அறிவோம் தொல்லியல்-7 பயணங்கள் முடிவதில்லை…

கொடுமணல் பகுதிகளில் கிடைத்த தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட பொருட்கள் குறித்து கடந்த தொடரில் பார்த்தோம், இந்த வாரம் குறியீடுகள் மற்றும் பிராமி எழுத்துக்கள் குறித்து காண்போம்…
குறியீடுகள் மற்றும் பிராமி எழுத்துகள்:
சிந்துசமவெளி நாகரீகம் தொட்டு பெருங்கற்கால காலம் வரை குறியீடுகள் கிடைக்கிறது! இக்குறியீடுகளே பிராமி எழுத்து வடிவம் தோன்றுவதற்கு முன்னோடி என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வல்லம் அகழாய்வில் பிராமி எழுத்துரு பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் அதிக அளவில் கிடைக்க ஆரம்பித்தபின் குறியீடுகள் உள்ள ஓடுகள் எண்ணிக்கை குறைவாய் கிடைத்தது சிறப்பாகும்.
கொடுமணல் அகழாய்விலும், பெருங்கற்கால சின்னங்களில் குறியீடுகள் கிடைத்தது! குறியீடுகள் மற்றும் பிராமி எழுத்துகள் பானைகளை சுட்டபின்பே எழுதப்பட்டது. இவை பானையின் கழுத்து பகுதியில் எழுதப்பட்டன. 90% இவை கருப்பு சிவப்பு பானையோட்டிலே தான் கிடைக்கிறது,
இக்குறியீடுகளை தற்சமயம் நான்கு வகையாக பிரித்துள்ளனர். இவை ஒரு கருதுகோளே, மறுப்போரும் உண்டு.
1.பானை செய்வோரின் குறியீடு (Patter’s mark)
2.பானை உரிமையாளர் குறியீடு (Owner’s mark)
3.குலக்குறியீடு (Clan’s mark)
4.மலைவாழ் மக்கள் குறியீடு (Tribals mark)
கொடுமணலில் கிடைத்த சில குறியீடுகள், தமிழகத்தில் குறிப்பாக கொங்கர் புளியங்குளத்தில் கிடைத்த குறியீட்டுடன் ஒத்துபோகிறது. இதனை பொன்னின் அளவை குறிப்பதாக கருதுகின்றனர்.
பிராமி பொறிப்புகள் அன்றாடம் பயன்படுத்தும் பானைகள், குடுவைகளில் கிடைக்கவில்லை, ஈமச்சின்னங்களிலே கிடைக்கிறது, இதிலிருந்து இம்மக்கள் பிராமிக்கு கொடுத்த முக்கியத்துவம் தெரிகிறது. ஒருசில பானைகளில் பெரிதாய் எழுதியுள்ளனர், ஏனையவற்றில் 5 மி.மீ அளவில் எழுதியுள்ளனர். பெரும்பாலும் ஆட்கள் பெயரே உள்ளன கண்ணன், ஆதன், கூவிரன், பண்ணன், அந்தவன், அதன், வன்மூலன், சம்பன் போன்ற பெயர்கள் வருகிறது! ஆதன் என்ற பெயர் அடிக்கடி வருகிறது, இப்பெயர் சேரமரபினரோடு தொடர்புடையது, சுமார் இரு நூற்றாண்டு எழுத்துகள் கிடைத்தபோதில் வரிவடிவத்தில் மாற்றமில்லை.
இங்கு பரவலாய் கிடைத்த பிராமி எழுத்தினை வைத்து பார்க்கையில் இம்மக்கள் படிப்பறிவு, எழுத்தறிவிலும் சிறந்து விளங்கியதை உணரலாம். இந்திய அளவில் இங்குதான் அதிக அளவில் பிராமி பொறிப்பு கிடைத்துள்ளது. கால அடிப்படையில் கி.மு 4ஆம் நூற்றாண்டுக்கு கொண்டுசெல்கின்றனர். இதில் மாற்று கருத்தும் உண்டு.
இங்கு கிடைத்த அகழாய்வில் தெரியவருவது, சங்கால சேரரின் கொடுமணமே இன்றைய கொடுமணல், இம்மக்கள் விவசாயத்துடன், தொழில்நுட்ப அறிவிலும், வணிகத்திலும் சிறந்தவர்கள், எழுத்தறிவு மிக்கவர்கள், பெரிய குடியிருப்பு மற்றும் ஈமக்காடுடன் கூடிய நகரம் இது என்பதனை அறியமுடிகிறது.
பயன்பட்ட நூல்கள்:
1.கொடுமணல் அகழாய்வு(ர.பூங்குன்றன்)
2.கொடுமணல் அகழாய்வு ஓர் அறிமுகம் (க.ராஜன்)
3.பதிற்றுப்பத்து (சங்க இலக்கியம்)
4.புதிய தலைமுறை
வரும் வாரம் கரூர் நகரம் குறித்த தொன்மையை, அங்குநடைபெற்ற அகழாய்வினையும் காண்போம்.
