ஆதி மகள்-9

0
1 full

காரை ஓட்டிச் சென்ற கரண், விசாலியிடம் காயத்ரியை பற்றி ஒன்றும் கேட்கவில்லை. டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்ததால் காயத்ரியை அவன் சரியாகக் கூட பார்க்கவில்லை. ஆனால் விசாலியே கரணிடம், இந்த பொண்ணு நம்ம கட்டிட ஒப்பந்ததாரர் சண்முகநாதனின் மகள். நம்மை பார்க்கத்தான் வருகிறாள் என்று கூறினாள். ஓ.. என்பதுடன் முடித்துக் கொண்டான் கரண். அவர்கள் இருவரின் மனநிலையை பிரதிபலிப்பது போல் வானத்தில் மெதுவாக வட்டமிடும் பறவை போல ஆழ்ந்து மிதந்து சென்று கொண்டிருந்தது அவர்களது கார்.

கரணால் தனது தந்தை கோகுலகிருஷ்ணனின் இறப்பை ஜீரணிக்க முடியாமல், இறக்கி வைக்க முடியாத பாரத்தை சுமந்தவனாய் சோகம் கனத்து காணப்பட்டான். விசாலிக்கும் கோகுல கிருஷ்ணனின் இறப்பு நிலைகுலைய வைத்தாலும், திடீரென வரும் பெரும் வெள்ளத்தில் நீச்சல் தெரிந்தவன் கூட தடுமாறும் சிறு பிறழ்வுடன், புரண்டெழுந்து, தன்னை சுதாரித்துக்கொண்டு கரையேறும் போக்கில், நிதான பார்வையுடன் கவனத்துடன் நீந்தினாள் விசாலி.

மெதுவாக விசாலியின் வீட்டை வந்தடைந்த காயத்ரி, தனது ஸ்கூட்டியை எங்கு நிறுத்துவது என இடம் தேடும்போது, விசாலி வீட்டினுள்ளிருந்து வெளிவந்தவளாய் வெளிக்கேட்டை திறந்து வண்டியை உள்ளே வைக்க சொன்னாள். உள்ளே நின்ற காரின் அருகில் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு வீட்டினுள் வர விசாலி அழைத்ததும் உள்ளே செல்ல திரும்பினாள் காயத்ரி.

2 full

விசாலி வெளி கேட்டை மூடாமல் உள்ளே சென்றிருந்தாள். தான் கேட்டை மூடலாமா, வேண்டாமா, என யோசித்தவளாய் கேட்டை இழுத்து மூடும் போது அவள் நின்றிருந்த இடத்திலிருந்து வானம் தெளிவாக தெரிந்தது. அது செந்நிறமாய் சிறு சிறு மேக துண்டுகளை சிதறவிட்டு அதனுடே செந்நிற கதிர்களை வீசி ஒளி பாய்ச்சியது. அதன் ஒளி கண்ணை கூச செய்யாமல் ரம்மியமாக இருந்தது காயத்ரிக்கு. அந்த ரம்மியம் அவளின் உடலில் ஒரு புல்லரிப்பை ஏற்படுத்தியது. அவள் நின்றிருந்த வீட்டின் வாசலில் நீர் தெளித்து இருந்த்தால் காயத்ரி செருப்பை கழற்றியதும் தரையின் ஈரம் காலில் பட்டதை உணர்ந்தாள்.

மீண்டும் வானத்தை பார்த்தாள். சற்று முன்பு பார்த்த  வானத்தின் ரம்மியம் மாறி போயிருந்தது. தான் ஒரு ஆற்றின் கரையில் நிற்பதை போன்ற பிரேமை காயத்ரிக்கு ஏற்பட்டது. வீட்டின் படியேறி மூன்றாவது படியின் மேல் காயத்ரி கால் வைத்தபோது, என்ன யோசனை வாங்க வீட்டுக்குள்ள என விசாலி காயத்ரியை மீண்டும் வீட்டினுள்ளே அழைத்துச் சென்றாள்.

வெளிச்சத்தை பின்னால் வர சொல்லிவிட்டு சூரியன் முற்றிலும் மறைந்து போனது. விசாலி வீட்டினுள் அனைத்து விளக்குகளையும் எரியவிட்டு வீட்டை பிரகாசிக்கவிட்டாள். நேற்று கோகுல கிருஷ்ணன் கிடத்தப்பட்ட இடத்தில் இன்று அவரது பழைய போட்டோ ஒன்று தரையில் வைத்து சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அதில் அவர் பேண்ட், சர்ட்டுடன் சைடு போஸில் சிரித்தவாறே நின்று கொண்டிருந்தார். என்ன காரணத்திற்காக இந்த போட்டோவை வைத்திருப்பார்கள் என்று காயத்ரி நினைத்துக் கொண்டிருந்த போது கையில் குத்துவிளக்குடன் வேலைக்கார பெண் ஒருத்தி போட்டோவின் முன்பு அவற்றை வைத்துவிட்டு சம்பிரதாயமாக போட்டோவை வணங்கிவிட்டு போனாள்.

இன்னும் வீட்டில் மெல்லிய சோகம் இழையோடிக்கொண்டிருந்தது. வீட்டில் பெரும்பாலான சாமான்கள் ஏதும் இன்றி அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே இருந்தன. வீட்டுக்குள் வேலைக்காரப் பெண்ணைத்தவிர யாரும் இல்லாததுபோல் ஒரு பேரமைதி குடி கொண்டிருந்தது. அந்த வேலைக்கார பெண்ணிடம் விசாலி காபி போட சொன்னது வீட்டினுள் எதிரொலித்தது. வீட்டினுள் மெதுவாக பேசினாலும் எதிரொலிப்பு பெரிதாக இருந்தது. தான் நின்று கொண்டிருந்த ஹாலில் அழகான வேலைப்பாடு கொண்ட நான்கு மரச்சேர்கள் போடப்பட்டிருந்தது. அது டைனிங் டேபிளில் உட்காரும் சேர்களாக இருக்கக்கூடும் என நினைத்துக் கொண்டே அதில் அமர்ந்தாள் காயத்ரி. தானும் வந்து காயத்ரியின் எதிரில் அமர்ந்து கொண்டாள் விசாலி. இன்னும் வீட்டுக்கான எந்த பொருட்களையும் எடுத்து வரவில்லையென்றும், முக்கியமான சாமான்கள் மட்டும் இரவோடு இரவாக எடுத்து வரப்பட்டது எனவும் விசாலி காயத்ரியிடம் கூறினாள்.

வேலைக்கார பெண் ஆவி பறக்க இருவருக்கும் காபி கொடுத்தாள். விசாலி அவளைப் பார்த்து சரி நீ கிளம்பு எனக் கூறிவிட்டு, மாடியில கரணுக்கு காபி கொடுத்தியா என கேட்டாள். கரண் வேண்டாம் என சொன்னதாக அவள் பதில் கூறினாள். இவர்கள் பேசியது வீட்டுக்குள்ளே எதிரொலித்து அங்கேயே விழுந்து உடைந்து போனது. வீட்டினுள் பேசும்போது எதிரொலித்த வார்த்தைகளின் சப்தம் காயத்ரிக்கு சற்று சங்கடமாக இருந்தது.

காபி குடித்துக்கொண்டே வீட்டை மேலும், கீழும் சுற்றிலும் பார்வையிட்டாள். வீடு அழகாகவே இருந்தது. அப்பாவிற்கான ரசனையா இது வீட்டின் அமைப்பும், வண்ணமும், நேர்த்தியான அளவும், வீட்டினுள்ளே சென்று ஏறிய மாடிப்படிகளும் அதன் மேல் மாடி அறைகளும், ரசனையுடன் மிக அழகாக இருந்தது. அந்த வீட்டின் உள் அமைப்பு அப்பாவின் திட்டமிடல் என்றால் ஆச்சரியம் தான்! ஆனால் பெரும்பாலும் அப்பா வேறு என்ஜினியர்களின் ப்ளான் படியே கட்டித்தருவார். சில நேரங்களில் பட்ஜெட்டிற்காக தானும் யோசனை கூறி கட்டிட அமைப்பை திட்டமிடுவார். இது காயத்ரிக்கு தெரிந்ததுதான். ஆனால் இதில் அப்பாவின் கைங்கரியம் இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது. அப்பா என்றாலும் அவர் அறிவின் இருப்பை, வெளிப்பாட்டை அளக்க வேண்டிய தருணத்தின் அழகுதான் இது என காயத்ரி யோசித்து கொண்டிருக்கும் போதே விசாலி குறுக்கிட்டாள். நீ என்ன யோசிக்கிறேன்னு தெரியுது காயத்ரி. கிரஹபிரவேசம் செய்யாத புதுவீட்டில் ஏன் இந்த துக்க நிகழ்வை அரங்கேற்றி இருக்க வேண்டும் என்றுதானே, என கேட்டாள். அப்போதுதான் காயத்ரி தான் ஏற்கனவே தனக்குள் கேட்டிருந்த கேள்வி அது என்று அவளுக்கு நினைவுக்கு வந்தது. தெரிந்து கொள்வோமே என்ற ஆர்வத்தில் தலையாட்டி வைத்தாள். மேலோட்டமாக பார்த்தால் அது மிக சாதாரண விசயம்தான் காயத்ரி. நாங்கள் இப்போது குடியிருக்கும் அபார்ட்மெண்டில் மொத்தம் பதினெட்டு வீடுகள். வீட்டுக்குள் நாம் வாழ்வதற்கான அனைத்து வசதிகளோடும் கட்டமைக்கப்பட்ட வீடு. ஆனால் இது போன்ற நிகழ்வுகளுக்கு ஏற்றதாக இல்லை. சுற்றிலுமிருப்பவர்கள் மகிழ்ச்சியை கொண்டாட கூடுகிறார்கள் அதுவும் ஒரு அளவோடுதான். இது போன்ற துக்க நிகழ்வுகளுக்கு பயத்துடன் முகம் சுருக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமில்லை, கோகுல கிருஷ்ணன் பார்த்துபார்த்து, மிகவும் மெனக்கெட்டு கட்டிய வீடு இது. கடைசியாக ஒருநாள் தனது தந்தை இதில் வாழ்ந்துவிட்டு போகட்டுமே என கரணின் யோசனை தான் இது. கரணுக்கு ஆன்மாவின் மீது நம்பிக்கை இருக்கிறது காயத்ரி. சரி, நடப்பது நடக்கட்டும் என நானும் சம்மதித்து விட்டேன் என்றாள் விசாலி. காயத்ரி புரிந்து கொண்டாள். கரண் இவர்களது மகனாக இருக்கும் என.

மாடியில் ஒரு அறையின் கதவு திறக்கப்பட, காயத்ரி தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து மாடியை பார்த்தாள்.  அறையிலிருந்து வெளிச்சம் வெளியே தெரிந்தது. அங்கிருந்து ஒருவன் வெளிவருவதும் பின்பு மாடியிலே வேறு ஒரு அறைக்கு அவன் செல்வதையும் காயத்ரி பார்த்தாள். அவன்தான் கரணாக இருக்கும் என நினைத்துக் கொண்டாள். அவனது உருவம் காயத்ரிக்கு தெளிவாக தெரியவில்லை. அவனை தெளிவாக பார்க்கவும் காயத்ரி மெனக்கெடவில்லை. தன்னை எதற்காக விசாலி வரச் சொல்லியிருப்பாள், உறவுக்காரர்கள் என்று யாருமே வீட்டில் தென்படவில்லையே ஒரு வேளை அப்பா சொன்னது போல் உறவுக்கார பெண்கள் என யாரும் இல்லை போல் இருக்கிறது. அதனால்தான் பேச்சுத்துணைக்கு தன்னை அழைத்திருப்பாள் போலிருக்கிறது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே மாடியிலிருந்து கரண், இவர்களை நோக்கி இறங்கி வந்து கொண்டிருந்தான்.

3 half

Leave A Reply

Your email address will not be published.