அருளமுதம் எனும் அருமருந்து உயிர் வளர்ப்போம்! கதை வழி மருத்துவம்-17

0
1

ஆகாயத்தின் தன்மைகளை கேட்டு அறிந்து கொண்ட மன்னனின் மனதில் தேர் வரும் பாதையில் விழுந்த பெண்ணுக்கு ஏன் உறக்கமின்மை ஏற்பட்டது. மேலும் உறக்கத்தோடு ஆகாயபூதம் எவ்வகையில் சம்மந்தப்படுகிறது என்ற ஐயம் உண்டானது. தனது ஐயப்பாட்டினை மன்னன் யோகியாருக்கு பணிவுடன் எடுத்துரைத்து பதில்  வேண்டினான். அதற்கு யோகியார்,”மன்னா, முன்னர் நான் கூறியது போல மனமே நமது உடலில் ஆகாயமாக விளங்குகிறது அதனுடன் தொடர்பிலுள்ள கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகிய உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும் பொழுது உடலில் வெப்பம் அதிகரித்து மனம் ஓய்வெடுக்கும் செயலாகிய உறக்கத்தினை பாதிக்கின்றது.

பாதிக்கப்பட்ட ஆற்றல் இழந்திருந்த ஆகாய பூதத்தினை தூண்டிய உடன் மனம் புத்துயிர் பெற்று இயங்க தொடங்கியது. இதுவே இப்பெண்ணின் பாதிப்பு மற்றும் சிகிச்சையின் அடிப்படை ஆகும்” என விளக்கினார். உடனே மன்னன் யோகியாரிடம் “அய்யனே, நமது உடலில் அவ்வாறான வெப்பம் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட்டு ஆகாய பூதமும் அது சார்ந்த உறுப்புகளும் பாதிக்கப்படாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? என வினவினான். மன்னனின் அக்கேள்வியை பாராட்டிய யோகியார் “மன்னா, நமது உடல் வெப்பமடைவதை தடுக்கவே அன்றாடம் உடல் சுத்தி செய்கின்றோம். மேலும் வாரம் இருமுறை எண்ணெய் குளியலும் மேற்கொள்கிறோம், அப்படி இருந்தும் உடலில் உஷ்ணம் தோன்றுவதை உணர்வோமாயின் இரண்டு விசேட குளியல் முறைகளை கையாளலாம். அவற்றில் முதலாவது தேங்காய் பால் குளியல். ஒரு முழு தேங்காயை கீறி அறைத்து அதிலிருந்து பாலினை பிழிந்து எடுத்தல் வேண்டும்.

சுமார் 1/2 படி அளவு (1/2 லிட்டர்) பாலினை உடலில் உச்சிமுதல் பாதம் வரை ஒவ்வொரு அங்கத்திலும் நன்கு தேய்க்க வேண்டும். அவ்வாறு தேய்த்த பின்னர் இரண்டு நாழிகைகள் (48 நிமிடம்) அப்படியே நிழலில் அமர்ந்திருத்தல் வேண்டும். இந்த நேரத்தில் உறங்குவது, தியானம் மேற்கொள்வது அல்லது யோகத்தில் ஈடுபடுவது கூடாது அமைதியான மனநிலையில் அசைவின்றி அமர்ந்திருத்தல் வேண்டும். அதன்பின்னர் இளம் சுடு நீரில் குளிக்க வேண்டும். இது உடலினை நன்கு குளிர்ச்சி படுத்துவதுடன் பல்வேறு சரும நோய்ககளிலிருந்து விடுதலை அளித்திடும். இரண்டாவது பஞ்ச கல்பம் எனும் ஆற்றல் வாய்ந்த குளியல் முறையை காண்போம். வேப்பங்கொழுந்து, நெல்லி வற்றல், உயர்ரக விரளி மஞ்சள் (கஸ்தூரி மஞ்சள்), வசம்பு, மிளகு ஆகியவற்றை ஒவ்வொன்றிலும் (9 கிராம்) கால் பலம் எடுத்து பசும்பாலுடன் சேர்த்து, ஊறவைத்து விழுதுபோல் அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதனை உச்சந்தலை முதல் பாதம் வரை நன்கு தேய்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் 1 சாமம்(3 மணி நேரம்) அப்படியே நிழலில் அமர்ந்து ஓய்வெடுக்க வேண்டும். உறக்கம், தியானம், யோகம் ஆகியவற்றை தவிர்த்து அமைதியான மனத்துடன் அமர்ந்திருக்க வேண்டும். இதன்பின்னர் இளம் சுடுநீரில் குளித்தல் வேண்டும். இவ்வாறு 15 நாட்களுக்கு ஒருமுறை குளித்து வர உடலில் எந்தவித உஷ்ண தாக்குதலும் ஏற்படாது” என விளக்கினார்.

4
2

யோகியார் விளக்கி முடித்ததும், இனிமையான இசை வாத்தியங்கள், மேளதாளங்களின் ஓசை அனைவரின் செவிகளிலும் ஒலித்து அவர்கள் தலைநகரினை நெருங்குவதை பறைசாற்ற தொடங்கியது. யோகியாரின் வருகையை கவுரவப்படுத்தும் விதமாக தலைநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தலைநகரின் பிரதான வாயிலில் யானைகள் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தன. ஆடல், பாடல், இசை என பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்படாகி இருந்தன. யோகியாரின் தேர் தலைநகரின் வாயிலில் நுழைந்தவுடன் யானைகள் மலர் தூவி வரவேற்றன. கோட்டை வாயிலை நோக்கி சென்ற போது பாதையின் இருபுறத்திலும் மக்கள் வெள்ளமென திரண்டு வந்திருந்தனர். யோகியார் கற்பிக்க இருக்கும் புதிய வகை “அக்குயோகா” எனும் ஞான மருத்துவம் பற்றியும், யோகியர் நிகழ்த்திய அதிசயங்கள் பற்றியும் மக்கள் ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்தனர்.

யோகியாரின் வழிகாட்டுதலோடு மன்னன் தொடங்க உள்ள மருத்துவ பாடசாலை மற்றும் மருத்துவமனை இரண்டும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அவர்கள் கோட்டை வாயிலை நெருங்கியதும் மிக நீளமான தாரை எனப்படும் காற்று இசைக்கருவிகள் இருமருங்கிலும் ஒரே நாதமாக முழக்கப்பட்டன. மன்னனின் மாபெரும் கோட்டை பரந்து விரிந்திருந்தது. கோட்டை வாயில் செம்மை நிற கற்களால் கட்டப்பட்டிருந்தது. வாயில் கதவு நீல நிறத்தில் பளிச்சிட்டது. கோட்டை வாயிலில் மகாராணியார் உட்பட அரசவையின் முக்கிய பிரதிநிதிகள் அணிவகுத்து காத்திருந்தனர். அவர்களின் தேர் கோட்டை வாயிலை நெருங்கியதும் பிரம்மாண்டமான நீல கதவுகள் திறக்கப்பட்டன. அனைவரும் பணிவுடன் யோகியாரை வரவேற்றனர்.

யோகியாரும் அனைவருக்கும் தன் வணக்கத்தினை தெரிவித்தபடி தேரிலிருந்து இறங்கினார். மன்னன் யோகியாரை வரவேற்பு மண்டபத்திலிருந்து அரசவைக்கு அழைத்து சென்றான். அரசவையின் உயர்ந்த பீடம் ஒன்றில் அலங்காரம் நிறைந்த சிம்மாசனம் போடப்பட்டிருந்தது. அதிலிருந்த வேலைப்பாடுகள் அந்த ஆசனம் நாடாளும் அரசனுடையது என்பதை பறைசாற்றிக் கொண்டிருந்தன. மன்னன் யோகியாரை கவுரவப்படுத்தும் விதமாக யோகியாரை தனது ஆசனத்தில் அமரும்படி பணிந்து வேண்டினான். யோகியாரும் மன்னனின் அன்புக்கு கட்டுப்பட்டவராய் அவ்வாசனத்தில் அமர்ந்தார். மன்னனின் மகள் சந்திரவதி ஆவலுடன் ஓடி வந்து தந்தையை அணைத்துக் கொண்டாள். இந்த சின்னஞ்சிறு பெண்தான் நடக்கின்ற அத்தனை நிகழ்வுகளுக்கும் காரணமான கேள்வியை கேட்டவள் என மன்னன் யோகியாரிடம் தெரிவித்தான். “நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் அப்பா” என சந்திரவதி மன்னனை துளைத்தெடுக்க தொடங்கினாள்.

கேள்விகள் தொடரும்…

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்