மக்களை கவர்ந்த நாயகன் வணக்கம் K.சோமு

தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையிலும், தமிழகத்தை பாலைவனமாக்க துடிக்கும் கர்நாடக அரசு காவிரி ஆற்றுக்கு குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில், திருச்சியில் இருந்து தனிமனிதனாக கழக நிர்வாகிகள் 110 பேரைத் திரட்டி அணை கட்ட முயற்சிக்கும் இடத்திற்கே சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர் தான் வணக்கம் கே. சோமு.

யார் இந்த வணக்கம் கே. சோமு?
திருச்சி மாநகராட்சியின் 10-வது வார்டுக்கு உட்பட்ட ஆண்டாள் வீதியில் வசித்து வரும் வணக்கம் கே.சோமு. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது ஏற்பட்ட ஈர்ப்பால் கடந்த 2009ம் ஆண்டு அதிமுகவில் தன்னை இணைந்துக்கொண்டார். தொடர்ந்து, 2011ம் ஆண்டு முதல் முழுநேர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மக்களுக்கு சேவை செய்வதையே தனது கடமையாக கொண்டு செயல்பட்டு வருகிறார். இவரின் செயல்பாடுகளை பார்த்த அதிமுக தலைமை, இவருக்கு திருச்சி மாநகர் மலைக்கோட்டை பகுதி பொருளாளர் பதவி கொடுத்துள்ளது.
கடந்த வருடம் காவிரியில் தண்ணீர் வராத போது, தமிழக டெல்டா பகுதிகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவியது. நிலத்தடி நீருக்குக் கூட வழியில்லாமல் பல கிராமங்கள் தத்தளித்தன. நகரங்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். திருச்சி முழுவதும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வந்தது. போகப்போக அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் வரும்படியாக மாற்றப்பட்டது. இதனால் திருச்சி மாநகரமே தண்ணீர் பற்றாற்குறையால் திண்டாடியது.
அந்த நேரத்தில் மாநகராட்சியின் 10-வது வார்டில் மட்டும் தண்ணீர் பஞ்சத்தை போக்கினார் வணக்கம் கே. சோமு. தன்னுடைய வார்டு முழுவதும் காலை 4 மணி முதல் இரவு 11 மணிவரை லாரிகளின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்தார். ஒரு நாள் இரு நாள் அல்ல. தொடர்ந்து 5 மாதம் இலவசமாக தண்ணீர் கொடுத்துள்ளார்.
அந்த சமயத்தில் அப்பகுதிமக்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்தது. ஆனால், திருச்சி முழுவதும் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தை கண்டு மனம் துவண்டார் வணக்கம் கே. சோமு. இந்நிலையில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது தமிழகத்தை பாலைவனமாக்கும், தண்ணீர்பஞ்சத்தால் மக்கள் மிகவும் அவதிப்படுவார்கள் என்பதை உணர்ந்தவருக்கு உள்ளுணர்வு துண்டி விடவே இந்த முயற்சியை தடுத்தே ஆகவேண்டும் என்ற வேட்கையில் தொடர்ந்து பயணித்து வருகிறார். அதன், ஒரு போராட்டமாகவே கடந்த 21.1.19 அன்று அதிமுக கழக நிர்வாகிகள் 110 பேரை அழைத்துக்கொண்டு மேகத்தாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கும் இடத்திற்கே சென்று போராட்டத்தில் ஈடுபட்டு கர்நாடக மண்ணிலே கர்நாடகத்திற்கு எதிராக கண்டன குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இது குறித்து அவரிடம் பேசியபோது, பல்வேறு திட்டமிடலுக்கு பின்னரே அங்கு சென்றோம். நினைத்தபடியே போராட்டம் நடத்தி விட்டோம். திருச்சிக்கு திரும்பிய பிறகு இங்கு எங்களுக்கு உற்சாக வரவேற்பு இருந்தது. கட்சியில் இருந்த அனைவரும் பாராட்டினார்கள். கட்சி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் தொடர்ந்து செய்தி ஒளிபரப்பப்பட்டது. இந்த பிரச்சனையில் இத்தோடு நின்றுவிடப்போவதில்லை. மேகதாதுவில் அணைகட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்து புத்தகம் வெளியிட்டு திருச்சி முழுவதும் கொடுக்க உள்ளேன். இதன் வீரியத்தை மக்களுக்கு கொண்டு சென்று அவர்களின் மூலம் இதற்கு தீர்வு காண்பதே என்னுடைய இலக்கு என்கிறார் இலட்சியக்குரலுடன். இந்த போராட்டத்திற்கு பிறகு, தமிழகம் முழுவதும் வணக்கம் கே. சோமு அறிமுகமாகியுள்ளார். அதுமட்டுமின்றி, இவரின் இந்த போராட்டத்திற்கு தொடர்ந்து மக்கள் மத்தியில் ஆதரவும் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது.
கஜா புயலில் அரணாக நின்ற வணக்கம் கே. சோமு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மட்டும் இன்றி, திண்டுக்கல்லிலும் அநேக இடங்களிலும் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடியது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் வீடு, கால்நடை, விளைநிலங்களின் மூலம் கிடைத்த பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து இயல்பு வாழ்க்கையை தொலைத்து நிற்கதியாக இருந்தனர். பெரும்பாலான கிராமங்களில் மின்கம்பங்கள், தென்னை மரங்கள் உட்பட பல்வேறு மரங்கள் வேறோடு சாய்ந்தது. டெல்டா மாவட்ட மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கை மீள்வதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாடு மட்டும் இன்றி உலகம் முழுவதிலும் இருந்து ஆதரவுக்கரங்களை தொடர்ந்து நீட்டிக்கொண்டு தான் இருக்கின்றனர். இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரம் தாங்க முடியாத வணக்கம் கே.சோமு, எந்தவித முன்னேற்படும் இன்றி, நகரங்களில் கிடைக்கும் உதவி கிராமமக்களுக்கு கிடைக்கவில்லை, என்ற உணர்வுடன் அவர்களுக்கு உதவிட புறப்பட்டார். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாண்டி 20கி.மீ தொலைவில் உள்ள புள்ளான் விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப்பகுதிகள் கடுமையாக பாதிப்படைந்திருப்பதை கேட்டு, அவர்களுக்கு உணவு மற்றும் உடமைகளை வழங்க சென்றுள்ளார்.
ஆனால், அங்கு சென்றதும் அந்த மக்களின் துயரத்தில் வேதனை அடைந்துள்ளார். இந்நிலையில், அந்த கிராமத்தில் உள்ள மக்கள் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாமல் மிகவும் சிரமமாக உள்ளது. பூச்சி, புழு என எது வந்தாலும் தெரிவதில்லை. குழந்தைகள் எல்லாம் இரவில் தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர் எனக்கூறவே பதைபதைத்துப்போன வணக்கம் கே. சோமு, தொடர்ந்து, 24 நாட்கள் 350 குடும்பங்களுக்கு இரவு பகலாக தனது சொந்த செலவில் ஜெனரேட்டர் மூலம் ஒரு கிராமத்திற்கே மின்சாரம் கொடுத்து பாதுகாப்பு அரணாக செயல்பட்டுள்ளார். 350 குடும்பங்களுக்கு மின்இணைப்பு கொடுக்க 30ஆயிரம் மீட்டர் ஓயரும், 15க்கும் மேற்பட்ட ஆட்களும் தேவைப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, தினந்தோறும் டீசல் வாங்குவதற்கும், ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் சரி செய்வதற்கும் ஆட்களை அங்கே தங்கவைத்து அவர்களுக்கு ஊதியமும் வழங்கியுள்ளார். அரசு மின்இணைப்பு கொடுத்தும் இரு நாட்கள் கழித்தே அங்கிருந்து ஜெனரேட்டர்களை எடுத்துவந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
கஜா புயல் யாருமே எதிர்பாராமல் நடந்தது. அனைவரின் யூகத்தைக்காட்டிலும் புயலின் பாதிப்பு சற்று அதிகமாகவே இருந்தது. அரசும் தங்களால் முடிந்த வரை மீட்பு பணிகளை போர்கால அடிப்படையில் செய்தது. அந்த மக்களின் துயரத்தைப்பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது. பணத்தைப்பற்றி நான் கவலைப்படவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப உதவிட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உள்ளது என்றார்.
அடுத்தவர்களின் பிரச்சனைகளை தன்னுடைய பிரச்சனையாக பார்த்து உதவுவதே மனிதம். தற்போதைய விஞ்ஞான காலத்தில் அடுத்தவரைப்பற்றி நினைக்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரின் துயர்துடைக்க எங்கிருந்தாலும் வருவேன் என்று கூறும் வணக்கம் கே. சோமுவுக்கு பாராட்டுக்கள்.
