ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

0
Business trichy

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோ ரதம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு அதிகாலை 4.15 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் கருடன் படம் பொறித்த கொடி புறப்பாடு நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் காலை 5.15 மணிக்கு தனுர் லக்னத்தில் தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு காலை 6.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை அடைந்து திருமஞ்சனம் கண்டருளினார்.

Kavi furniture

விழாவின் 2-ம் நாளான இன்று(வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் கருட மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். பின்னர் இரவு 9 மணியளவில் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளியபடி நாளை(வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஜீயபுரம் ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். அங்கு மாலை வரை பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் அங்கிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவில் கண்ணாடி அறையை வந்தடைகிறார்.

அதைத்தொடர்ந்து 16-ந்் தேதி தங்க கருட வாகனத்திலும், 17-ந் தேதி நம்பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், மாலை கற்பகவிருட்ச வாகனத்திலும் சித்திரை வீதிகளில் உற்சவர் பெருமாள் உலா வருகிறார்.

MDMK

பங்குனி உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக வருகிற 18-ந் தேதி அதிகாலை 3.30 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காவிரிக்கரையை கடந்து உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலை பகல் 11 மணியளவில் சென்றடைகிறார். அங்கு பகல் 2 மணி முதல் இரவு 12 மணி வரை கமலவல்லி நாச்சியாருடன் பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடக்கிறது.

19-ந் தேதி நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு கோவில் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார். 20-ந் தேதி நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து கோரதம்(பங்குனிதேர்) அருகே இரவு 8.45 மணியளவில் வையாளி கண்டருளுகிறார்.

21-ந் தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நம்பெருமாள்-ஸ்ரீரெங்கநாயகி தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணிக்கு தொடங்கி மறுநாள் (22-ந் தேதி) அதிகாலை வரை ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதி சேர்த்தி மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக அன்று மதியம் பெருமாள்-தாயார் ஊடல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பிரணயகலகம் எனப்படும் மட்டையடி வைபவம் ஆகியவை தாயார் சன்னதி முன்மண்டபத்தில் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 22-ந் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. 23-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இவ்விழா வருகிற 23-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் கே.என்.சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

-தினத்தந்தி

Pranav city

Leave A Reply

Your email address will not be published.