மருத்துவமும், அரசியலும் மக்களுக்கு சேவை செய்யத்தான்… பா.ஜ.கவினால் ஒருகாலமும் தமிழகத்திற்கு நல்லது நடக்காது!

0
Business trichy

மருத்துவமும், அரசியலும் மக்களுக்கு சேவை செய்யத்தான்… பா.ஜ.கவினால் ஒருகாலமும் தமிழகத்திற்கு நல்லது நடக்காது!

‘மக்களுக்கு சேவை செய்வதே என் பணி’ என மருத்துவத்திலும், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சேவையாற்றி வருகிறார் சாதனைப் பெண்மணி ‘டாக்டர் ரொஹையா ஷேக்முகமது’.

loan point

மகப்பேறு மருத்துவர், ம.தி.மு.கவின் மாநில மகளிரணிச் செயலாளர், ம.தி.மு.கவின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் என பிஸியாக இருப்பவரை, திருச்சி தில்லைநகர் 10-வது கிராஸில் உள்ள அவரது ‘பாத்திமா மருத்துவமனை’யில் நேரில் சந்தித்து பேசினோம்.

 

nammalvar

உங்களைப் பற்றி?

நான் பிறந்தது திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி. திருச்சி ஹோலிகிராஸ்ல தான் பள்ளிப் படிப்பை முடிச்சேன். சென்னை ராமச்சந்திரா யுனிவர்சிட்டியில மெடிசின் படிச்சேன். எங்க ஊர்ல 8-வதுக்கு மேல பொண்ணுங்களை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாங்க. பொண்ணுங்க வயசுக்கு வர்ற வரைக்கும் தான் ஸ்கூலுக்கு அனுப்புவாங்க. வயசுக்கு வந்துட்டா படிப்பை நிப்பாட்டிட்டு வீட்லயே இருக்க வச்சிடுவாங்க. இல்லாட்டி, கல்யாணம் பண்ணிக் கொடுத்துடுவாங்க. நான் காலேஜ் போறவரைக்குமே அந்த நிலைமை தான் எங்க ஊர்ல இருந்துச்சி. அந்த கிராமத்துல முதல் இன்ஜினியர் எங்க அப்பா தான். நான் டாக்டர் ஆகணும்னு என்னோட ஆசையை என் அப்பாகிட்ட சொல்ல, அவர் கொடுத்த க்ரீன் சிக்னலால தான் இன்னைக்கு நான் டாக்டராக இருக்கேன்.

மருத்துவம் படிக்க என்ன காரணம்?

என்னோட தம்பிக்கு ஹார்ட்ல பிராப்ளம் இருந்துச்சி. நான் ஸ்கூல் படிச்சிக்கிட்டு இருந்த சமயத்துல அவனை அடிக்கடி ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போவோம். அந்த சமயத்துல இருந்தே ஹாஸ்பிட்டல் வாசம் எனக்குள்ள இறங்கிடுச்சி. கையில காசில்லாம மருத்துவத்துக்காக கஷ்டப்படுற ஏழை மக்களுக்கு, நம்மால முடிஞ்ச உதவி எதையாவது செய்யணும்னு நெனச்சேன். அந்த நெனப்பு தான் இன்னைக்கு என்ன டாக்டராக்கியிருக்கு. இன்னைக்கு என் பையன் அபியையும் டாக்டருக்கு படிக்க வச்சிக்கிட்டு இருக்கேன்.

மகப்பேறு மருத்துவத்தை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?


மருத்துவத்திலேயே மற்ற துறைகளைக் காட்டிலும் மகப்பேறு மருத்துவம் கொஞ்சம் ஸ்பெஷலானது. சந்தோஷமாக டாக்டரை பார்க்க வந்து சந்தோஷமாக வீட்டுக்கு போவது மகப்பேறு மருத்துவத்தில் தான். அதுமட்டுமில்லாமல், கணவனிடம் கூட சொல்லக் கூச்சப்படும் விஷயங்களை மகப்பேறு மருத்துவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். ஒரு குழந்தையை பெற்றெடுத்து அவர்களது கையில் கொடுக்கையில் அவர்கள் முகம் அடைகின்ற மகிழ்ச்சி இருக்கின்றதே!… அதற்காகத் தான் மகப்பேறு மருத்துவத்தை தேர்ந்தெடுத்தேன். இன்றைக்கும் வாரத்திற்கு ஒருமுறை மருத்துவ வசதியில்லாத கிராமங்களுக்குச் சென்று, கர்பிணிப் பெண்களுக்கு இலவசமாக ஸ்கேன் மற்றும் மருத்துவ உதவிகளை செய்து வருகிறேன். இது இன்றைக்கு நேற்றல்ல, கிட்டத்தட்ட 15 வருடங்களாக செய்து வருகிறேன்.

 

உங்களுடைய மெடிக்கல் சர்வீசில் மறக்க முடியாத சம்பவம்?

திருமணமாகி கிட்டத்தட்ட 6 வருடங்களாக குழந்தைப் பேறில்லாத ஒரு தம்பதி என்னிடம் சிகிச்சைக்காக வந்தார்கள். சிகிச்சைக்குப் பின்னர் அந்தப் பெண் இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுத்தார். மறுபடியும் அந்தப்பெண் கருவுற்றிருப்பதாக என்னிடம் வந்தார். அப்போதும் இரட்டைக் குழந்தை பிறந்தது. அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம். சில மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் வயிற்றில் ஏதோ வலி இருப்பதாக என்னிடம் வந்தார்.

பரிசோதித்துப் பார்க்கையில் மறுபடியும் இரட்டைக் குழந்தை கருவில் உருவாகியிருப்பது தெரியவந்தது. அவர்களுக்கோ நம்ப முடியாத ஆச்சர்யம். அந்தக் குழந்தையையும் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். கிட்டத்தட்ட 6 வருடங்களாக குழந்தையில்லாமல் கஷ்டப்பட்டிருந்தவர்கள், இன்றைக்கு 6 குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். என் மனதுக்கு நெருக்கமான நினைவில் இதுவும் ஒன்று.

அதைப்போலவே, எட்டு வருடங்களுக்கு முன்பு கர்பப்பை சிகிச்சைக்காக என்னிடம் ஒரு பெண்மணி வந்தார். அவருக்கு சிகிச்சையளித்து நலமுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண் என்னுடைய மருத்துவமனைக்கு வந்தார். அவருடைய மகனுக்கு திருமணம் வைத்திருப்பதாகவும், அதில் நிச்சயமாக கலந்துகொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார்.

web designer

அன்று மழை காரணமாக மதியம் 2 மணிக்குத் தான் அந்த திருமண நிகழ்ச்சிக்குச் சென்றேன். நான் வந்தபிறகு தான் மணமக்கள் கேக் வெட்ட வேண்டும் என காத்திருந்ததாக அவர்கள் சொன்னார்கள். மனதுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி என்னுடைய மெடிக்கல் சர்வீஸ் எக்கச்சக்கமான பசுமையான நினைவுகள் நிறைய இருக்கின்றன.

 

மருத்துவராக இருந்த நீங்கள் அரசியலில் இறங்கியது எப்படி?

என்னுடைய அப்பா ம.தி.மு.கவில் முக்கியத் தலைவராக இருந்தார். எனக்கு சின்ன வயதிலிருந்தே தலைவர் வைகோ அவர்களை நன்கு தெரியும். கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின் போது தலைவர் வைகோ அவர்கள், திருச்சி மாநகர மேயர் வேட்பாளராக போட்டியிடுமாறு என்னிடம் கேட்டார். அரசியலில் இறங்கினால், மருத்துவப் பணி பாதிக்குமோ என ஆரம்பத்தில் யோசித்தேன். பிறகு தலைவர் வைகோ அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாநகர மேயர் வேட்பாளராக ம.தி.மு.க சார்பில் தனித்து களம் இறங்கி 40 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தேன்.

ஒரு மருத்துவரான என்னை மக்கள் ஆதரித்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மக்கள் கொடுத்த அந்த நம்பிக்கையில் தொடர்ந்து அரசியல் பணியாற்றலாம் என இன்றைக்கு ம.தி.மு.கவில் செயல்பட்டு வருகிறேன். அதனைத்தொடர்ந்து 2016 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளராக மக்கள் நலக் கூட்டணியின் வேட்பாளராக ம.தி.மு.க சார்பில் களமிறங்கி 10 ஆயிரம் வாக்குகள் வாங்கினேன். அது அனைத்தும் ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் பெறப்பட்ட வாக்குகள். தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து என்னை அர்ப்பணித்து செயலாற்றி வருகிறேன். பலமுறை சிறைக்கும் சென்று வந்திருக்கிறேன்.

 

வைகோவை பற்றி?

தமிழக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், உரிமைகளுக்காக போராட்டக் களத்தில் முதல் ஆளாக நிற்பவர், எந்த மக்களின் நலனுக்காக போராடினாரோ அதே மக்களால் அவர் தேர்தல் களங்களில் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார். இருந்தும் தொடர்ந்து மக்களின் பிரச்சினைக்காக போராட்டம், சிறை என தன்னை அர்ப்பணித்து வருகிறார். என்னுடைய வாழ்க்கையில் வைகோ அவர்கள் பல சந்தர்ப்பங்களில் உறுதுணையாகவும், நம்பிக்கையளித்தும் இருக்கிறார்.

 

அரசியலில் வைகோவிற்கு சரியாக முடிவெடுக்கத் தெரிவயில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?

எந்த ஒரு அரசியல் சூழ்நிலையிலும் தலைவர் வைகோ அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட சுயலாபத்துக்காகவோ, நலனுக்காகவோ எந்த ஒரு முடிவும் எடுத்தது இல்லை. அரசியல் சூழ்நிலைகளில் அந்தநேரத்திற்கு என்ன முடிவு எடுத்தால் சரியாக இருக்குமோ அதைத் தான் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார். மற்றபடி தமிழ்நாட்டில் அரசியல் தெரிந்த  சிறந்த தலைவர் வைகோ தான்.

 

ரஜினி – கமல் அரசியல் பிரவேசம் குறித்து உங்களுடைய பார்வை?

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். சேவை மனப்பான்மை என்ற எண்ணம் மட்டுமே போதும். மற்றபடி அரசியலுக்கு வருபவர்கள் ஆக்டராகவோ, டாக்டராகவோ யாராக வேண்டுமோ இருக்கலாம் அதில் தவறில்லை.

ஆளும் அ.தி.மு.க அரசை பா.ஜ.க இயக்குவதாக உள்ள குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழகத்தில் பா.ஜ.கவால் ஒரு காலத்திலும் காலூன்ற முடியாது. அதனால் தான் அ.தி.மு.க அரசை பின்னிருந்து இயக்கி தேவையற்ற குழப்பத்தை உருவாக்கி வருகிறது. நடந்து முடிந்த அர்.கே.நகர் தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகளை வாங்கிய பா.ஜ.கவிற்கு தன்னுடைய பலவீனம் தெரிந்திருக்கும். எது செய்தாலும் தமிழக மக்கள் ஒரு காலமும் நம்மை ஆதரிக்க மாட்டார்கள்! என்ற கோபம் பா.ஜ.கவிற்கு அதிகமாகவே இருக்கும். அதனால், பா.ஜ.கவினால் ஒருகாலமும் தமிழகத்திற்கு நல்லது நடக்காது.

 

-நவீன் இளங்கோவன்

IAS academy

Leave A Reply

Your email address will not be published.