என்ன ஆனார் முகிலன்

0
Full Page

கடந்த 17 நாட்களாக காணாமல் போன முகிலனைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று கோரி, மார்ச் 2 சென்னையில் அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த மே 22 ஆம் தேதியன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டதாகக் கூறி போலீசாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது குறித்த வீடியோ ஆதாரங்களை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது வெளியிட்டார் சமூகச் செயற்பாட்டாளர் முகிலன். கடந்த 16 ஆம் தேதியன்று அவர் சென்னை – நாகர்கோவில் சிறப்பு ரயிலில் பயணித்ததாகவும், அதன்பின் அவரைக் காணவில்லை என்றும் புகார் எழுந்தது. சென்னை காவல் துறையிடம் இது பற்றிப் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் முகிலனின் நண்பர்கள். இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஹென்றி டிபேன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

 

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கூட்டத்தில் முடிவு செய்தபடி, முகிலன் காணாமல் போனது தொடர்பாக உண்மை அறியும் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு முகிலன் காணாமல்போன விவகாரத்தில் பல தகவல்களைச் சேகரித்தது. அன்றைய தினம் கரூர் பகுதியில் இருந்து வந்தவர்கள், முகிலனுடன் பணியாற்றியவர்கள் என்று அனைவரிடமும் இக்குழு தகவல் பெற்றது. முகிலனின் உறவினர்கள், கரூரில் நடந்த போராட்டத்தில் உதவி செய்தவர்கள், திருச்சியிலுள்ள வழக்குரைஞர்கள், மதுரையில் இருந்த முகிலனின் நண்பர் என்று அனைவரிடமும் தகவல்கள் கேட்கப்பட்டன.

 

Half page

“அடுத்த நாள் (பிப்ரவரி 26) காலை எழும்பூர் ரயில் நிலையக் காவல் நிலையம் சென்றோம். என்னுடன் பியூசிஎல் தமிழ் மாநிலத் தலைவர் குறிஞ்சி, பரிமளா, முகிலன் காணாமற்போனது தொடர்பான புகாரைக் கொடுத்த லயோலா மணி, தமிழினியன், வழக்குரைஞர் கமருதீன் ஆகியோரும் இருந்தனர். வழக்கைப் பதிவு செய்தார் ஆய்வாளர் கிருஷ்ண லீலா. வழக்கு பின்னர் எஃப்2 காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட விவரங்களைச் சொன்னார். எஃப்2 காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜி.அய்யப்பன் வழக்கு விவரங்கள் தனக்கு வந்து சேரவில்லை என்றார்.

 

அதற்கிடையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட செய்தி கிடைத்ததால், எழும்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்திற்குச் சென்றோம். ஏடிஜிபி அமரேஷ் புஜாரி, ஐ.ஜி ஸ்ரீதர், ஏடிஎஸ்பி செந்தில் குமரன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினோம்” என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்த உண்மை அறியும் குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் அ.மார்க்ஸ்.

 

முகிலன் காணாமல் போன நாளன்று, ஒலக்கூர் ரயில்வே ஸ்டேஷன் வரை அவரது செல்போன் ஆனில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது பற்றியும் உண்மை அறியும் குழு விசாரித்துள்ளது. எழும்பூர் ரயில் நிலைய சிசிடிவி பதிவுகளில் இருந்து கிடைத்த தகவல்கள், இந்த விவகாரத்தில் காவல் துறை, காவிரி மணல் மற்றும் தாது மணல் மாஃபியாக்கள், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உள்ளிட்டவர்களின் தலையீடுகள் குறித்த சந்தேகங்களும் இக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை, நேற்று (மார்ச் 1) சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்தது முகிலன் காணாமல் போனது தொடர்பான உண்மை அறியும் குழு.

முகிலன் என்ன ஆனார் என்பதைக் கண்டுபிடிக்க 17 குழுக்கள் அமைக்கப்பட்டதாக, உண்மை அறியும் குழுவிடம் சிபிசிஐடி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.