மகளிர் நலம் பேணும் “Feel free…”

0

மகளிர் நலம் மற்றும் வளரிளம் பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு தற்போது விரிவாகப் பரவி வருகிறது. பெண்களுக்கு அதிலும் வளரிளம் பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் என்பது பெரும் சவாலான பிரச்னையாக உள்ளது. அருகிருப்போர் வழிகாட்டுதல், விளம்பர வெளிச்சம் போன்றவற்றால் கவரப்படும் பெண்கள், மார்க்கெட்டில் விற்பனையாகும் விதவிதமான சானிட்டரி நாப்கின்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். பின்னர் அவைகளை அப்புறப்படுத்துவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்கின்றனர்.

அவைகள் சரியான முறையில் அப்புறப்படுத்தப்பட்டு அழிக்கப்படாததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுகாதாரக்கேடும் நிலவுகிறது. அவைகளை அழிக்க நவீன எரியூட்டிகள் சிற்சில இடங்களில் அமைக்கப்பட்டு இருந்தாலும், அதனைப் பயன்படுத்திக்கொள்ள பெரும்பாலான பெண்கள் தயங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற “மாதவிடாய் சுகாதாரக் கல்வி” குறித்தான கருத்தரங்கில், நூற்றுக்கு நூறு பருத்தி துணியினால் ஆன “Feel free” எனும் பெயரில் சானிட்டரி நாப்கின் அறிமுகப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, திருச்சியில் இயங்கி வரும் “கிராமாலயா” தொண்டு நிறுவனம். “புதிய பெயரில் சானிட்டரி நாப்கின் உற்பத்தி செய்து உலவ விட வேண்டும் என்கிற எண்ணம், உங்கள் தொண்டு நிறுவனத்துக்கு எப்போது ஏற்பட்டது? ஏன்?” எனக் கேட்டோம்.

 

‌சந்தா 1

“கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகக் கிராமங்களில் மகளிர் சுகாதாரம் குறித்து இயங்கி வருகிறது கிராமாலயா தொண்டு நிறுவனம். பல ஆண்டுகளாகவே தொடர்ந்து இது குறித்து பல கிராமங்களில் நேரடி கள ஆய்வு செய்து வருகிறோம். கிராப்புறங்களில் பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் காலங்களில் பழைய துணிகளைப் பயன்படுத்துவதை இன்னமும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒரு கட்டத்தில் பழந்துணிகள் பயன்படுத்துவதால் தொற்றுக்கள் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டு, பின்னர் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இப்போது அந்த நாப்கின்களை பயன்படுத்துவதிலும் பிரச்னை இருப்பதாக சமீபகால மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் கடந்த ஒரு ஆண்டாகவே எங்கள் தொண்டு நிறுவனம் இந்தப் புதிய முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது.” என்கிறார் கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அமிர்தமதி.

 


மேலும் அவர், “கடைகளில் விற்பனையாகும் சானிட்டரி நாப்கின்களில் தொண்ணூறு சதவீதம் பாலிபுரோப்லின் என்கிற பிளாஸ்டிக் பொருளும், ரசாயனமும் கலந்துள்ளதால் அவற்றைப் பயன்படுத்தும் பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் வகையிலான நோய்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாகக் கர்ப்பப்பை தொடர்பான நோய்கள், தொற்றுகள் ஏற்படும் அபாயம் மற்றும் எரிச்சல், ஒவ்வாமை, அரிப்பு ஏற்படும் நிலையும் உருவாகுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதனால் பெண்கள் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் சிரமங்களைத் தவிர்க்க வேண்டியும், அந்த நாட்களில் அவர்களது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் எங்கள் தொண்டு நிறுவனத்தின் மகளிர் சுய உதவிக்குழுவினர், நாப்கின்களுக்கு மாற்றாக முற்றிலும் பருத்தி துணியினால் தயாரிக்கப்பட்டுள்ள புது வகையிலான “Feel free” நாப்கின்களை அறிமுகப்படுத்தி உள்ளனர்.” எனக் கூறுகிறார்.

 

“உங்களது புது வகை நாப்கின்கள் தரமானவையா? விலை மலிவானவையா?”  எனக் கேட்டிருந்தோம்.

சந்தா 2

“திருப்பூர் பனியன் கம்பெனிகளில் கழிவாகும் தூய பருத்தி துணிகளையே வாங்கி வந்து நாப்கின்கள் தயாரிக்கிறோம். இதில் பாலிபுரோப்ளின் எனப்படும் பிளாஸ்டிக்கையோ ரசாயனத்தையோ நாங்கள் சேர்ப்பது இல்லை. முற்றிலும் பருத்தி துணியினை மட்டுமே உபயோகப்படுத்தி நாப்கின் தயாரிக்கிறோம். ஒரு ஆண்டாக மகளிர் மற்றும் வளரிளம் பெண்களிடம் பயன்பாட்டுக்கு தந்து சோதனை முயற்சியாக பல ஆய்வுகளும் செய்துள்ளோம். அவர்கள் அனைவரும் இப்பொழுது நாங்கள் மிகவும் ப்ரீயாக இருப்பதாக உணர்கிறோம் என்று எங்களிடம் அவர்கள் தெரிவித்த பின்னரே, இதற்கு “Feeel free” எனப் பெயரிட்டோம்.

ஐந்து நாப்கின்கள் கொண்ட ஒரு பாக்கெட் இருநூற்றைம்பது ரூபாய்க்கு தருகிறோம். ஒரு நாப்கின் ஐம்பது ரூபாய். இதனை எட்டு மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றினால் போதும். மேலும், இதனைத் துவைத்து நன்கு வெயிலில் காய வைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் துவைத்துக் காய வைத்துப் பின்னர் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு பாக்கெட்டை ஒரு ஆண்டு வரை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பின்னர் அதனை எரியூட்டி அழித்து விடலாம். எரியூட்டாமல் அதனை மண்ணிலே போட்டாலும் பாதிப்பு ஏதுமில்லை. பருத்தி துணி என்பதால் மக்கும் குப்பை ரகத்தைச் சேர்ந்ததால் மண்ணோடு மண்ணாக அதுவே மக்கிப் போகும். சுற்றுச்சூழலுக்கு கெடும் இல்லை” என்கிறார் அதன் திட்ட இயக்குனர் அமிர்தமதி.
“டெல்லியில் வாட்டர் எய்டு மற்றும் தஸ்ரா நிறுவனங்கள் நடத்திய மாதவிடாய் சுகாதாரம் குறித்த கருத்தரங்கில் பங்கேற்று, அங்கு இதனை அறிமுகம் செய்தோம். இது விலை மலிவானது. சுகாதாரமானது.

 

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காதது. கருத்தரங்கில் பங்கேற்ற அனைத்து மாநிலப் பெண்கள் குழுவினரையும் பெரிதும் ஈர்த்தது இந்த நாப்கின். திருச்சி மாவட்டத்தில் பதினான்கு பிளாக்குகளில் பள்ளி மாணவிகளிடையே இதற்கான பிரச்சாரம் செய்துள்ளோம். அரசுப் பள்ளிகள் பதினான்கில் மாணவிகளுக்கென “பெண்கள் நேயக் கழிப்பறைகள்” கட்டித் தந்துள்ளோம். ஒரு பள்ளிக்கு ஐந்து லட்ச ரூபாய்த் திட்டத்தில் முந்நூறு சதுர அடி பரப்பில் சிறுநீர், கழிவறை, நாப்கின் பொருத்திக்கொள்ளும் அறை, கழிவறைக்கு ஒட்டியே அதனை எரியூட்டும் தொட்டி என அமைத்துத் தந்துள்ளோம். கிராமங்களிலும் இதுபோன்ற அமைப்புகளில் “பெண்கள் நேயக் கழிப்பறைகள்” கட்டித் தந்துள்ளோம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் கிராமங்களில் தனி நபர் கழிவறைத் திட்டத்தில் இதுவரை சுமார் ஒரு லட்சம் கழிவறைகள் கட்டித் தந்துள்ளோம்” என்கிறார் கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தாமோதரன்.

-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

Leave A Reply

Your email address will not be published.