அருளமுதம் எனும் அருமருந்து உயிர் வளர்ப்போம்! கதை வழி மருத்துவம்-16

0
Business trichy

மன்னனும் ஏனையவரும் அப்பெண்ணை விசாரித்து கொண்டு இருக்கும்பொழுது அந்தப் பக்கம் வந்த ஒருவர் அப்பெண்ணை “மகளே, இங்கு ஏனம்மா வந்தாய்?” எனக் கேட்டபடி அருகே வந்தார். அவரைப் பார்த்து மன்னன் “அய்யா, இப்பெண் தங்களுடைய மகளா? இவள் சற்றுமுன் நான் வந்து கொண்டிருந்த தேரின் முன் வந்து விழுந்து விட்டாள்” எனக் கூறினான். மன்னனை கை கூப்பி பணிந்த அம்முதியவர், “மன்னர் அவர்களே, இவள் என்னுடைய மகள் தான். சில காலமாக இவளுக்கு சித்தபிரமை பிடித்துள்ளது. தான் யார் என்கிற உணர்வே இல்லாமல் காட்டை சுற்றி வருகிறாள். நாங்கள் இக்காட்டில் வசிக்கும் வேட்டுவ குலத்தவர்கள். இரண்டு வருடங்களுக்கு முன் இவளுக்கு திடீரென இந்த மனவியாதி ஏற்பட்டு விட்டது” என விளக்கினார்.

இதனை கேட்டு மனமிறங்கிய மன்னன் யோகியாரிடம், “அய்யனே, தாங்கள் தான் இப்பெண்ணுக்கு நல்லதொரு தீர்வை அளித்து அருள் செய்ய வேண்டும்.” என பணிந்து வேண்டினான். இதற்கு யோகியார் பலமாக சிரித்தபடி, “மன்னா, இப்பெண்ணுக்கான தீர்வு அவளிடமே உள்ளது. அப்படியிருக்க நான் எவ்வாறு இவளுக்கு உதவ இயலும்? என எதிர்வினா விடுத்தார். மன்னனோ, “அய்யனே, தாங்கள் ஞானத்தில் சிறந்தவர். தமது இக்கூற்றின் உட்கருத்து என்ன என்பது அடியேனுக்கு விளங்கவில்லை. தயை கூர்ந்து விளங்கிடுமாறு கூறி அருளுங்கள்? என வேண்டினான். அதற்கு யோகியார் “மன்னா, இப்பெண்ணுக்கான தீர்வு உறக்கமே ஆகும். உறக்கம் இல்லாத காரணத்தாலேயே இவளுக்கு சித்த பிரமை ஏற்பட்டுள்ளது” என விளக்கம் அளித்தார். இதனைக் கேட்ட அப்பெண்ணின் தந்தையார் தன் மகள் இரண்டு வருட காலமாக உறங்கவே இல்லை எனவும், இரவு முழுவதும் கண்களை அகல விரித்துக்கொண்டு எங்கோ பார்த்தபடி அமர்ந்திருப்பாள் எனவும் கூறினார். இப்போது யோகியார் அப்பெண்ணின் நெற்றியில். இரு புருவங்களுக்கு மத்தியில் தனது ஆட்காட்டி விரலை வைத்து ஒரு அழுத்தம் கொடுத்தார்.

அவர் அழுத்திய அடுத்த வினாடி அப்பெண் மயக்கமுற்று சரிந்தாள். அருகில் இருந்தவர்கள் அவளை தாங்கிப் பிடித்துக் கொண்டனர். அவளை அருகிலிருந்த ஒரு மரத்தின் நிழலில் படுக்க வைத்திடுமாறு யோகியார் கூறினார். மன்னனின் வீரர்கள் அவளை மரத்தினடியில் படுக்க வைத்தனர். சிறிது நேரத்துக்குப்பின் யோகியார் அப்பெண்ணை தட்டி எழுப்பினார். அவளும் மெல்ல கண் விழித்தாள். விழித்தபின் தன்னை சுற்றி நின்றிருந்த அனைவரையும் ஆச்சரியத்துடன் பார்த்தாள்.  யோகியார் அவளிடம் “பெண்ணே நீ யார்? உனது பெயர் என்ன? என வினவினார். அதற்கு அப்பெண் “எனது பெயர் வாலைச்செல்வி” எனக் கூறினாள். இதனைக் கேட்ட அப்பெண்ணின் தந்தை சந்தோசத்தில், “அம்மா செல்வி, உனக்கு நல்லாகிடுச்சும்மா” எனக் கூச்சலிட்டார். ஏதும் புரியாமல் விழித்த அப்பெண்ணுக்கு அவள் சித்தம் கலங்கிய நிலையில் இரண்டு வருட காலம் அவதியுற்றதை விளக்கினார் அவளின் தந்தை.யோகியாருக்கு நன்றி தெரிவித்த அப்பெண் தன்னை குணப்படுத்தியதற்கு நன்றிக்கடனாக தன் வாழ்நாள் முழுவதும் யோகியாருடன் இருந்து சேவை செய்ய விரும்புவதாக தன் விருப்பத்தை தெரிவித்தாள். இதற்கு மறுப்பு தெரிவித்த யோகியார், அப்பெண்ணை தனது தந்தையாருடன் செல்லுமாறு கூறினார். ஆனால் அப்பெண்ணோ பிடிவாதமாக தான் யோகியாருக்கு சேவை செய்யவே விரும்புவதாய் கூறினாள்.

Image
Rashinee album

யோகியார் தனது சேவையை ஏற்க மறுத்தால் எந்த உணவும் ஏற்காமல் வடக்கிருந்து உயிர் நீக்கப் போவதாய் சபதமிட்டாள்.  வேறு வழியின்றி யோகியார் அப்பெண்ணை தனது சீடர்களில் ஒருவராக ஆக்கிக்கொண்டார். இதனையடுத்து அவளையும் அவர்களுடைய பயணத்தில் உடன் இணைத்துக் கொண்டனர். அவளின் தந்தை அவளுக்குப் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தார். மீண்டும் அவர்களுடைய பயணம் தலைநகரை நோக்கி தொடர்ந்தது. பயணத்தினூடே மன்னன் யோகியாரிடம், “அய்யனே, தாங்கள் எந்தவித மருந்தும் அளிக்காமல் எவ்வாறு அப்பெண்ணை குணப்படுத்தினீர்கள்” என வினவினான்.

அதற்கு யோகியார், “மன்னா, ஆற்றல்தான் அனைத்திற்கும் அடிப்படை. நாம் கொடுக்கக்கூடிய மருந்துகளும் ஆற்றலாக மாறியே நோயை குணப்படுத்துகின்றன. நான் நேரிடையாக அப்பெண்ணின் ஆகாய பூதத்தினை ஆற்றலால் தூண்டியவுடன் அவள் உடனடியாக நலமடைந்தாள்” என விளக்கினார். விளக்கத்தை செவிமடுத்த மன்னனின் மனதில் ஆகாய பூதத்தினை பற்றி அறிந்து கொள்ளும் வேட்கை உண்டானது. தனது மனதின் வேட்கையை யோகியாரிடம் தெரிவித்தான். மன்னனின் அறிவுப் பசியை பாராட்டிய யோகியார் ஆகாய பூதத்தின் தன்மைகளை விளக்கத் தொடங்கினார். “மன்னா, ஆகாயத்தின் தன்மைகள் வெளிப்புற உணர்வு உறுப்பு – கண்கள், கரு உறுப்பு=கல்லீரல், உரு-உறுப்பு = பித்தப்பை, உணர்ச்சி-கோபம், சுவை – புளிப்பு, நிறம் – பச்சை, திசை – கிழக்கு, ஆதாரம் – ஆக்ஞை, (இரு புருவங்களின் மத்தி) என வகைப்படுத்தலாம். ஐந்து பூதங்களின் தலையாயதும், மனிதனுக்குள் மனமாக விளங்குவதும் இதுவே ஆகும். மனம் படைத்ததினாலேயே மனிதன் என்ற காரணப் பெயர் உண்டானது. சூட்சுமப் பொருளாக விளங்குகின்ற இம்மனத்தின் பெருமைகள் சொல்லில் அடங்காதது. ஒரு மனிதனின் ஆரோக்கியத்தில் மனம் பெரும் பங்கு வகிக்கின்றது. உடலில் தோன்றும் நோய்கள் மனதில் பாதிப்பையும், மனதின் பாதிப்புகள் உடலில் நோயையும் தோற்றுவிக்க வல்லவை. இந்த மனதின் ஆற்றலையே ஒருமுகப்படுத்தி குவிக்கும் பொழுது அதீத திறமைகளும் கண்டுபிடிப்புகளும் தோன்றுகின்றன. இந்த மனத்தினைக் கொண்டு தன்னை ஆராய்ந்து தனது மூலத்தை அறிந்து கொண்டவன் தன்னை உணர்ந்த ஞானி ஆகிறான். இதே மனத்தினால் தனது உடலின் ஆற்றலை எழுப்பி அதனை தனது உயிர் மூலத்துடன் இணைக்க தெரிந்தவன் மிகச்சிறந்த யோகி ஆகின்றான்” என யோகியார் ஆகாயத்தின் பெருமைகளை மன்னனுக்கு விளக்கினார்.

யோகியின் போதனைகள் தொடரும்…

Ukr

Leave A Reply

Your email address will not be published.