துணி துவைக்கும் இயந்திரப்பிரிவில் கூடுதல் இடங்கள்-தட்சிண ரயில்வே எம்பளாயீஸ் யூனியன்

பயணிகளின் கோரிக்கையினை ஏற்று
துணி துவைக்கும் இயந்திரப்பிரிவில் கூடுதல் இடங்கள் உருவாக்கவேண்டும்
தட்சிண ரயில்வே எம்பளாயீஸ் யூனியன் வலியுறுத்தல்.

பயணிகளின் கோரிக்கையினை ஏற்று ரயிலில் பயன்படுத்தப்படும் திரைச்சீலை மற்றும் போர்வை துவைக்கும் இயந்திரப் பிரிவுகளுக்கு கூடுதலான இடங்களை உருவாக்கி ரயில்வேத் துறையே நடத்த வேண்டும் என ரயில்வே அமைச்சகத்தை தட்சிண ரயில்வே எம்பளாயீஸ் யூனியன் துணைப்பொதுச்செயலாளர் மனோகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, நாள் ஒன்றுக்கு 13, 300 பயணிகளுக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் அழைப்பின் பெயரில் 1, 000 ஜோடி ஓடும் ரயில்களில் சுத்தம் செய்யும் பணியும், 39 முக்கிய சந்திப்புகளில் ரயில் பெட்டிகள் வழியில் சுத்தம் செய்யும் பணியும், 59 இடங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வை, தலையணை உறை, குளிர்சாதனப் பெட்டிகளின் திரைச் சீலைகள் இயந்திரங்கள் மூலம் துவைத்து வழங்கும் பணியும் நடக்கிறது.

இருப்பினும் பெட்டிகளின் இணைப்பு, நடைபாதைகள், கழிப்பறைகள் பகுதிகளில் பராமரிப்பு போதுமானதாக இல்லை. ஜன்னல் திரைச்சீலைகள், போர்வை துணிகள் சரிவர துவைக்கப் படுவதில்லை என்ற புகார்கள், ரயில்வே அமைச்சகத்திற்கு தொடர்ந்து வந்ததால் ஒரு தனியார் நிறுவனம் மூலம் ஆய்வுமேற்கொண்டது.
209 முக்கிய ரயில்களில் 15, 360 பயணிகளிடம் பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கனடா, மலையாளம், மராத்தி, ஓடியா, தமிழ், தெலுங்கு மொழிகளில் படிவங்கள் வழங்கி அவர்களின் தாய் மொழிகளில் கருத்து மற்றும் சேவைக்கான மதிப்பெண் பெறப்பட்டது. 63 சதவீத ஆண் மற்றும் 37 சதவீத பெண் பயணிகள் கருத்தை தெரிவித்து இருந்தனர். மேலும் பல கட்ட ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.
ராஜதானி, தூரந்தோ, சதாப்தி போன்ற பிரிமியம் ரயில்களின் பராமரிப்பில் 1000-க்கு 808 மதிப்பெண்களுடன் 7 வது இடத்தையும், பிரிமியம் அல்லாத ரயில்களான இண்டர் சிட்டி, ஜனசதாப்தி, விரைவு ரயில்கள் வகையில் 1000 க்கு 736 மதிப்பெண்களுடன் முதல் இடத்தையும் தெற்கு ரயில்வே பெற்று அசத்தி இருக்கிறது.
பிரிமியம் ரயில்களில் தென் மத்திய ரயில்வேயும், பிரிமியம் அல்லாத ரயில்களில் கிழக்கு மத்திய ரயில்வேயும் கடைசி இடத்தை பிடித்து இருக்கின்றன. வண்டி எண் 12025/12026 பூனே – செகந்தராபாத் சதாப்தி ரயில் 1000 க்கு 916 மதிப்பெண்கள் பெற்று இந்தியாவின் மிகத் தூய்மையான ரயில் என தெரிய வந்து இருக்கிறது.
46.5 சதவீத ரயில் பயணிகள் திரைச்சீலை மற்றும் போர்வை தலையணை துணிகள் தூய்மையாக இல்லை என பெரிய குறைபாடாக கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். துணி துவைக்கும் இயந்திரப் பிரிவுகள் கூடுதலான இடங்களில் உருவாக்கி ரயில்வே துறையே நடத்த வேண்டும்.
