அறிவோம் தொல்லியல்-6 பயணங்கள் முடிவதில்லை…

0
full

கொடுமணல் பகுதிகளில் கிடைத்த சின்னங்களின் இரண்டு வகைகளை கடந்த தொடரில் பார்த்தோம், தொடர்ந்து மூன்றாம் வகையையும், தொழில்நுட்பத்தையும் இந்த தொடரில் பார்ப்போம்.

மூன்றாவது வகை :

இதில் இரண்டாம் வகையில் கிடைத்த பொருட்களையொத்தே உள்ளது. அதிலுள்ளவாரே கல்வட்டங்கள் அமைப்பு, படையல் பொருட்கள், முகப்பு எல்லாம் அவ்வாறேயுள்ளது.

poster
1 அகழாய்வில் கிடைத்தப்பானைகள்1

மட்கலங்கள்:

கொடுமணலில் ஊர்ப்பகுதியில் கிடைத்த பானைகள் உடைந்தும், பெருங்கற்கால சின்னங்களில் முழுமையாகவும் கிடைத்தது! பொதுவாக இங்குள்ள பானைகள் 5 பிரிவாக வகைப்படுத்தப்படுகிறது.

 

1.கருப்பு, சிவப்பு

2.வெள்ளை வண்ணம் பூசப்பட்டு அதன்மேல் செங்காவி வண்ணம் பூசப்பட்டவை

3.சிவப்பு வண்ணம்

4.சிவப்பு வண்ணம் பூசி மெருகேற்றியவை(polished )

5.கருப்பு வண்ணம் பூசி மெருகேற்றியவை

அகழாய்வு குழி தோண்ட தேர்ந்தெடுத்த இடம்

இதில் 2ம் வகை பானை முதன்முதலாக ஆந்திரத்தில் கண்டெடுக்கப்பட்டதால் “ஆந்திர வகை பானைகள்” என பெயர், தற்சமயம் கோவை பகுதியில் அதிகம் கிடைக்கிறது! மெருகேற்றிய பானைகள் ஈமச்சின்னங்களிலும், ஊர் இருக்கைப்பகுதிகளிலும் கிடைக்கிறது,

இப்பானையோடுகளில் “நிகமா” ,”விஸாகி” என்ற எழுத்து பொறிப்புள்ள பிராமி கீறல்கள் கிடைத்தது.

 

தொழில்நுட்பம் :

இங்கு வாழ்ந்த மக்கள் விலையுயர்ந்த மணிகள்,  ஆபரணங்கள் செய்வதில் வல்லவர்களாய் இருந்துள்ளனர்,  மூலப்பொருட்களை கட்டிகளாய் வெட்டி, அதிலிருந்து, சிறு துணுக்குகளாய் வெட்டி, அதிலிருந்து மணிகளை பிரித்துள்ளனர். அதிலும் சில மணிகள் கடுகளவு கூட கிடைத்துள்ளது. அதில் கூட நூலிழையளவு துளையை ஏற்படுத்தியுள்ளனர்.  இவ்வகை மணிகள் முதலில் துளையிட்டு பின் கடுகளவிற்கு தேய்த்து உருவாக்கியிருத்தல் கூடும்.

முதலில் வெட்டப்பட்ட கற்களை, பயனற்றது, பயனுள்ளதென பிரித்து, பின் கடினமான கற்களை மணிகள் செய்யும் அளவிற்கு அதனை இழைத்துள்ளனர். பின் மணிகள் நன்றாக தேய்த்து மெருகூட்டியுள்ளனர்.  இதற்கு அவர்கள் குருந்தம்(Garnet) என்ற கல்லினை பொடியாக அரைத்து பயன்படுத்தியுள்ளனர்.

ukr
2 மணிகள் செய்ய அறுக்கப்பட்ட கற்கள்

கார்னீலியம் மணிகள் செய்வதற்கு, அதன் மூலப்பொருளான கால்சிடனி கல்லை, பானையில் இட்டு, பின் அதேகல்லை கொண்டு மூடியுள்ளனர். இதனால் பானையை சூடேற்றும் பொழுது இக்கல் மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறம் பெருகிறது. ஓர் அகழாய்வு குழியில் 120செ.மீ ஆழத்தில் கார்லீனிய சில்லுகள் நிறைய கிடைத்தது! இதில் மணலிட்ட குழிகள் தென்பட்டது, ஆகவே இப்பகுதியை கல்தொழில் நடைபெற்ற பட்டறை பகுதியாய் கொள்ளலாம்.

கொடுமணலில் கிடைத்த மணிகளை நான்கு வகையாய் பிரிக்கலாம்:

1.வட்ட வடிவம்

2.பீப்பாய் வடிவம்

3.இருகூம்பு வடிவம்

4.கோள வடிவம்

 

ஊரிருக்கை பகுதிகளில் கிடைத்துள்ள மணிகள் நல்லநிலையில் உள்ளது, ஆனால் ஈமக்காட்டில் கிடைத்தவை உருக்குலைந்து காணப்படுகிறது, இதற்கு குவியல் குவியலாய் அடுக்கப்பட்ட கற்களே காரணம்.

ஈமச்சின்னங்களில் சுமார் 5 அடி நீளமுள்ள வாள்கள் கிடைத்தது. சில வெண்கல பொருட்களை இணைக்க இரும்பு ஆணிகள் பயன்படுத்தப்பட்டது. இந்த இரும்பு பொருட்கள் யாவும் உலைக்களத்தில் தட்டி தட்டியே உருவாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் வார்ப்பு நிலையில் எதுவும் கிடைக்கவில்லை.

செம்பு பொருட்கள் :

இரும்பினை ஒப்பிடுகையில் செம்பு பொருட்கள் குறைவாகவே உள்ளது. இதில் முக்கியமானது புலிவடிவ பொம்மையும், குவளையும், பூத்தாங்கியுமாகும். இப்புலிபொம்மை 8செ.மீ அகலமும் 5செ.மீ உயரம் கொண்டது. இதன் உடற்பகுதியில் முக்கோண வடிவில் இரு வரிசையில் கார்லீனியன், லேபிஸ் லகனி மணிகள் பதிக்கப்பட்டுள்ளது. கண்களில் இரு சிவப்பு மணிகள் பொருத்தப்பட்டுள்ளது. பூத்தாங்கி தாமரை வடிவிலும், மொட்டு போன்ற வடிவிலும் உள்ளது. இதேபோன்ற ஒரு பூத்தாங்கி ஆதிச்சநல்லூரிலும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் செம்பினாலான வடிகட்டி, ஊசி,கரண்டி கிடைத்தது!  இதில் செம்புகரண்டி வேலைப்பாடு நிறைந்தது.

தங்கம் வெள்ளி பொருட்கள் :

மணிகள், வளையல்கள், சுருள்கள் தங்கத்தால் உருவாக்கப்பட்டது. செம்பு கலந்து இவற்றை  செய்தது, அப்பொருட்களில் படிந்துள்ள பச்சை நிறம் கொண்டு தெரியவருகிறது. 5 ம் குழியில் 22 வெள்ளிச்சுருள்கள் கிடைத்தன. இவை கழுத்துமாலைகளாய் உபயோகப்படுத்தியிருக்க வேண்டும். இதில் கார்லீனியன் மணிகளை கோர்த்துள்ளனர். செவ்வக வடிவ வெள்ளிக்கட்டிகளும் கிடைக்கிறது!

 

பிறபொருட்கள்:

கடற்கரைபகுதியிலிருந்து சங்குககள் இறக்குமதி செய்யப்பட்டு அதனை அறுத்து ஆபரணங்கள் செய்ததற்கு சான்றாக. அதிகளவில் சங்குகளும், சங்குசில்லுகளும், சங்கு வளையல்களும் கிடைத்துள்ளது. இப்பொருட்கள் ஈமச்சின்னங்களில் கிடைக்காமல், ஊரிருக்கைப் பகுதிகளிலே கிடைக்கிறது!

எலும்பினால் செய்யப்பட்ட ஊசிகளும்.  அம்புமுனைகளும், சிறிய வேலைப்பாடுடைய அலங்கார பொருளும் கிடைக்கிறது,

நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணமுடைய வளையல், மணிகள், குடுவைகள் காணப்படுகிறது இவை இங்கேயே உருவாக்கியிருத்தல் கூடும்.

குறியீடுகள் மற்றும் பிராமி எழுத்துகள் குறித்து அடுத்த தொடரில் காண்போம்…

half 1

Leave A Reply

Your email address will not be published.