‘வாழையின் தோற்றம்’ குறித்த  ஒரு நாள் கருத்துப் பட்டறை

0

தமிழக பல்கலைக் கழகங்களில் பயிலும் அறிவியல் ஆராய்ச்சி மாணவர்களிடையே அறிவியல் ஆய்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, புதிய ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் “அராபிடோப்சிஸ் நுண் தாவரம் முதல் வாழை வரை” குறித்த ஒருநாள் கருத்துப் பட்டறை திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துருக்கி இஸ்தான்புல் பல்கலைக்கழக விஞ்ஞானியாகப் பணியாற்றும் தமிழகத்தை சார்ந்த முனைவர் ஆல்பர்ட் பிரேம்குமார் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு தொழில்நுட்ப விளக்க உரையாற்றினார். அவர் தனது உரையில் ‘அராபிடோப்சிஸ்’ நுண் தாவரம் சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உயிர்தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளில் பல்வேறு வகைகளில் தூண்டுகோலாக அமைந்து பல அறிய கண்டுபிடுப்புகளை நிகழ்த்த உறுதுணையாக உள்ளதாக கூறினார். பிறகு மாணவ மாணவியரின் அறிவியல் ஆய்வு குறித்த பல்வேறு கேள்விகளுக்கு தெளிவாக விளக்கமளித்து, அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

அத்துடன் பங்குபெற்ற மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில்உயிர்தொழில்நுட்பம் மற்றும் உயிர் தகவலியல் குறித்த பயனுள்ள மென்பொருட்களைப் பயன்படுத்தும் முறைகளை அறிமுகப்படுத்தி, அதில் பயிற்சியும் வழங்கினார். இன் நிகழ்ச்சியில் சிறப்புறையாற்றிய மைய இயக்குனர் முனைவர் திருமதி எஸ். உமா அவர்கள், தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன ஆராய்ச்சி வசதிகள், அதை முறையாகப் பயன்படுத்தி குறிப்பிடத்தக்க அளவில் பல்வேறு சர்வதேச கருத்தரங்களில் கலந்து கொண்டு வளரும் இளம் விஞ்ஞானி விருது பெற்றுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மைய ஆராய்ச்சி மாணவர்களின் சாதனைகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறி பங்கு பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

பல்வேறு தலைப்புகளில் இம்மைய முதன்மை விஞ்ஞானிகளான முனைவர்கள் எஸ். பாக்கியராணி, எம். மயில் வாகனன், ஐ. இரவி ஆகியோர் தொழில் நுட்பஉரை ஆற்றினார்கள்.  இந்நிகழ்ச்சியில் மதுரை காமராஜர் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகங்களைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்குகொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் நடத்தப்பட்ட அறிவியல் வினாடி வினா போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள் எ. பிரபாகரன் மற்றும் எச். ஓம் பிரகாஷ் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழும், தங்களின் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சியை கட்டணமின்றி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் மேற்கொள்ளும் ஆணையும் வழங்கப்பட்டது. மேலும், பங்கு பெற்ற  அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக முனைவர் ஐ. இரவி வரவேற்புரை ஆற்ற முறைவர் வ. குமார் நன்றி உரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.