ஆதிமகள்-7

0

காயத்ரியை, தன்னை வந்து சந்திக்கும்படி, விசாலி கோகுலகிருஷ்ணன் கூறியதை சண்முகநாதன் காயத்ரியிடம் கூறியதும் காயத்ரியும் பார்க்கலாம் என கூறியிருந்தாள்.
காயத்ரியை ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டு சண்முகநாதன் வீட்டினுள் சென்றார். ஆட்டோவில் ஏறி அமர்ந்த காயத்ரி, தன் பார்வையிலிருந்து மறையும் வரை வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். வீடு அவள் பார்வையிலிருந்து மறைந்து போனது.

அப்பாவின் அருகாமையில் அமர்ந்து ஒரு குழந்தையின் உற்சாகத்துடன், தனது தோழியை பார்க்க புறப்பட்ட காயத்ரிக்கு தான் எதற்காகவோ பயணப்பட்டு எதிர்பார்க்காத, எதிர்பாராத, ஏதேதோ நிகழ்வுகள் நடப்பதை எண்ணி பிரமித்து போனாள்.

 

தான் இதுவரை கண்டிராத, யதார்த்த சர்க்கஸ் இது. அமைதிக்கு வாய்ப்பளிக்காத தொடர் எண்ணங்கள், சம்பந்தமே இல்லாத ஒருவரின் மரணம் குறித்த பதட்டம், இதெல்லாம் காயத்ரிக்கு புது அனுபவமாக தோன்றியது. தனது அப்பா, இறந்து போனவரின் வீட்டை கட்டி தந்த ஒப்பந்ததாரர் என்பதால் இந்த பரிதவிப்போ என்று கூட தன்னை சமாதானம் செய்து பார்த்தாள்.

 

இல்லை. தனது மனம் தான் பதட்டமடைந்தது போல், குழப்பமடைந்தது போல் பாவனை செய்து கொள்கிறதோ அல்லது தனக்கு இந்த சூழல் முதல் முறை என்பதால், எண்ணங்கள் அதுவாக கொட்டி தீர்க்கிறதோ, என தனக்கு தானே கேட்டுக் கொண்டாள். அந்த எண்ணங்களின் முடிவில் ஆட்டோ காயத்ரியின் வீட்டின் முன்னே வந்து நின்றது.

 

காயத்ரியை எதிர்பார்த்து காத்திருந்த ஜானகி அம்மாள், வீட்டின் கதவை திறந்து காயத்ரியை வீட்டின் பின்புறமாக வரச்சொன்னாள். காயத்ரி புரிந்து கொண்டாள். அப்பா போன் செய்து பேசியிருப்பார். அதான் அம்மா நிலைத்த அமைதியுடன் காணப்படுகிறாள் என்று. காயத்ரி பின்புற வாசல் வழியே வந்து குளியலறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.

இரவு உணவை எடுத்து வைத்துக்கொண்டு காத்திருந்தாள் ஜானகி அம்மாள். காயத்ரி குளித்துவிட்டு சாப்பிட வந்தமர்ந்தாள்.
காயத்ரி ஆட்டோவில் வந்திறங்கி வீட்டினுள் அம்மாவை பார்த்தபோதே, தனக்கு பசிக்கிறது என்பதையே உணர்ந்திருந்தாள்.

அப்பா அம்மாவிடம் போனில் நடந்ததை தெளிவாக சொல்லியிருப்பார், ஜானகி அம்மாளோ தன்னளவில் தனக்கு தெரிந்தவரை புரிந்து கொண்டு, இது இப்படியாகத்தான் இருக்குமென அவளாகவே முடிவு செய்து, அமைதியாகி விடுவாள். அவளுள் கேள்விகள் இல்லாததால், அவளுக்குள் குழப்பங்கள் இல்லை போல, என காயத்ரி அம்மாவை பற்றி நினைத்துக்கொண்டாள்.

காயத்ரி சாப்பிட்டுக் கொண்டே, அம்மா ஏதேனும் தன்னிடம் பேசுவாள் என எதிர்பார்த்தபடி ஜானகி அம்மாளையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஜானகி அம்மாள் எதுவுமே பேசவில்லை. அதுதான் அவளின் இயல்பு. அவளின் இயல்பே அப்படித்தான். ஒருவேளை தான்தான் இந்த விசயத்தை பெரிதாக எடுத்துக் கொண்டோமோ என்று கூட தோன்றியது காயத்ரிக்கு. அந்த நேரத்தில் அம்மாவின் மௌனம் அவளுக்கு பிடித்திருந்தது. இவள் தன்னுடைய அம்மா என்பதனால்கூட அந்த நேரத்து அவளது அமைதி, மௌனம் காயத்ரிக்கு பிடித்திருக்கலாம்.

இப்படியும் யோசித்து பார்த்தாள் காயத்ரி, அங்கு நடந்த விசயத்தை தன்னிடம் கேட்டு தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது.
இல்லை நாமாக அம்மாவிடம் சொல்வதற்கு, பேசுவதற்கு என்ன இருக்கிறது, என யோசித்த போது விசாலி கோகுலகிருஷ்ணன் கருப்புநிற ஆடையுடன் மிளிரும் குறுநகையுடன் அவள் நினைவில் வந்து போனாள். அவளைப் பற்றி அம்மாவிடம் பேசலாமே என பேச்சை ஆரம்பிப்பதற்குள், அம்மா காயத்ரியிடம் கேட்டாள், ஏண்டி, அப்பா இப்ப சாப்பாட்டுக்கு என்னாடி பண்ணுவாரு. இந்த நேரத்துக்கு டீ- காபி என ஏதாவது ஏற்பாடு பண்ணியிருப்பாங்களா? என அப்பாவியாக அவள் கேட்டது காயத்ரிக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

 

ஒரு மரணத்தின் துக்கத்தை, கவலையை, அடுத்த நேர பசி தகர்த்தெறிந்து, அதன் வீரியத்தை குறைக்குமோ! இதோ நாம் கூட பசியை உணர்ந்ததும், எண்ணங்கள் பல திசைகளில் ஓடினாலும் நான் எனக்கு தேவையான உணவை எடுத்துக் கொண்டேனே, கோகுல கிருஷ்ணன், தெரியாத நபர் என்பதால் எனக்கு அந்த மரணம் உறைக்கவில்லையா, உணர்வுகள் நிலைக்கவில்லையா, ஒருவேளை தனது ரத்த உறவுகள் என்றிருந்தால், பரிதவிக்கும் உணர்வின் வீரியம் இன்னும் சில மணி நேரம் நீடித்து, உணவின் நேரம் சற்று தள்ளி போயிருக்கும் தானே தவிர, இதில் உண்மை இல்லாமலில்லை. அம்மா அப்படி கேட்டதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என நினைத்துக் கொண்டவளுக்கு முன்பு எப்போதோ எங்கோ படித்தது திடீரென அவளுக்கு நினைவுக்கு வந்தது.

கல்லாக நான் இறந்து மரமாக எழுந்தேன்
மரமாக நான் இறந்து விலங்காக எழுந்தேன்
விலங்காக நான் இறந்து மனிதனாக பிறந்தேன்
பின் நான் ஏன் பயப்பட வேண்டும்
மரணத்தினால் நான் இழந்தது என்ன? -என யோசித்தபடியே காயத்ரி உறங்கிப் போனாள். நாளை விடியல் தொடங்கி இரவுக்குள் அவள் எதிர்பாராத ஒன்று அவள் வாழ்வில் மீண்டும் நடந்தேறலாம் என்பதை அறியாமல் எண்ணங்களிலிருந்து விடுதலையாகி அமைதியாக உறங்கிப் போனாள் காயத்ரி.

-அஸ்மின்

விழிப்பாள்…

Leave A Reply

Your email address will not be published.