தமிழகத்தில் 35 தொகுதிகளை வெல்வோம்

0
gif 1

வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 35க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்லும் என்று இராமநாதபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே மதுரை, திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அடுத்ததாக கன்னியாகுமரியில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அதேபோல பாஜக தலைவர் அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோரும் தமிழக பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.


அதன் ஒருபகுதியாக இன்று இராமநாத புரத்தில் நடந்த பூத் கமிட்டி முகவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொண்டார். அதிமுக-பாமக-பாஜக கூட்டணி அமைந்த பிறகு முதல்முறையாக அமித் ஷா தமிழகம் வந்திருக்கிறார். இந்தக் கூட்டத்தில் பேசிய அவர் ‘‘தமிழகத்தில் 5 தொகுதிகளில் மட்டும்தான் பாஜக போட்டியிடுகிறது என்று யாரும் கருத வேண்டாம். 40 தொகுதிகளிலும் நாம்தான் போட்டியிடுகிறோம். மோடி பிரதமராக வேண்டுமென்றுதான் அதிமுகவும், பாமகவும் கூட்டணியில் போட்டியிடுகிறார்கள். திமுகவையும், காங்கிரஸையும் தோற்கடிக்க 40 தொகுதிகளிலும் முழு சக்தியோடு பாஜகவினர் பணியாற்ற வேண்டும்” என்றார்.

 

gif 3

மேலும், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில், மோடி மீண்டும் பிரதமராவதற்கு நடக்கிற இந்த யுத்தத்திலே தமிழகத்திலிருந்து 35க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. புல்வாமாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளார். அதில் தமிழகத்தைச் சேர்ந்த சிவசுப்ரமணியமும், சிவச்சந்திரனும் பாரதத் தாயை பாதுகாப்பதற்காக தங்கள் இன்னுயிரை காஷ்மீர் மண்ணில் ஈந்திருக்கிறார்கள்.

gif 4

கோடிக்கணக்கான பாஜகவினர் சார்பில் இந்த 40 தியாகிகளின் குடும்பத்தினரின் பொற்பாதங்களில் என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன். எள்முனை அளவு கூட மோடி அரசு தீவிரவாதத்தை சகித்துக்கொள்ளாது. 40 தியாகிகள் சிந்திய ரத்தம் வீணாகாது. நிச்சயமாக சரியான பதிலடி கொடுக்கப்படும்” என்றார்.
மேலும், “மோடியை மீண்டும் பாரத பிரதமராக்க வேண்டியது பாஜகவினருக்கு எவ்வளவு அவசியமானதோ, அதைவிட பாரத தேசத்துக்கு முக்கியமானது.

 

மிகப்பெரிய ஊழல் செய்த காங்கிரஸும், திமுகவும் இந்த நாட்டுக்கும் தமிழகத்துக்கும் நல்லது செய்ய முடியுமா? திமுக-காங்கிரஸ் கூட்டணியின் பொருள் என்னவென்றால் ஊழல்; தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொருள் என்னவென்று சொன்னால் முன்னேற்றம். மோடிக்கு மீண்டும் 5 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தால், உலகிலேயே முன்னேறிய நாடாக இந்தியாவை உயர்த்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்” என்றும் அமித் ஷா பேசினார்.

 

முன்னதாக மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டணிக்கு அதிமுகவே தலைமையேற்கும் என்று அதிமுகவினர் கூறி வரும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெயரிலேயே அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டுமென அமித் ஷா இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ்ஸிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தக் கூட்டத்தில் தேமுதிகவையும், தமாகவையும் கூட்டணிக்குள் கொண்டுவருவதாக முயற்சிகள் குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இராமநாதபுரம் கூட்டத்துக்குப் பிறகு மதுரை திரும்பிய அமித் ஷாவை ஓபிஎஸ் மீண்டும் சந்தித்துப் பேசினார். அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. ஓரிரு தினங்களில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும். விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விசாரிக்கத்தான் சென்றதாகவும், அரசியல் பேசவில்லை எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்” என்றார்.

மேலும் அமித் ஷா கூறியது போல இது தேசிய ஜனநாயகக் கூட்டணியா அல்லது பாமக கூறியதுபோல மக்கள் நலக் கூட்டணியா அல்லது அதிமுக கூட்டணியா என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு ஓபிஎஸ் உரிய பதில் ஏதும் சொல்லாமல், நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையாக வெற்றி பெறக்கூடிய வெற்றிக்கூட்டணி என்று மழுப்பலாகப் பதில் கூறி நழுவிச் சென்றார். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரும் உடனிருந்தனர்.

 

gif 2

Leave A Reply

Your email address will not be published.