ஆதி மகள்-8

0
D1

காலையில் தனது தோழி அகிலாவை பார்க்கச் சென்ற காயத்ரி மாலை 4 மணிக்கே வீடு திரும்பினாள். வீட்டு வாசலில் அப்பாவின் செருப்பு கிடந்தது. விசாலியின் வீட்டிலிருந்து அப்பா திரும்பி விட்டார் போலிருக்கிறது. அப்பாவின் அறையினுள் எட்டிப் பார்த்தாள் காயத்ரி. சண்முகநாதன் தூங்கிக் கொண்டிருந்தார்.

 

காயத்ரி, அம்மாவிடம் கேட்டாள், அப்பா எப்பம்மா வந்தார் என்று. ஜானகி அம்மாள் பதிலேதும் சொல்லவில்லை காயத்ரியும் பதிலுக்கு காத்திருக்கவில்லை.
காயத்ரி மீண்டும் வெளியே செல்ல ஆயத்தமானாள். அம்மா அவளருகே வந்து அகிலா வருவாளா அவளையும் கூட்டிட்டு போயேன் என்றாள். அப்பா அம்மாவிடம் ஏற்கனவே சொல்லியிருப்பார். தான் விசாலி கோகுல கிருஷ்ணனை பார்க்க போகும் விசயத்தை. அதான், ஆலோசனை சொல்கிறாள் என்று நினைத்துக் கொண்டாள். அப்போதுதான் அவளுக்கு தோன்றியது, விசாலியை பார்க்க அகிலாவையும் அழைத்திருக்கலாமோ என்று. சரி, வேண்டாம் என அந்த எண்ணத்தை உதறிவிட்டு, இல்லேம்மா நான் மட்டும்தான் போறேன் என ஜானகி அம்மாளிடம் பதிலளித்தாள். அங்குள்ள சூழல் தெரியாத நிலையில், அகிலாவை அங்கு அழைத்து செல்வது, சரியாகப் படவில்லை காயத்ரிக்கு.

 

அங்கிருந்து வர நேரமானால் அப்பாவை அனுப்பி வைப்பதாக ஜானகி அம்மாள் கூறினாள். இங்கிருந்து செல்ல ஆட்டோவை கூப்பிடலாமா அல்லது தனது ஸ்கூட்டியில் செல்லலாமா என யோசித்தவாறு ஜன்னல் வழியே வெளியில் நிற்கும் தனது வண்டியை பார்த்தாள். அதிலே சென்று விடலாம் என முடிவு செய்து கொண்டாள் காயத்ரி. ஊதா நிறப் புடவை அணிந்து தன்னை திருத்தமாக திருத்திக் கொண்டாள். பரீட்சை எழுத செல்வது போல் அவளுள் ஒரு சிறு பரபரப்பு தோன்றியது. நீண்ட நேரத்திற்கு பின் இப்போதுதான் யோசிக்க ஆரம்பித்தாள். விசாலி தன்னை எதற்காக வர சொல்லியிருப்பாள் என்று. எதற்காகவோ இருந்து விட்டு போகட்டும் அப்பா விசாலியின் மீது மிகவும் மரியாதை வைத்திருக்கிறார். அதற்காக மட்டுமில்லை. அவளது சினேக பார்வையும், அழைத்த சூழலும் ஆறுதலுக்கான விசயமாகக் கூட இருக்கலாம்.

 

D2

தான் இதுவரை யாரிடமும் ஓரிருமுறை பேசியவர்களிடம் தேடிச் சென்று, பழக்கங்களை உறுதிப்படுத்தியது கிடையாது. இதுதான் முதல் முறை ‘உன்னை சந்திக்க முடியுமா வா’ என கூறியதும், தன் இயல்பிலிருந்து நழுவி இப்படியும் ஒரு சில சந்தர்ப்பங்கள் நடந்தேறும். அதற்கும் பழகி விடு, என்பது போல் கிளம்பி போனாள் காயத்ரி.

ஜானகி அம்மாள் தானும் சென்று துக்கம் விசாரித்து விட்டு வரலாமா என யோசித்தவளாய் சிந்தனையின் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் வீட்டு வேலையில் மூழ்கிப் போனாள்.

தனது வண்டியில் சென்று கொண்டிருந்த காயத்ரிக்கு மாலை நேரத்து வெயில் இதமாக இருந்தது. அவள் உடல் முழுக்க நேர் எதிர் சாய்வாய் நின்று வெளிச்சத்தை அள்ளிக் கொட்டியது சூரியன். அந்த மஞ்சள் நிற வெயிலில் சூரியனில் முக்கி எடுத்த பூரண முழு மதியாய் ஜொலித்தாள் காயத்ரி.
அந்த இரைச்சலான சாலையிலும், அவளது போன் ரிங்கானது அவளுக்கு கேட்டது. அதை எடுத்து ஆன் செய்வதற்குள் கட் ஆனது. யார் என பார்த்தாள் அப்பாதான் போன் பண்ணியிருந்தார். சரி விசாலி வீட்டிற்கு சென்ற பின்பு அப்பாவிடம் பேசிக்கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டு மீண்டும் வண்டியை கிளப்பினாள் காயத்ரி.

 

N2

அவளுக்கு காரணமே இல்லாமல் தான் படிப்பை பாதியிலே நிறுத்தியிருக்க கூடாதோ என்ற எண்ணம் தோன்றியது. விசாலியிடம் தனது படிப்பை பற்றிய பேச்சு வந்தால், என்ன சொல்வது என்ன பேசுவது, விசாலியின் வயதில் தனது தோற்றம் எப்படி இருக்கும் என மரத்தில் தாவும் அணில் பிள்ளையாய் எண்ணங்கள் தாவி தாவி அவளுக்குள் ஒரு தவிப்பை ஏற்படுத்தியது.

 

இதுவரை அவள் யாருக்காகவும், யாரிடமும் பேசுவதற்கான தோரணையையோ, காரணங்களையோ தேடிப் பார்த்ததில்லை, மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனையே அவளது உள்ளம் அறிந்தது கூட கிடையாது. அவளுக்கு அவள்தான். தாய், தந்தை தவிர, வழி மாறிய தோழியாய் வந்தவள் அகிலா. இது மட்டுமே அவளது உலகம் என வாழ்ந்தவள்.
அவளுக்கான பிரச்சனைகளுக்கு அவளுக்கான தேவைகளுக்கு, யோசிக்க, ரசிக்க, மகிழ்ச்சியை தனக்குள் நிரப்பிக்கொள்ள, ஒரு ராணி தேனீயாய் பறந்து திரிந்தாள் காயத்ரி.

 

ஆனால் இன்று எழும் விசாலி குறித்த எண்ணங்களுக்கு அவளால் பதில் தேடி முடியவில்லை. ஒருவேளை விசாலியை உயர்வாய் சிந்தித்ததால் விளைந்த தாழ்வு எண்ணங்களோ என்று கூட எண்ணிப் பார்த்தாள்.
காயத்ரியிடம் அவள் வாழ்க்கையில் நடந்த, நடக்கும், எல்லா விசயங்களுக்கும் தனக்கு தானே சிந்தித்து முடிவு எடுத்து பழக்கப்பட்டவள்.
எதையும் எளிதாக கடந்து விடுவாள். சில நேரங்களில், சில சமயங்களில் அவளை ஆச்சரியப்படுத்தும் விசயங்களைக் கூட, சிறு புன்னகையால், ஒரு அலட்சிய பார்வையால், இவ்வளவு தானா, நம்மை ஆச்சரியப்பட வைத்தது, இந்த விசயத்தில், நாம் ஆச்சரியப்பட்டதில், ஆச்சரியத்தை தவிர வேறு எதுவும் இல்லை என ஒரு சிறு உதட்டசைவில் ச்… கொட்டி நகர்ந்து விடுவாள். இதில் என்ன இருக்கிறது. ஒன்றுமில்லை என்பதுதான் காயத்ரியின் எல்லை முடிவு.

 

நிதானமான வேகத்துடன் தனது ஸ்கூட்டியை ஓட்டி வந்த காயத்ரியின் வண்டிக்கு பின்னால் ஒரு காரின் ஹாரன் சத்தம் ஒலிக்க அந்த காருக்கு வழிவிட்டு ஒதுங்கி வண்டியின் வேகத்தை குறைத்தாள்.

ஹாரன் அடித்து அவளைக் கடந்து சென்ற கார் சற்று முன்னே சென்று நின்றது. அதே கருப்பு நிற கார்தான். காரின் முன் சீட்டில் இடதுபுறம் அமர்ந்திருந்த விசாலி. காரின் கண்ணாடியை இறக்கி விட்டு காயத்ரியை பார்த்து புன்னகைத்தாள்.
காயத்ரியும் பதிலுக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள். எங்க.. நம்ம வீட்டுக்குத்தானே. வந்துருங்க காயத்ரி. நான் முன்னாடி போறேன் என விசாலி காயத்ரியிடம் பேசிவிட்டு, காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த இளைஞனை பார்த்து வண்டிய எடு கரண் என்றாள்.

பயணித்தாள் காயத்ரி…

-அஸ்மின்

N3

Leave A Reply

Your email address will not be published.