திருச்சிக்கு யார் எம்.பி.யாக வரவேண்டும்

0
1 full

திருச்சிக்கு யார் எம்.பி.யாக வரவேண்டும்.

பொதுவாக,
எம்பியானவர்,
தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல,
நாடாளுமன்றத்தில் உள்ள நிலைக்குழுவில் ஏதாவது ஒன்றில் உறுப்பினரும் கூட.

 

மேலும்,
திருச்சியைப் பொறுத்து,
மத்தியஅரசின் பல்வேறு அமைச்சகங்கள் கட்டுப்பாட்டில் வரும் ஏராளமான நிறுவனங்கள் அதிகஅளவில் உள்ளன.

2 full

இங்கு,
மத்தியஅரசின் கனரக தொழிற்துறை அமைச்சகம் (Ministry of Heavy Industres) கட்டுப்பாட்டில் உள்ள,
மகாரத்னா மதிப்பு பெற்ற (Maha Rathna Category)
பாரத மிகுமின் நிறுவனம் (Bharath Heavy Electricals Limited – BHEL) உள்ளது.
இந்த BHEL கட்டுப்பாட்டில் உள்ள உலகின் தலைசிறந்த “பற்றவைப்பு ஆய்வு நிறுவனம் – Welding Research Institute – WRI உள்ளது. இந்த BHEL மற்றும் இதன் சார்பு நிறுவனங்கள் தொடர்பாக ஏராளமான கவனிக்கத்தக்க விசயங்கள் உள்ளன. இதைப்பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் பேசுவதற்கு குறைந்தபட்ச தொழிற்துறை அறிவு உள்ளவராவது வேண்டும்.

 

 

இந்தியாவில் எந்த இரண்டாம்நிலை மாநகராட்சியிலும் இல்லாத அளவில் பதிமூன்று தேசிய, மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகள் இங்கு உள்ளன.
திருச்சிராப்பள்ளியைச் சுற்றி வட்டச்சாலை இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
ஆனால் அரைவட்டச்சாலை பல பிரச்சனைகளால் முடங்கியுள்ளது. இது விசயமாக மத்திய நெடுஞ்சாலைத்துறை (Ministry of Road Transport) அமைச்சகத்திடம் பேசி பிரச்சனையை முடிக்கும் அளவுக்கு அறிவுள்ளவராக மேண்டும்.

 

இரயில்வே துறையைப் பொறுத்தமட்டில் கணக்கிலடங்கா பிரச்சினைகள் உள்ளன.
தென்னக இரயில்வேயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பினது மிக முக்கியமான இலாபம் ஈட்டும் கோட்டமாகும்.
ஆனால் கோட்டத்தின் எல்லையானது நியாயமற்று உள்ளது. மாநகராட்சி எல்லைக்குள்ளே வரும், கே.கே.நகர், எடமலைப்பட்டி புதூர் மதுரைக் கோட்டத்திற்குட்பட்டதாகும். கோட்டை இரயில் நிலையத்தை தாண்டினால் சேலம் கோட்ட எல்லை ஆரம்பித்துவிடும்.
இவை சரிசெய்யப்பட வேண்டும்.
இன்றுவரை இல்லாத “திருச்சி – பெங்களூரு இண்டர்சிட்டி”,
பம்பாய் மற்றும் டெல்லி நேரடி இணைப்பு,
திருச்சியின் பாரம்பரிய அடையாளமாகிய பல்லவன் விரைவுவண்டியை மீண்டும் திருச்சியிலிருந்தே இயங்க வைத்தல்,
“திருச்சி – பாலக்காடு (வழி பொள்ளாச்சி) இண்டர்சிட்டி”,
பாரதிதாசன் பலககலைக்கழகம், இந்திய மேலாண்மை நிறுவனம், அணணா பல்கலைக்கழகம் போன்றவற்றிற்கு பயணிகள் இரயில் சேவை செய்து தருதல், பொன்மலை பணிமனையை இரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையாக தரம் உயர்த்துதல், உள்ளிட்ட எண்ணிலடங்கா பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட இரயில்வே அமைச்சகத்திடம் (Ministry of Railways) பேசி புரியவைத்து தீர்த்து வைக்கும் ஆற்றலுள்ள மனிதராக இருக்கவேண்டும்.

 

 

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தைப் பொறுத்து,
திருச்சிராப்பள்ளி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்பியானவர்,
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தின் வளர்ச்சி மற்றும் ஆலோசனைக்குழு தலைவராக இருப்பார்.
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தைப் பொறுத்த அளவில் இதுவரை இப்பதவிக்கு வந்தவர்கள் இப்பதவியின் முக்கியத்துவம் தெரியாமல் வெறுமனே இருக்கையை தேய்த்துச் சென்றவர்களாகவே இருந்தனர்.
விமானநிலையத்தின் முக்கியத்துவம் கருதாது இதன்மீது எவ்விதமான அக்கறையும் துளியும் இன்றி விமானநிலையத்தை கவனிப்பாரின்றி வீணடித்தனர். திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தைச் சார்ந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளில் உள்ளனர்.

 

திருச்சிராப்பள்ளியில் இருந்து வளைகுடாநாடுகளின், குவைத், தோஹா, ஜித்தா, ரியாத், தம்மாம், பஹ்ரைன், அபுதாபி, மஸ்கத் போன்ற விமானநிலையங்களுக்கு நேரடி விமானசேவை இல்லாது கடுமையான சிரமத்திற்குள்ளாகின்றனர். இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கக்கூடியவராக இருக்கவேண்டும். மேலும் வெற்றிகரமாக பத்தாவது ஆண்டாக திருச்சிராப்பள்ளி விமானநிலைய ஓடுதள விரிவாக்கம் இழுத்துக்கொண்டே இருக்கிறது. இதன்காரணமாக இன்றைய அளவிலேயே ஏர் லங்கா, ஏர் ஏசியா மற்றும் ஸ்கூட் ஏர் பெரிய ரக விமானங்கள் இயக்க தயாராக இருந்தும் ஓடுதளமில்லாததால் இயக்க முடியாமல் உள்ளன.

 

மேலும் இங்கு புதிய முன்மாதிரி பயணிகள் முனையம் (Role model terminal) கட்டப்பட்டு வருகின்றது. இந்த விசயங்களை கையாள மத்திய பயணிகள் போக்குவரத்து விமான அமைச்சத்திடம் (Ministry of Civil Aviation) பேசும் ஆற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.

 

திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தில் ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. இது விசயமாக, மத்திய தொழில் மற்றும் வணிக அமைச்சகம் (Ministry of Industries Commerce), விவசாய அமைச்சகம் (Ministry of Agriculture), வனத்துறை அமைச்சகம் (Ministry of Forestry),
உணவு பதப்படுத்தும் அமைச்சகம் (Ministry of Food Processing) உள்ளிட்ட அணைத்து அமைச்சகத்திடமும் பேசி சரிசெய்யப்படவேண்டிய எண்ணற்ற ஏராளமான விசயங்கள் உள்ளன. அதற்கு தகுதியான நபராக இருக்கவேண்டும்.

 

 

திருச்சிராப்பள்ளி மாநகரானது
ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில்,
முன்மாதிரியாகவும் முதலாகவும் “ஒருங்கிணைந்த மெட்ரோ போக்குவரத்து திட்டம் Unified Metro Transport Authority – UMTA” அறிவிக்கப்பட்டு ஆட்சி மாற்றத்தால் கைவிடப்பட்டு வராமல் போனது. இந்த திட்டத்தை மீண்டும் திருச்சிராப்பள்ளியில் செயல்படுத்த,
மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திடம் (Central Urban Ministry) பேசி செயல்படுத்தக்கூடியவராக இருக்கவேண்டும்.

 

 

தற்போது திருச்சிராப்பள்ளியானது, மத்தியஅரசின் “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டைப் பெற்று திட்டத்தை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திடம் (Central Urban Ministry) பேசி செயல்படுத்தக்கூடியவராக இருக்கவேண்டும்.

 

 

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டம் – Jawaharlal Nehru National Urban Renewal Mission – JNNURM ல் ஏற்கனவே இருந்த எம்பியின் கவனக்குறைவால் தமிழகத்தில் திருச்சிராப்பள்ளியானது சேர்க்கப்படவில்லை. இதுவிசயமாகவும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திடம் (Central Urban Ministry) பேசி செயல்படுத்தக்கூடியவராக இருக்கவேண்டும்.

 

 

ஏற்கனவே மத்தியஅரசால் திருச்சியில் அனுமதிக்கப்பட்ட ஜவுளிப் பூங்கா தொடங்க இன்றுவரை முயற்சிக்கப்படவில்லை.
வருகின்ற எம்பியானவர் இது விசயமாக மத்திய ஜவுளி அமைச்சகத்திடம் (Ministry of Textiles) பேசி தேவையான நடவடிக்கை எடுக்க்கூடியவராக இருக்கவேண்டும்.

 

 

ஒரு காலத்தில் BHELக்கு அடுத்து திருச்சிராப்பள்ளியின் தொழில்துறை அடையாளமாகிய செயற்கை வைரம் வெட்டுதல் மற்றும் பட்டைதீட்டுதல் (Artificial Gem Cutting and Polishing) இன்று அடையாளம் தெரியாமல் நசிந்துபோய் உள்ளது. மத்தியஅரசும் இதற்கு முயற்சி செய்கிறேன் என்று சொன்தோடு சரி. இன்றுவரை முயற்சிக்கவில்லை. இந்தத் தொழில் தொடர்பான ஆயிரக்கணக்கான மனிதவளங்கள் பயனற்றுள்ளன.

 

அதேபோல் ஏற்கனவே மத்தியஅரசின் அறிவிப்பின்படி திருச்சிராப்பள்ளியில் தொடங்கப்படும் என்றிருந்த “தங்க நகை வடிவமைப்பு கிளஸ்டர்” திட்டம் என்னவாயிற்று எனத் தெரியவில்லை. வரக்கூடிய எம்பியினவர் இது விசயமாக மத்திய நுண், குறு, சிறு தொழில் அமைச்சகத்திடம் (Minisry of MSME) பேசி இத்திட்டங்களை செயல்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்குபவராக இருக்கவேண்டும்.

 

 

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நகரமாக விளங்கக்கூடிய திருச்சிராப்பள்ளியில்,
தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (NIT),
இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் (IIM),
தேசிய சட்டப்பள்ளி (NLS),
இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (IIIT),
தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NBRC) உள்ளிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடனும் ( Ministry of Human Resources) மற்ற சம்பந்தப்பட்ட துறைகளுடனும் தொடர்புடைய ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன.
இவற்றில் துறை மேம்பாடு, ஆய்வு உள்ளிட்ட பல விசயங்களுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சகத்துடன் பேசவேண்டும். அதற்கு ஒரு அறிவார்ந்த, படித்த, படிப்பின் முக்கியத்துவம் தெரிந்த எம்பி ஆக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

 

 

மருத்துவத்துறையைப் பொறுத்து தொடர்ந்து திருச்சிராப்பள்ளியானது மத்தியஅரசால் புறக்கணிக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டும் வஞ்சிக்கப்பட்டும் வருகிறது.
திருச்சிராப்பள்ளியில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையோ,
அல்லது எய்ம்ஸ்க்கு நிகரான மருத்துவமனையோ,
அல்லது பெங்களூருவில் உள்ள “தேசிய மனநிலை ஆரோக்கியம் மற்றும் நரம்பு அறிவியல் கழகம்” – NIMHANS போன்ற மற்ற ஏதாவது ஒரு சிறப்பு மருத்துவமனையாவது வேண்டும். அப்போதுதான் திருச்சிராப்பள்ளியின் மருத்துவத்தேவை ஓரளவுக்கு பூர்த்தி அடையும்.

 

இதைப்பற்றி மத்திய சுகாதரத்துறை அமைச்சகத்திடம் (Ministry of Health) பேச, அவசியத்தை உணரவைக்க, தகுதியுடைய எம்பி வேண்டும்.

திருச்சிராப்பள்ளியைப் பொறுத்து நிறைய நெடுஞ்சாலைகள் போடப்படவேண்டிய தேவை உள்ளது. இதில் மிகப்பெரிய இடர்பாடு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே (Ministry of Environment and Forestry).
சட்டப்படி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தேவையை பூர்த்தி செய்து அவர்களின் அனுமதியைப்பெற்றிட சூழியல் முக்கியத்துவம் தெரிந்த,
சூழியல் பாதிக்காத அளவில் திட்டங்கள் வடிவமைக்கக்கூடிய,
தாவரங்கள், விலங்குகள் (Flora & Fauna) இருப்பிட சூழல் பாதிக்காத அளவில் திட்டங்கள் வகுக்கக்கூடிய அறிவார்ந்த நபர் எம்பியாக இருப்பது அவசியமாகிறது.

 

 

அனைத்திற்கும் மேலாக,
திருச்சிராப்பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிய தடைக்கல்லாக இருப்பது மத்திய இராணுவ அமைச்சகமே (Ministry of Defence)!
இதைப்படிக்கும் பலபேருக்கு இது அதிரச்சியாகக்கூட இருக்கலாம்.
ஆனால் அதுதான் உண்மை.
ஆம்,
திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மத்திய மண்டலத்தின் முக்கிய பொருளாதார மையத்தில் ஒன்று திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையமாகும். இந்த விமானநிலையத்தை, இந்தியாவின் இரண்டாம்நிலை முன்மாதிரி விமானநிலையமாக முன்னெடுத்து, ஏற்கனவே மத்தியஅரசின் பயணிகள் விமானப்போக்குவரத்து அமைச்சகம்,
உலகமே வியக்கும் வடிவமைப்பில் ஒரு முன்மாதிரி பயணிகள் முனையத்தை கட்டிவருகின்றது.

 

ஆனால்,
விமானநிலைய விரிவாக்கம் என்று வரும்போது,
இராணுவ நிலம் குறுக்கே நிற்கிறது.
இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமமும் கடந்த 10 வருடங்களாக மாநிலஅரசிடம் விமானநிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கு இடம் கேட்டு போராடி வருகின்றது.
ஆனாலும் ஓடுதள விரிவாக்கமானது இன்னும் சாத்தியப்படவில்லை.
மாநிலஅரசின் சுணக்கம் தான்டி உண்மை என்னவென்றால்,
விமானநிலைய விரிவாக்கத்திற்கு தேவையான இராணுவ நிலத்தை மாநிலஅரசு கையகப்படுத்தும் பட்சத்தில்,
இராணுவ அமைச்சகத்தின் விதிப்படி, கையகப்படுத்தும் நிலத்திற்கு ஈடான சந்தை மதிப்புள்ள மாற்று இடத்தினை, இராணுவ அமைச்சகத்திற்கு மாநிலஅரசு வழங்கவேண்டும்.
மாநிலஅரசு பதிலீடாக தரும் நிலத்தை இராணுவ அமைச்சகம் ஏற்க மறுக்கிறது.

 

இதேபோல்,
திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அரிஸ்டோ மேம்பாலம் ஆண்டுக்கணக்கில் தொங்கிக்கொண்டுள்ளது. கடுமையான போக்குவரத்து நெருக்கடியில் மத்தியப் பேருந்துநிலையம் தினமும் சிக்கித் தவித்து வருகின்றது. காரணம் வெறும் 66 சென்ட் இராணுவ நிலத்தை இராணுவ அமைச்சகமானது “இராணுவ விதியைக்” காரணம் காட்டி தர மறுப்பதே.

 

ஆனால்,
மகாராஷ்ட்ராவின் புனேவில் போடப்பட்ட சாலைகள் மற்றும் விமானநிலைய விரிவாக்கத்திற்கு ஈடாக மகாராஷ்ட்ரா அரசு கொடுத்த நிலத்தை எதன் அடிப்படையில் ஒப்புக்கொண்டது, தமிழகஅரசு தரும் நிலத்தை எதன் அடிப்படையில் ஒப்புக்கொள்ளவில்லை என்பது இராணுவ அமைச்சகத்திற்கே தெரிந்த இராணுவ இரகசியம்.

இம்மாதிரியான நுட்பமான பிரச்சினைகளை வரக்கூடிய எம்பியானவர் தீர்த்து வைக்கவேண்டும். இராணவ அமைச்சகத்துடன் பேசி பிரச்சனையை தீர்த்துவைக்கக்கூடிய எம்பி வேண்டுமே தவிர, காலத்தை ஓட்டும் எம்பி தேவையில்லை.
மேலும் ஏற்கனவே இராணுவ அமைச்சகத்திற்கு சொந்தமான “படைக்கலன் தொழிற்சாலை – OFT” திருச்சிராப்பள்ளியில் உள்ளது.
அதுமட்டுமன்றி,
மத்தியஅரசின் தற்போதைய “இராணுவ வழித்தடம் – Defence corridor” திடடத்தில் திருச்சிராப்பள்ளியின் OFT மற்றும் BHEL ஆகியன முக்கிய பங்களிக்கவுள்ளது.

 

இதுவிசயமாகவும் திருச்சிராப்பள்ளியின் எம்பியினவர் இராணுவ அமைச்சகத்துடன் அடிக்கடி பேசவேண்டிய தேவையுடயவராக இருப்பார்.
இதற்கேற்ற தகுதியுடையவராய் எம்பி இருத்தல் அவசியம்.

தமிழ்நாட்டின் மற்றெந்த எம்பிக்களைவிட திருச்சிராப்பள்ளி எம்பிக்கு பொறுப்புகளும் தேவைகளும் முக்கியத்துவமும் அதிகம்.
வெறுமனே மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்வது மட்டுமல்ல,
மத்தியஅரசின்,
கனரகத் தொழில்கள் அமைச்சகம்,
தொழில் மற்றும் வணிக அமைச்சகம்,
நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம்,
பயணிகள் விமானப்போக்குவரத்து அமைச்சகம்,
இரயில்வே அமைச்சகம்,
வேளான் அமைச்சகம்,
மனிதவள அமைச்சகம்,
உணவு பதப்படுத்தும் அமைச்சகம்,
சுகாதார அமைச்சகம்,
போக்குவரத்து அமைச்சகம்,
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்,
இராணுவ அமைச்சகம்
என்ற சகல அமைச்சகத்துடனும் பேச வேண்டிய தேவை இருக்கிறது.

 

 

ஆகவே திருச்சிராப்பள்ளி எம்பி ஆனவர்,
மேற்சொன்ன அனைத்து தேவைகளையும் முதலில் புரிந்துகொள்ளக்கூடிய புரிந்துணர்வு உள்ளவராக,
பிரச்சினையை தீர்க்கவல்ல அறிவானவராக,
மற்ற அமைச்சகங்களிடம் தேவையை விளக்கி, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கூறி புரியவைக்கும் அளவிற்கு ஆங்கில அறிவுள்ளவராக,
தேவையுடைய அனைவரும்,
அதாவது தொழிற்துறையினர், தொழில் முனைவோர்கள், வியாபாரிகள், தொழில் முதலீட்டாளர்கள், ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் ஆகியோர் தேவைகளை புரிந்துக்கொள்ளும் குறைந்தபட்ச பொருளாதார அறிவாவது உள்ளவராக,
வெளிநாடுவாழ் இந்தியர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும், இவரிடம் நமது தேவையையோ கோரிக்கையையோ தயங்காமல் சொல்லலாம் என நம்பும் நம்பிக்கையாளராக,
அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கவல்ல தகுதியுடையவராக,
மத்திய அமைச்சகங்கள் மதிக்கும் அளவிற்கு கல்வித்தகுதியுடையவராக,
அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைப்பாளராக,
பண்பாளராக,
பொதுமக்களை, பிறரை மதிக்கும் நாகரீகம் தெரிந்தவராக,
இந்தியஅளவில் திருச்சிராப்பள்ளி மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மரியாதையை உயர்த்துபவராக,
பெருமைப்படுத்துபவராக இருக்கவேண்டும்.

 

கடந்த காலங்களில் தகுதியற்ற எம்பிக்களால் திருச்சிராப்பள்ளியானது அனைத்து துறைகளிலும் சந்தித்த பேரழிவுகளை திருச்சிராப்பள்ளி மக்கள் அனைவரும் நன்கறிவர்.
ஆகவே திருச்சிராப்பள்ளி மக்கள் இம்முறையாவது,
ஒரு தகுதியுடைய,
தனது வேலை என்ன?
தனது பொறுப்புகள் என்ன?
என்று தெரிந்த எம்பியை தேர்ந்தெடுத்து திருச்சிராப்பள்ளியின் அடுத்தகட்ட வளர்ச்சியை உறுதி செய்வார்கள் என நம்புவோமாக!
அரசியல் கட்சிகளும் அதற்கேற்ப திருச்சிராப்பள்ளியில் அனைத்து தகுதிகளும் பெற்ற, அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேட்பாளரை போட்டியிடச் செய்யும் என நம்புவோமாக!

 

-Ubaidullah Habeebullah

3 half

Leave A Reply

Your email address will not be published.