று தூக்கத்திலிருந்தவர்களை எழுப்பிப் பேசியுள்ளார்.
இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் அதிமுக விஐபிகள் மூலம் அமமுகவினருக்கு வலை வீசப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம், பாஜக, அதிமுக என்று மும்முனைத் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார் தினகரன்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.