மச்சானை ஓரங்கட்டும் மகன்

“மக்களோடும் தெய்வத்தோடும்தான் கூட்டணி என்று சொல்லிவந்த விஜயகாந்தின் தேமுதிக இந்தத் தேர்தலில் திமுக பக்கமா, அதிமுக பக்கமா என்பதுதான் இன்றைய தேதிக்கு அரசியல் அரங்கில் விவாதமாக இருக்கிறது.
கட்சிகளின் நிலைப்பாடுகளை தனி நபர்கள் முடிவு செய்யமுடியாது, ஜனநாயக அமைப்புகளான பொதுக்குழு செயற்குழுதான் முடிவு செய்கிறது என்பது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் தேமுதிகவில் தனி நபர் முடிவுகள், அதிலும் விஜயகாந்தின் குடும்பத்துக்குள் இருக்கும் தனிநபர்களின் முடிவுகளே கூட்டணிக் கணக்குகளைத் தீர்மானிப்பதாக இருக்கின்றன.
சென்னை சாலி கிராமத்தில் இருக்கும் விஜயகாந்தின் வீடு தேடி திமுக தலைவர் போனதற்குப் பிறகு சூழல்கள் மெல்ல மாறி வருகின்றன. உண்மையிலேயே முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆரம்பித்து வைத்த ஆபரேஷன் தான். நேற்று விஜயகாந்தை சந்தித்த திருநாவுக்கரசர் அரசியல்தான் பேசினேன் என்று சொல்லி நல்ல முடிவு எடுக்குமாறு தேமுதிகவுக்கு ஓப்பனாக அழைப்பு விடுத்துவிட்டுப் போனார். விஜயகாந்த் சந்திப்பு பற்றி ஸ்டாலினிடம் பேசிய அரசர், ‘அவங்க டைலாமோவுல இருக்காங்க. நீங்க ஒருவேளை போய் பாத்தீங்கன்னா ஏதும் அதிசயம் நடக்க வாய்ப்பிருக்கு. அரசியல்ல முற்பகலுக்கும் பிற்பகலுக்கும் இடையில நிறைய மாற்றம் வருமே’ என்று சொல்லியிருக்கிறார். இதன்பிறகு ஸ்டாலினும் தனக்கு நெருக்கமான சிலருடன் ஆலோசித்திருக்கிறார்.


ஏற்கனவே பாமக அல்லது தேமுதிகவை கூட்டணிக்குள் வைப்பது என்று திமுகவுக்குள் பேசப்பட்டது. இப்போது அரசரும் இப்படி சொல்வதால் விஜயகாந்த் வீட்டுக்குப் போகத் தயாரானார் ஸ்டாலின். இந்தத் தகவல் திமுக நிர்வாகிகள் மூலம் சொல்லப்பட்டதும் விஜயகாந்த் வீடு பரபரப்பானது. விஜயகாந்த் வீட்டு வாசலில் நின்று இது அரசியல் சந்திப்பு அல்ல என்று ஸ்டாலின் சொன்னாலும், தேர்தல் நேரத்தில் நகம் வெட்டிப் போட்டாலும் அது அரசியல்தான் என்றார் ஒரு திமுக சீனியர். அதாவது ஸ்டாலின் தேமுதிக தானாக முன் வந்து தன்னிடம் கூட்டணி வேண்டுகோள் வைக்க வேண்டுமென்று விரும்புகிறார்.
இந்த நிலையில்தான் தேமுதிகவின் கூட்டணி வியூகங்கள் விஜயகாந்தின் மச்சான் சுதீஷிடம் இருந்து இப்போது மூத்த மகன் விஜய.பிரபாகரனின் கைக்கு போயிருக்கிறது என்கிறார்கள். விஜய பிரபாகரன் ஏற்கனவே தேமுதிகவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். அண்மையில் அவர் சென்ற கூட்டங்களில் எல்லாம் தேமுதிகவினர் திரள்கிறார்கள். விஜயகாந்த் பிரசாரக் களத்துக்கு வராத குறையை பிரபாகரன் நிச்சயம் போக்குவார் என்று ஸ்டாலினிடம் சில திமுகவினர் சொல்லியிருக்கிறார்கள்.
வீட்டுக்கு ஸ்டாலின் வந்து சென்ற பிறகு இதுவரைக்கும் வெளியே வராத தேமுதிகவினர் எல்லாம் பிரபாகரனிடம் வந்து, ‘ஸ்டாலின் வந்துட்டுப் போயிருக்காரே?’ என்று கேட்கத் தொடங்கியிருக்கிறார்களாம். அவர்களிடம், ‘கவலைப்படாதீங்க. நல்லதே நடக்கும்’ என்று சொல்லியிருக்கிறார் பிரபாகரன். பாஜக, அதிமுகவினரோடு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே பேசி வருகிறார் சுதீஷ். ஆனால் அவரால் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை. இப்போது விஜயகாந்தின் மகன் பிரபாகரன் திமுக கூட்டணியில் தேமுதிகவை கொண்டுவர தீவிரமாக சில வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறாராம். இதுமட்டும் ஜெயித்துவிட்டால் கட்சியில் தனக்கு எளிதில் செல்வாக்கு உயருமென்று கணக்குப் போடுகிறாராம் கேப்டன் மகன். கூட்டணி வியூகம் இப்போது மச்சானிடமிருந்து மகனுக்குப் போயிருக்கிறது.
