மக்களின் அதிகாரத்தை உணர்த்திய ‘எதிர்த்து நில்’

0
Business trichy

கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கும் ஓர் உச்சகட்ட பாசிசத்தின் தாக்குதலை எதிர்கொண்டு, ‘அடக்குமுறை தான் ஜனநாயகமா… ‘கார்ப்பரேட்-காவி பாசிசம்… எதிர்த்து நில்” என்ற அறைகூவலுடன் ஒரு மாநாட்டை திருச்சியில் நடத்தி முடித்திருக்கிறது மக்கள் அதிகாரம் அமைப்பு. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி போராடுவார்கள். இங்கு மாநாடு நடத்தவே போராட வேண்டிய நிலை.

மக்கள் அதிகாரத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சூரியா அறிமுக உரை நிகழ்த்தினார்.

தலைமையுரையாற்றிய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு பேசுகையில், ‘மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றிணைவதை தடுக்கவே இந்த மாநாட்டிற்கு காவல்துறை தொடர்ந்து தடை விதித்து வந்தது. அனுமதியளித்த பின்னும் ஏன் தலைப்பை மாற்றினீர்கள் என்றார்கள். நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின் தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம். மாநாடு குறித்த துண்டறிக்கையை கொடுத்தால்
ஆர்.எஸ்.எஸ். கும்பல் தடுக்கிறது. துண்டறிக்கை கொடுக்க அனுமதி பெற்றீர்களா என காவல்துறை கேட்கிறது. இந்த நாட்டில் நோட்டீஸ் கொடுக்க அனுமதி வேண்டும் என்று கூறுவது தானே பாசிசம்.

Kavi furniture

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார், பா.ஜ.க. காவி கும்பல் நடத்தக்கூடிய வன்முறை சித்தாந்த ரீதியானது. எதிர்த்து பேசினால் கூலிப்படை வைத்து போட்டுத் தள்ளுவது தான் அவர்கள் சித்தாந்தம். இதை நாம் எந்த நீதிமன்றத்தில் முறையிடுவது. ஜனநாயகத்தின் அத்தனை தூண்களும் பாசிசத்தின் உறுப்புகளாக மாற்றப்பட்டுள்ளது.

ஓட்டு போடுவதால் இந்த அரசாங்கத்தின் கொள்கையை தீர்மானிக்க மக்களுக்கு அதிகாரம் இருக்கிறதா அல்லது தீர்மானித்த கொள்கையை அமல்படுத்த மக்களுக்கு அதிகாரம் இருக்கிறதா… இல்லை. நமக்கான தீர்வு நம் கையில் தான் இருக்கிறது. நாம் இனி ஓடுவதற்கோ, நிற்பதற்கோ இடமில்லை. எதிர்த்து போராடினால் மட்டுமே நாம் நமக்கான உரிமையை பெற முடியும். எங்களை ஆதரிக்கும் நீங்கள் எங்களோடு இணைந்து நிற்பீர்கள் போராடுவீர்கள் என நம்புகிறோம். இந்த பாசிசத்திற்கு எதிராக நாம் போராட வேண்டும்.”

தொடக்க உரையாளர் எழுத்தாளர் அருந்ததிராய் பேசுகையில்,

‘கார்ப்பரேட் முதலாளித்துவமும், இந்து தேச வெறியும் இணைந்த ஒரு பெயர் தான் வேதாந்தா. இந்த ஒன்றுபட்ட ஆபத்தை எதிர்நோக்கி இருக்கிறது இந்த நாடு. மனுஸ்மிருதி தான் இந்திய அரசியல் சட்டமாக இருக்க வேண்டும் என அன்றே ஆர்.எஸ்.எஸ். கூறியது. இன்று அவர்களின் கனவு மெய்ப்படும் நிலையை நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இது நமக்கு வந்திருக்கும் பெரிய ஆபத்து. அந்த ஆபத்து மெய்பட்டுவிடாமல் தடுக்க வேண்டிய கடமை இருக்கிறது. இந்துத்துவ ஆட்கள் தேர்தலில் தோற்றால்கூட இந்த ஆபத்து தொடரும். அவர்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்குள்ளேயும் ஊடுருவி இருக்கிறார்கள். பொது மக்கள் சிந்தனையிலும் ஊடுருவி இருக்கிறார்கள். அவர்கள் அறிவாளிகளை மட்டுமின்றி அறிவை கண்டும் அஞ்சுகிறார்கள். பாசிசத்தின் அடித்தளமே மக்களின் மந்தபுத்தி தான். மதவாத சக்திகளை நாம் வீழ்த்தாவிட்டால் அந்த சக்திகளை அனுமதித்த குற்றத்திற்கு நாம் ஆளாக நேரிடும்.

ஆதிவாசிகள் காட்டை விட்டே உடனே வெளியேற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்திரவிடுகிறது. காடுகளை பாதுகாக்கவே இந்த தீர்ப்பு எனக் கூறுகிறது. 20 லட்சம் பழங்குடிகள் அவர்கள் தாயகத்திலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நாடற்றவர்களாக அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.

MDMK

9 பேர்களுக்கு 50 கோடி மக்களின் செல்வம் சொந்தமாக இருக்கிறது. இது தான் இவர்களின் வளர்ச்சியின் கொள்கை. இந்த நாட்டில் பிறந்தவர்கள் அனைவருக்கும் இருப்பதை எடுத்து பிரித்து கொடு; என்பதை இந்த நாட்டின் தேசிய கீதமாக கொள்ள வேண்டும்.

பெரும் ஊடகங்கள் போரை தூண்டுகின்றன. நாம் போரின் விளிம்பில் நிற்பதாக கூறுகின்றன. போர் போன்ற ஒரு மனநிலையை வளர்க்கிறார்கள். இந்த ஆட்சியாளர்கள் இந்த மக்களின் மீதான ஒடுக்கமுறைகளை மறக்க வேண்டும் என்பதற்காகவே போர் முழக்கம் எழுப்பப்படுகிறது” என்றார்.

வழக்கறிஞர் பாலன் பேசுகையில், ‘அரசியல் பொருளாளதார சமூக பிரச்சனைக்காக நீ நீதிமன்றம் போனால் நீதிமன்றம் கைவிரித்துவிடும். ஆகவே போராட்டம் தெருவில் தான். அங்கே தான் முடிவு கட்ட வேண்டும். நிர்வாகத்துறை, நீதித்துறை, சட்டத்துறை என எல்லாமே கார்ப்பரேட் மயமாகி வருகிறது. மனித உழைப்பு கொள்ளை, மனித வளம் கொள்ளை நாடு சூறையாடப்படுகிறது. இதற்கு தீர்வு நீதிமன்றம் அல்ல. போராட்டம் தான் தீர்வு” என்றார்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் மருதையன், ‘2003ல் பார்ப்பன பாசிசம் என அழைத்தோம். இன்று காவி பாசிசம் என்று கூறுகிறோம். அயோத்திக்கு செங்கல் எடுத்து வா என கூப்பிடுவார்கள். ஆனால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டத்தில் வேறு மாவட்டத்தினர் கலந்து கொள்ளக் கூடாது என சட்டம் போடுகிறார்கள். ஸ்டெர்லைட் போராட்டத்தில் காவல்துறை கார்ப்பரேட்டின் கூலிப்படையாக செயல்பட்டிருக்கிறது. அதை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்ட முகிலன் இன்று எங்கு இருக்கிறார் எனத் தெரியவில்லை”.

உரிமை தமிழ் தேசம் இதழின் ஆசிரியர் தியாகு, ஆளுர் ஷாநவாஸ், வழக்கறிஞர் ஹரிராகவன், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகி வரதராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
மக்கள் அதிகாரம் மாநாட்டில் தலைவர்களின் பேச்சுகளுக்கு உள்ள வரவேற்பை விட அதிகமாகவே கலை நிகழ்ச்சி வரவேற்பு பெறுகிறது. மக்கள் பாடகர் கோவன் மேடையேறி மிகுந்த ஈடுபாட்டுடன் பாடும் ஒவ்வொரு பாடலும் மக்களை கவர்கிறது. ‘எனக்கோ, காவல்துறைக்கோ பாதகம் இல்லாமல் பா.ஜ.க.விற்கு மட்டும் பாதகமாக பாடுகிறேன்” என்று கூறி பாடத் தொடங்குகிறார். வில்லங்கமே அங்கு தானே.

தொடக்கமே ‘இருளுதடா.. இருள் நெருங்குதடா, நெருங்குவது காவி இருளடா.. என்ற எச்சரிக்கை பாடல். ‘கோழிய வெட்டி தின்னா அது சிக்கன் பார்ட்டி….. நாட்டையே வெட்டி தின்னாஅது பாரதிய ஜனதா பார்ட்டி… உலகத்தில பெரிய சிலை பட்டேலு… அது உள்ளே போய் ஒளிஞ்சிக்கிது ரஃபேலு”…, ‘மலர்ந்தே தீரும்.. தாமரை மலர்ந்தே தீரும்… ஸ்டூல் மேல ஏறி நின்னு வளர்ந்தே தீரும்”… என கிண்டல் பாடல், ‘சொல்லாத சோகம்… யாரும் வெல்லாத வீரம்”…, ‘அடக்குமுறை தான் ஜனநாயகமா.. அடங்கி போனால் மாறிடுமா…” என உணர்ச்சி பெருக்கச் செய்யும் பாடல் அனைவரையும் பாடலுடன் ஒன்றச் செய்தது.

டிஜிட்டல் இந்தியாவை பறைசாற்றும் விதமாக அமைந்திருந்தது மாநாட்டு ஏற்பாடுகள். எல்.இ.டி. சுவர், எல்க்ட்ரானிக் டிரம்ஸ், கிடார், கீபோர்ட் கொண்டு மெட்டமைக்கப்பட்ட பாடல்கள், இணைய தளம் மூலம் நேரலை ஒளிபரப்பு என எல்லாம் டிஜிட்டல் மயம். இளம்தலைமுறையினரை ஈர்த்தது இந்த டிஜிட்டல் மயம். இடையிடையே டிஜிட்டல் சுவரில் ஒளிபரப்பட்ட ஆவணப்படங்கள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கையை விட உளவுத்துறையினரின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகம் தான். திடல் முழுக்க கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஜனத்திரள். இது தமிழக ஜனத்தொகையில் ஒரு துளியின் துளி. அதே நேரம் இது நீர்க்குமிழி அல்ல. ஆக்ரோஷ சுனாமியை உருவாக்கும் துளிகள். தானா சேர்ந்த கூட்டம். தமிழகத்தில் அடையாள போராட்டமும் ஆர்ப்பாட்ட அறிக்கைகளுடனும் தங்கள் கடமைகளை முடித்து கொள்வதாக இருக்கிறது இரு பெரும் கம்யூனிஸ இயக்கங்களின் செயல்பாடுகள். இவர்கள் தங்கள் செயல்பாடுகள் குறித்த பார்வையில் மாற்றம் ஏற்படுத்தினால் அதுவே பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்ட வலிமையை மேலும் வலுப்படுத்தும் முகமாக அமையும்.

-எஸ்.கோவிந்தராஜன் 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.