நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பில் முந்தினாலும் 40 இடங்களையும் வெல்லுமா திமுக?

0
D1

தமிழக மற்றும் வட இந்திய தனியார் தொலைக்காட்சிகள் அண்மையில் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. இரு தொலைக்காட்சிகளிலும் தமிழ்நாடு+பாண்டிச்சேரி உட்பட உள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 36 இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளது. எஞ்சிய 4 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெல்லும் வாய்ப்பு உள்ளது என்று கருத்துக்கணிப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில் அதிமுக விருப்ப மனுவை விற்பனை சரிவு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக, திமுக, அமமுக போன்ற கட்சிகள் அமைக்கும் கூட்டணியில் இடம் பெறும் கூட்டணிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையே நீடித்து வருகின்றன. ஆனால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ்(5+1), மதிமுக(1), விசிக(1), இந்தியக் கம்யூனிஸ்ட்(1), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(1), முஸ்லீம் லீக்(1), மனித நேய மக்கள் கட்சி(1) எனவும் திமுக 30 இடங்களில் போட்டியிடுகின்றது என்றும் முஸ்லீம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப்போவதாகவும் அரசியல் களத்தில் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.

 

கடந்த சில நாள்களுக்கு முன்பும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் “நான் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்” என்று மீண்டும் அறிவித்து அரசியல் களத்தில் புயலைக் கிளப்பி வருகிறார். இந்தப் புயல் தமிழகத்தில் வலுவோடு மையங்கொள்ளக் காரணமாக இருப்பவர் திமுகவின் பொருளாளர் துரை முருகன் என்றால் மிகையில்லை. அவர் தொலைக்காட்சி நேர்காணலிலும் செய்தியாளர்களிடம் பேசும்போதும், “எங்களோடு தோழமைக் கட்சியாக இருப்பவர்கள் அனைவரும் கூட்டணியில் இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. நாங்கள் கொடுக்கும் சீட்டைப் பெற்றுக்கொண்டு கூட்டணியில் இடம்பெறலாம். இடம் போதவில்லை என்று கூட்டணிப் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு வெளியேறலாம்.

 

D2

புதிய கட்சிகள் எங்களோடு கூட்டணியில் இணையலாம். ஓட்டு வாங்கும் தேர்தல் களத்தில் எல்லாம் நடக்கும். இது நடக்கும், இது நடக்காது என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறமுடியாது” என்றவுடன் செய்தியாளர்கள் “அப்படியானால் புதிய கட்சிகளின் பட்டியலில் பாஜக, பாட்டாளி மக்கள் கட்சிகள் உண்டா?” கேட்டவுடன் துரை முருகன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், “எந்தக் கட்சியும் தீண்டத்தகாத கட்சி அல்ல. ஏன் அவர்கள் எங்களோடு சேரக்கூடாது.

 

பாஜகவோடும் பாமகவோடும் திமுக கூட்டணி வைக்கவில்லையா?” என்று பதில் தந்து அரசியல் களத்தின் போக்கு திசைமாறிச் செல்லுமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தினார். கடந்த சில நாள்களுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பட்டாளி மக்கள் கட்சி இடம் பெறும் கூட்டணியில் இடம் பெறாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. திமுக பொருளாளர் துரை முருகன் திமுக கூட்டணியில் பாமகத் தொடரவேண்டும் என்று சாதிப் பற்றோடு விரும்புகிறார். மேலும், ஸ்டாலினிடம் துரை முருகன் பேசும்போது, திமுக+காங்கிரஸ்+பாமக+இரு முஸ்லீம் கட்சிகள் போதும். 40க்கு 40 வெற்றிபெறலாம் என்று தன் மனக்கணக்கையும் தெரிவித்துள்ளார்.

மேலும் விடுதலைச் சிறுத்தைகள் இருந்தால் இருக்கட்டும், போனால் போகட்டும் என்ற துரை முருகன் பேச்சுக்குத் தற்போது வரை திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவும் தெரிவிக்காமலும் எதிர்ப்பும் தெரிவிக்காமலும் மதில்மேல் பூனையாக இருக்கிறார்.

திமுக வெல்லுமா?

அதிமுகக் கூட்டணியில் பாஜக இடம்பெறுவது உறுதியாகிவிட்டது. 20 இடங்களில் அதிமுக போட்டியிடுவது என்றும், பாமக 6 இடங்களிலும், தேமுதிக 4 இடங்களிலும், எஞ்சிய 10 தொகுதிகளில் பாஜக போட்டியிடுவது என்றும் அந்த 10 இடங்களில் பாஜக, புதிய தமிழகத்திற்கு ஒரு இடமும், கொங்கு இளைஞர் முன்னேற்றப் பேரவை ஒரு இடத்திலும், புதிய நீதிக்கட்சி ஒரு இடம், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு இடமும், கொடுத்து அனைவரும் தாமரை சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

6 இடங்களில் பாஜக போட்டியிடுகின்றது என்ற அதிகாரப்பூர்வமற்ற செய்திகளைத் தில்லியிலிருந்து பாஜகவின் பொறுப்பாளர் முரளிதரராவ் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எதையும் இதுவரை இறுதி செய்யவில்லை என்று பேட்டி தருகிறார். இதற்கிடையில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிமுக+பாஜக கூட்டணிக்குப் பெரிய அளவில் ஆதரவில்லை என்ற சோகமான செய்தியும் உள்ளது.

 

பாஜக அரசின் துணை சபாநாயகராக இருந்துகொண்டு பாஜகவை வெளுத்து வாங்கும் தம்பித்துரைக்குக் கட்சி கடந்து இளைஞர்கள் மத்தியில் ஆதரவு அலை பெருகி வருகின்றது என்பதைச் சமூக ஊடகங்களின் வழி புரிந்துகொள்ள முடிகின்றது. பழம்பெரும் அதிமுக தலைவர்களில் ஒருவரான பொன்னையன் போன்றவர்கள் பாஜகவோடு கூட்டணியே தேவையில்லை. எதற்கு அவர்களைத் தோளில் சுமக்கவேண்டும்? என்று வெளிப்படையாகவே ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். அதிமுகவின் இரட்டைக்குழல் துப்பாக்கிகளான ஓபிஎஸ்+இபிஎஸ் தொண்டர்களின் மனஉணர்வுகளைப் புரிந்துகொண்டு கூட்டணி அமைக்கப் போகிறார்களா? அல்லது வருமான வரி ரெய்டுக்குப் பயந்து கொண்டு பாஜகவோடு கூட்டணி அமைக்கப்போகிறார்களா என்ற அந்தப் பூனைக்குட்டி விரைவில் வெளியே வந்துவிடும்.

 

N2

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எல்லாக் கட்சிகளும் வியப்போடும் பயத்தோடும் பார்த்துக் கொண்டிருப்பது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ன முடிவு செய்யப்போகிறது என்பதுதான். இதுவரை இந்தக் கட்சியோடு யாரும் கூட்டணி பேசவில்லை. அந்தக் கட்சியின் துணைப்பொதுசெயலர் டிடிவி தினகரன்தான் 5 மாநிலக் கட்சிகளோடு கூட்டணி பேசிக் கொண்டிருக்கிறோம் என்று ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். யார் யார் என்பதை இதுவரை அவர் வெளிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தகுந்தது. தனியார் தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், அமமுக முன்னணித் தலைவர்களில் ஒருவரான தங்கத் தமிழ்ச்செல்வன் பேசும் போது,“நாங்கள் தேசியக் கட்சியோடு கூட்டணி வைக்கவில்லை என்பது மட்டுமல்ல, தேசியக் கட்சிகளோடு யாரும் கூட்டணி சேரக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்.

 

தமிழகத்தின் பறிக்கப்பட்ட அத்தனை உரிமைகளையும் நாம் போராடிப் பெறவேண்டும் என்றால் தேசியக் கட்சிகளோடு கூட்டணி சேர்ந்துகொண்டு எப்படிப் பெறமுடியும்? காவிரி நீர் பிரச்சனை தொடங்கி நீட் தேர்வு வரை நம்மால் என்ன செய்யமுடிந்தது? தற்போது உயர்சாதியில் உள்ள ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு சட்டத் திருத்தத்திற்கு எல்லாத் தேசியக் கட்சிகளும், வடநாட்டு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

இந்த இடஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது என்று தமிழகத்திலிருந்து மட்டும்தான் எதிர்ப்புக் குரல் கிளம்பியது. இது பெரியார், அண்ணா வளர்த்த மண் தமிழ்நாடு. இங்கே தேசியக் கட்சிகளுக்கு இடமில்லை. பாஜகவை எதிர்க்கும் தேசியக் கட்சிகள் அல்லாத மாநிலக் கட்சிகள் அனைவரும் கூட்டணி அமைத்து ஒன்று சேருவோம். அண்ணன் வைகோ வரட்டும், மருத்துவர் இராமதாசு வரட்டும், சகோதரர் தொல்.திருமா வரட்டும் எல்லாரும் இணைந்து போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்போம். இல்லையென்றால் தமிழ்நாட்டின் மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, திறமையுள்ளவர்களை, மக்களுக்காகப் போராடுகின்றவர்களைக் கட்சிகளைக் கடந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து நம் உரிமைக்குரலை எழுப்பச் சொல்லுவோம்” என்று உணர்ச்சியோடு பேசிமுடித்தார்.

அமமுக கட்சி வட்டாரத்தில் தங்கத் தமிழ்ச்செல்வன் பேச்சு குறித்துப் பேசும்போது, தினகரனிடம் அப்படி ஒரு திட்டம் உள்ளது. இலங்கையில் வாழும் தமிழர் கட்சிகள் ஒன்று சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடுவார்கள். அதுபோலத் தமிழ்நாட்டில், தமிழர் உரிமைக் கூட்டியக்கம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு அமைப்பைத் தொடங்குவது என்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சமூக அக்கறையாளர்கள் கல்வியாளர் வசந்திதேவி, பெண்ணியப் போராளி முனைவர் அரங்க மல்லிகா, தூத்துக்குடி பாத்திமா, கூடங்குளம் சுப.உதயக்குமார், மீத்தேன் பேராசிரியர் ஜெயராமன், மே 17 திருமுருகன் காந்தி, ஆசிரியர் சங்கத் தலைவர் பேராசிரியர் ஜெயகாந்தி, நெல்லை கொக்கக்கோலா எதிர்ப்பாளர்கள், சகர்மலாத்
திட்ட மீனவர் எதிர்ப்பு கூட்டமைப்பு, நீர் மேலாண்மையில் பட்டறிவு பெற்ற பொறியாளர்கள், சுற்றுசூழல் ஆர்வலர் தியோடர் பாஸ்கர், வைகோ, திருமா, பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன், திருச்சி சிவா, தற்போதைய தம்பித்துரை என்று பல்வேறு தளங்களில் போராடிக்கொண்டிருப்பவர்களைக் கட்சிச் சார்புகளைக் கடந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கும் எண்ணம் தற்போது தொடக்கநிலையில்தான் உள்ளது.

 

அதன் எதிர்காலம் குறித்து எதையும் எங்களால் சொல்ல இயலாது” என்றார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் திமுக, அதிமுகவின் வெற்றியைப் பாதிப்படையச் செய்யலாம் என்ற ஒரு கருத்தும் உள்ளது.
தற்போதைய நாடாளுமன்றத்தின் மக்களவையில் திமுகவிற்கு ஒரு இடம் கூடக் கிடையாது. அது தன் எண்ணிக்கையை அதிகமாக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் 30 இடங்களில் போட்டியிடுகின்றன. கூட்டணிக் கட்சிகள் 10 இடங்களில் போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணிப் பங்கீடு திமுகவிற்கு ஆர்கே நகர் தொகுதிபோலப் பாதிப்பையும் ஏற்படுத்தலாம்.

 

திமுகவின் வரலாற்றில் திமுக எப்போதெல்லாம் பெரும் வெற்றியைப் பெற்றதோ அப்போதெல்லாம் திமுக குறைந்த தொகுதியில் போட்டியிட்டது. கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடம் கொடுத்தது என்ற வரலாற்று உண்மையை ஸ்டாலின் மட்டுமல்ல, அவரை எடுப்பார் கைப்பிள்ளையாக நடத்தும் துரை முருகனும் அறிந்துகொள்ளவேண்டும். 1980 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 16 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களிலும் வெற்றிபெற்றது. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 வென்றபோது திமுக போட்டியிட்டது 15 தொகுதிகள் மட்டுமே. 1996ஆம் ஆண்டு திமுக – தமாகவோடு கூட்டணி சேர்ந்து ஜெயலலிதாவைப் பர்கூரில் தோற்கடித்துச் சட்டமன்றத் தேர்தல் மாபெரும் வெற்றி பெற்றது.

 

அதனைத் தொடர்ந்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைத் திமுக ஈட்டும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்த நிலையில், ஜெயலலிதா மதிமுக, பாமகவை வைத்துக்கொண்டு 33 தொகுதிகளைக் கைப்பற்றித் திமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

திமுக வெறும் 6 தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றது. அதன்பின் 1990ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. கூட்டணிக் கட்சியான வலது கம்யூனிஸ்ட்டு கட்சி மட்டும் நாகப்பட்டினத்தில் வெற்றிபெற்றது. திமுகவிற்குத் தேர்தல் வெற்றி என்பது எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போல் நிரந்தரமாக அமையவில்லை.

மாறாகத் திமுக அமைக்கும் கூட்டணியின் வழியாகவே வெற்றி சாத்தியப்பட்டிருக்கின்றது என்ற பேருண்மையை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். மேலும் குறைந்த இடங்களில் திமுக போட்டியிட்டப்போதுதான் அனைத்துத் தொகுதிகளிலும் வென்றிருக்கிறது என்ற உண்மையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

கூட்டணிக் கட்சிகளைத் திமுக அரவணைத்தால் 2004இல் கலைஞர் பெற்ற 40க்கு 40ஐ ஸ்டாலின் பெறும் வாய்ப்பு உறுதியாக ஏற்படும். திமுக சிறிய கட்சிகளை ஒதுக்கக்கூடாது. 1996இல் ஜெயலலிதா இந்தச் சிறிய கட்சிகளை வைத்துதான் வெற்றியை ஈட்டினார். மேலும் சிறிய கட்சிகள்தானே என்று ஒதுக்கினால் சட்டமன்றத்தில் ஒரு விழுக்காட்டில்தான் 2016 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது என்பதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

கருணாநிதி இல்லாத நிலையில் திமுக, அவரின் வெற்றிக்கான வரலாற்றையும் வரலாறு புகட்டிய பாடங்களையும் அறிந்துகொள்ள முன்வரவேண்டும். திமுகவிற்கு இது வெறும் தேர்தல் மட்டுமல்ல, திமுக என்ற இயக்கம் கிழக்கில் உதிக்கும் உதயசூரியனாய் ஒளிவிடப் போகிறதா? மேற்கில் மறைந்துவிட்ட சூரியனாய் இருள் நிறைந்து இருக்கப் போகின்றதா என்பதற்கான அமிலச் சோதனை என்பதை மறந்துவிடக்கூடாது.

N3

Leave A Reply

Your email address will not be published.