அருளமுதம் எனும் அருமருந்து உயிர் வளர்ப்போம்! கதை வழி மருத்துவம்-14

0
Business trichy

யோகியாரின் அக்கேள்வி மன்னனை சிந்திக்க வைத்தது. இத்தனை காலம் இந்த அதிசய சோலையை எண்ணி பல முறை அவன் வியந்துள்ளான். இப்படி ஒரு அதிசயம் தன் நாட்டிலும் நடைபெறுவதை எண்ணி பெருமிதம் கொள்வதும் உண்டு. எனினும் இதுவரை இம்மலர்கள் எவ்வாறு இளமையுடன் திகழ்கின்றன என்பதை அறிய முனைந்ததில்லை. பழம்பெருமைகளை பேசி திரிந்த காலத்தில் தானும் தன் நாட்டு மக்களும் தம் சுய அறிவை மேம்படுத்தும் வேலையை செய்திருந்தால் இக்கேள்வி எப்போதோ தோன்றியிருக்கக் கூடும் என நன்கு உணர்ந்தான்.

யோகியாரிடம் பணிவுடன், “அய்யனே, இம்மலர்களின் இளமைக்கான காரணத்தை நாங்கள் அறிந்திருக்கவில்லை தயை கூர்ந்து தாங்களே அக்காரணத்தினை விளக்கி அருள வேண்டுகிறேன்” என்றான். மன்னனை அன்புடன் நோக்கிய யோகியார், “மன்னா, இம்முகிழ் வனத்தின் மத்தியில் தவயோகி ஒருவர் ஆழ்ந்த சமாதி நிலையில் நிலத்திற்கு அடியில் வீற்றிருக்கிறார். இவர் வீற்றிருக்கும் நிலவறைக்கு மேல் நீர் உறைந்த நிலையில் ஒரு தடாகம் உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக தவம் புரிந்து வரும் இவரது யோகத்தின் ஆற்றலால் அங்குள்ள காற்று குளிர்ந்து உறைந்து போனது. அங்கு நிலவி வருகின்ற உலர் காற்றின் காரணமாகவே அம்மலர்கள் இளமையோடு விளங்குகின்றன. எந்த ஒரு உயிரும் முதுமை அடைவதில் காற்று முக்கிய பங்காற்றுகின்றது. தனது யோகத்தால் அத்தவயோகி தனக்குள் காற்றினை பிடித்து வைத்து பல்லாயிரம் ஆண்டுகளாக இளமையுடன் தவமியற்றி வருகிறார்.

 

அவர் தவமியற்ற இவ்விடத்தினை தேர்ந்தெடுக்க ஒரு முக்கிய காரணமும் உள்ளது. தமது நாட்டின் இப்பகுதியில், தென்பகுதியில் கனல்வாயன் மலையை சுற்றியுள்ள வெப்பக் காற்றும் வடபகுதியின் குளிர்ந்த மலைச்சாரலில் உள்ள குளிர்காற்றும் சந்திக்கின்றன.
முன்னர் தமக்கு நான் உபதேசித்த முப்பொருள் தத்துவம் இங்கு செயல்புரிகின்றது. குளிர் காற்று அகாரமாகவும், வெப்பக்காற்று உகாரமாகவும். இவையிரண்டும் சந்திக்கும் புள்ளியில் நிலவும் சமநிலை இகாரமாகவும் விளங்குகின்றது. இகாரத்தில் மறைந்துள்ள இறையாற்றல் அத்தவயோகியின் தவத்தால் வெளிப்பட்டு அவரது உள்ளும் புறமும் காற்றினை அசையாது உறையச் செய்தது. அத்தவயோகி, அவை சுற்றியுள்ள மலர்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக இளமையோடு திகழ வழிவகுத்திருக்கின்றது” என விளக்கினார். இதனைக் கேட்ட மன்னன் அதிசயித்து போனான். “அய்யனே. நம்மை சுற்றி நிலவும் காற்று அத்தனை அதிசயம் வாய்ந்ததா? காற்றினை அத்தவயோகி தன்னுள் பிடித்து வைத்திருப்பதாகவும், அதனாலேயே இத்தனை ஆண்டுகள் இளமையோடு உயிர் வாழ்வதாகவும் கூறுகின்றீர்களே, இது எம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கும் சாத்தியமா?” என கேள்விகளை அடுக்கினான்.

 

Kavi furniture

இதற்கு யோகியார் “மன்னா, பஞ்ச பூதங்களில் காற்று பூதம் உருவமற்றது. பார்வைக்கு தென்படாது. உணர மட்டுமே இயலும். எனினும் நாம் உயிர்வாழ இக்காற்றின் பங்களிப்பு இன்றியமையாதது. அப்படிப்பட்ட காற்றின் தன்மைகளை வெளிப்புற உணர்வு உறுப்பு-மூக்கு, உணர்ச்சி-துக்கம், சுவை – காரம், உப உறுப்புகள்- இரு தோள்கள், தொண்டை, தோள்பட்டை, மேல் முதுகு, இரு கைகள், நிறம் – வெண்மை, திசை – மேற்கு, ஆதாரம்-விசுத்தி(தொண்டைக்குழி) என வகைப்படுத்தலாம். இக்காற்றினை பிடிக்கும் கணக்கினை அறிந்து பிடித்து வந்தால் நாம் மரணத்தினையும் வெல்லலாம். இதனை திருமூலர் பெருமான் தனது திருமந்திர நூலில் பாடலில் வெளிப்படுத்தி காட்டியுள்ளார் எனக் கூறி அத்திருமந்திரப் பாடலை பாடிக் காட்டினார்.

 

MDMK

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே – பாடலை இரசித்த மன்னன் பாடலின் விளக்கத்தினை கேட்டான். யோகியாரும் விளக்கத் தொடங்கினார்.

 

“மன்னா, திருமூலர் இப்பாடலில் நம் உடலுக்குள் சுவாசமமாக குடி கொண்டிருக்கும் காற்றினை உட்சுவாசமாக மாற்றி அதன் வாயிலாக உடலில் உள்ள மூல ஆற்றலாகிய குண்டலினியை சுழுமுனை நாடி வழியாக உட்சுவாசத்தின் போது ஏற்றி, வெளி சுவாசத்தின்போது இறக்கி, இவ்வாறு செயல்களின் போதும் காற்றினை உயிர்நிலையில் பூரித்திருக்கும்(உள்வாங்கி பிடிக்கும்) சூட்சும கணக்கினை அறிபவர்கள் இங்கு யாரும் இல்லை. அதனால் தான் அவர்கள் கூற்று எனும் எமனுக்கு இரையாகி மாண்டு போகிறார்கள். ஆனால் இவ்வாறு கூற்று எனும் எமனை உதைத்து அகற்றி நித்திய வாழ்வினை அளிக்கின்றது.

 

காற்றினை பிடிக்கும் கலையை அறிந்த எந்த ஒரு மனிதனுக்கும் இளமையோடு நீண்டகாலம் இறப்பின்றி வாழும் வாய்ப்பு உண்டு” யோகியார் இவ்வாறு விளக்கிய பின் மன்னனின் மனதில் காற்றினை பிடிக்கும் அந்த அற்புத கலையினை அறியும் ஆவல் மேலிட்டது. தனது ஆவலை யோகியாரிடம் முன் வைத்தான். மன்னனின் அவ்வேண்டுகோளை ஏற்ற யோகியார் தான் அக்கு யோகா எனும் ஞான மருத்துவக்கலையில் கற்றுத்தெரிந்த பின்னர் இந்த காற்றினை பிடிக்கும் சுவாசக்கலையை கற்றுத் தருவதாக வாக்களித்தார். யோகியார் மன்னரிடம் பேசிக்கொண்டிருந்தபோது எங்கிருந்தோ ஓடி வந்த பெண் ஒருத்தி இவர்கள் பயணித்துக் கொண்டிருந்த தேரின் முன் வந்து விழுந்தாள்.

சாரதியும் உடனடியாக தேரை நிறுத்தினார். தேரின் முன் விழுந்து கிடந்த அப்பெண்ணின் கண்கள் எங்கோ பார்த்தபடி இருந்தன. பார்ப்பதற்கு வேட்டுவப்பெண் போன்று காட்சியளித்தாள். மன்னன் அப்பெண்ணிடம் “பெண்ணே நீ யார்?” என வினவினான். அதற்கு அப்பெண் பதிலேதும் கூறாமல் மவுனம் சாதித்தாள்.

யோகியின் போதனைகள் தொடரும்…

Pranav city

Leave A Reply

Your email address will not be published.