கிரெடிட் கார்டு: சாத்தானா, கடவுளா?

0
Business trichy

கிரெடிட் கார்டு மிக அற்புதமான ஆயுதம்…

அட்டென்டென்ஸில் மட்டும்தான் பாஸ்கர்… மற்றபடி எல்லோருக்கும் அவர் சிசி பாஸ்கர்தான். சிசி என்பது இனிஷியல் கிடையாது. அவருடைய வேலையின் சுருக்கம் என்றும் சொல்லலாம். அப்படித்தான் அவர் சொல்லிக்கொள்வார். நிறுவனத்தின் கேஷியராக இருக்கும் அவர் அந்தத் துறையில் சீனியர் என்பதால் சீஃப் கேஷியர்! ஆனால், மற்ற எல்லோரும் அவரை அழைப்பதற்குக் காரணம் அவரிடம் உள்ள கடன் அட்டைகள்… கிரெடிட் கார்ட் பாஸ்கர் என்பதன் சுருக்கம்தான் சிசி பாஸ்கர்!
பாஸ்கரின் பர்ஸை வாங்கிப் பார்த்தால் பணம் இருக்கிறதோ இல்லையோ கிரெடிட் கார்டுகள் நிச்சயமாக இருக்கும்.

“அதில் உள்ள வசதிகள் உங்களுக்குத் தெரியாதப்பா…” என்று பேசத் தொடங்கினார் என்றால் பேச்சின் முடிவில் எங்கே கிடைக்கும் இந்த கிரெடிட் கார்ட் என்று நாம் தேடத் தொடங்கிவிடுவோம்.

loan point

“நம்மோட தகுதியும் திருப்பிச் செலுத்தற திறமையும் தெரிஞ்சுதான் அவன் கிரெடிட் கார்டு குடுக்கறான். பணமில்லாத சூழ்நிலைலகூட ஒரு பொருளை வாங்கறதுக்கு நமக்கு உதவியா இருக்குன்னா கிரெடிட் கார்டு நல்ல விஷயம்தானே” என்பார்.

 

nammalvar

இதுபற்றிப் பேசும் எல்லோரிடமும் சொல்வதற்கு பாஸ்கரிடம் ஒரு கதை உண்டு.
“தீபாவளி முடிஞ்சிருந்த நேரம்… கம்பெனில குடுத்த போனஸ்… சேமிப்புல இருந்த பணம் எல்லாத்தையும் போட்டு ஒரு கார் வாங்கினேன்… ஒண்ணாம் தேதி சம்பளம் வந்தால்தான் அடுத்த செலவுக்கு காசுனு ஒரு நிலைமை… அப்ப திடீர்னு அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு… உடனடியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டோம்… ஐசியூவுல சேர்த்துட்டாங்க… உடனடியா 25,000 கட்டிடுங்கன்னு சொல்றாங்க… ராத்திரி ரெண்டு மணி… அந்நேரத்துக்கு யாரை எழுப்பி பணம் கேட்க முடியும்… டக்குனு கையிலே இருந்த கார்டை தேய்ச்சேன்… மறுநாள் நண்பர்கள் வந்தாங்க… கம்பெனில அட்வான்ஸ் வாங்கினேன்… அதெல்லாம் சரியாகிடுச்சு… ஆனா, அந்த அர்த்த ராத்திரியில் கைகொடுத்தது கிரெடிட் கார்டுதானே… நாம கரெக்டா யூஸ் பண்ணினோம்னா எந்தப் பிரச்சினையும் இல்லை…” என்று அவர் கதை சொல்லி முடிக்கும்போது கிரெடிட் கார்டு நிச்சயமாகக் கடவுள் மாதிரிதான் தோன்றும்.

 

இன்னும் சில விஷயங்கள் சொல்வார்.

“கிரெடிட் கார்டுக்கு என்று ஒரு கால அளவு நிர்ணயம் பண்ணியிருப்பாங்க… அதுக்குள்ளே நாம கட்டிட்டோம்னா வட்டிகூட கிடையாது… நமக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை நாம பயன்படுத்திக்கலாம்… ரெண்டு மூணு கார்டு வெச்சிருந்தோம்னா ரொட்டேஷன்ல அதை மெயின்டெய்ன் பண்ணிக்கலாம்… பணப் பிரச்சினை வரவே வராது… எவன்கிட்டேயோ கையைக் கட்டி தலையச் சொறியறதைவிட இது நல்ல விஷயம்தானே…” என்பார்.

கேட்க இனிமையாகவே இருக்கும். நாமும் இரண்டு கார்டுகளை வாங்கிவிட வேண்டும் என்று கைகள் பரபரக்கும்.
அப்படிப் பலருக்கு வாழும் உதாரணமாகச் சொல்லப்பட்ட பாஸ்கர் திடீரென்று கம்பெனிக்கு வரவில்லை. என்னவென்று விசாரித்தபோது, “கிரெடிட் கார்டுக்கு பணம் கட்டலையாம்… ஆட்கள் வீடு தேடி வந்துட்டாங்களாம்… அதைச் சரி பண்றதுக்கு கம்பெனி பணத்தை எடுத்து கட்டியிருக்கார்… அது தெரிஞ்சதும் கெடு குடுத்து பணத்தைக் கட்டலைன்னா போலீஸ்ல சொல்லிருவோம்னு சொல்லியிருக்காங்க… பணத்தைப் புரட்டிட்டு வர்றேன்னு போயிருக்கார்…” என்றார்கள்.

ஒரு வார விடுப்புக்குப் பிறகு கம்பெனிக்கு வந்தவர் கையோடு ராஜினாமா கடிதத்தைக் கொண்டு வந்திருந்தார்.
“ஒரு டீ சாப்பிடப் போலாமா…” என்றார். கேன்டீனில் வைத்து மனம் உடைந்து பேசத் தொடங்கினார்.

web designer

“கிரெடிட் கார்டு கடவுள் இல்ல… சாத்தான்… என்னை புதைகுழில தள்ளி விட்ருச்சு…” என்றவர், தான் சிக்கிக்கொண்ட கதையைச் சொன்னார்.

 

பாஸ்கரிடம் நாலைந்து கிரெடிட் கார்டுகள் உண்டு. வீட்டுச் செலவுகளுக்கு என்று ஒரு கார்டு வைத்திருப்பார். பண்டிகைக் கொண்டாட்டங்களுக்குச் செலவு செய்ய ஒரு கார்டு வைத்திருப்பார். நண்பர்களோடு உல்லாச சுற்றுலா, பார்ட்டிகள் என்று செல்வதற்கு ஒரு கார்டு வைத்திருப்பார். இது தவிர பெட்ரோல் போட, ரயில் டிக்கெட் பதிவு செய்ய என்பன போன்ற செலவுகளுக்கு ஒரு கார்டு வைத்திருப்பார். அப்படிப்பட்ட கணக்குகள்தான் அவரைக் குழப்பிவிட்டன.

அப்பாவுக்கு ஆஸ்பத்திரி செலவு வந்தது போலவே பிள்ளைக்குப் படிப்பு செலவு வந்திருக்கிறது. அதற்கும் கிரெடிட் கார்டைத் தேய்த்து பணம் கட்டியிருக்கிறார். அது ஒரு கார்டிலுள்ள உச்ச அளவு. அதைச் சமாளிக்க இரண்டாவது கார்டில் இருந்து பணத்தை எடுத்துப் போட்டிருக்கிறார். அதற்குள் காலக் கெடு முடிந்துவிட வட்டி கட்ட வேண்டியதாகி இருக்கிறது.

இதற்கு நடுவே பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் பண்டிகைச் செலவுக்கென கொஞ்சம் கார்டில் தேய்த்திருக்கிறார். அதை மனதில் வைக்காமல் பணத்தை எடுத்ததால் வட்டி எகிறிவிட்டது. ஒருமுறை சிக்கலில் மாட்டிக்கொண்டதால் மீண்டும் மீண்டும் சுழற்றி அடிக்க கையில் இருந்த அத்தனை கிரெடிட் கார்டுகளிலும் உச்ச வரம்பைத் தொட்டுவிட்டார்.

“இப்ப கம்பெனியிலே எடுத்த பணத்தை பிஎஃப்ல வர்ற பணத்துல கழிச்சுக்கோங்கனு சொல்லிட்டேன்… ஐம்பது வயசாகப் போவுது… புதுசா வேலை தேடி எப்படி பொழைக்கப் போறேன்னு தெரியல…” என்றார்.

மொத்தம் பத்து லட்சம் என்ற அளவில் கம்பெனிக்குப் பணம் செலுத்த வேண்டியிருந்தது.
“இந்தப் பத்து லட்சத்துக்காக வேலைய விடாதீங்க… வீட்ல இருக்கற நகைகளை பேங்க்கில் வெச்சு கடன் வாங்கி முடிஞ்சதைக் கட்டுங்க… மீதியை ஆபீஸ் கடனா மாத்தித் தரச் சொல்லுங்க… நானும் ஜிஎம்மிடம் பேசறேன்… இப்ப கேஷியர் வேலைக்கு உங்களை விட யாரும் பொருத்தமா இருக்க மாட்டாங்க… பணம் எப்படிப்பட்ட ஆயுதம்னு உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கும்…” என்று சொன்னதும் ஓரளவுக்கு நிம்மதியானார்.

அப்போது அவரிடம் சொன்னேன். “பாஸ்கர் சார்… கிரெடிட் கார்டு சாத்தான்னு சொன்னீங்க இல்லே… சாத்தான் அது இல்ல… உங்க மனசுதான்… கார்டு என்பது வெறும் ஜடப் பொருள்… அது என்ன பண்ணும்… உங்கள் வருமானம் என்னன்னு தெரியும்… உங்களால என்ன திருப்பித் தர முடியும்னு தெரியும்… ஆனா, அதை மீறி உங்களைச் செலவு செய்ய வைத்த உங்க மனசுதான் சாத்தான். கிரெடிட் கார்டு இல்லைன்னாலும் நீங்க அதிக வட்டிக்கு வாங்கி இந்தச் செலவுகளைச் செய்திருப்பீங்க…” என்றேன். பாஸ்கர் ஒப்புக்கொண்டார்.

ஆனால், பாஸ்கர் கேஷ் பிரிவில் இருந்து மாற்றப்பட்டு அக்கவுன்ட்ஸ் துறைக்குப் போஸ்டிங் செய்யப்பட்டார். இன்க்ரிமெண்ட்கள் கட் செய்யப்பட்டு புதிய ஊழியர் போல ஆக்கப்பட்டார். தனக்கான தண்டனையாக அவர் அதை எடுத்துக்கொண்டார். இப்போது அவரிடம் கிரெடிட் கார்டு இல்லை.

அடுத்த வாரம் தொடரும்

IAS academy

Leave A Reply

Your email address will not be published.