தனிமை பயணம்-4

0
D1

மலைமீது பேருந்து ஏறிக்கொண்டு இருக்கும் நேரம் ஏனோ அச்சம் எட்டித்தான் பார்த்தது என்னுள்ளே.கொண்டை ஊசி வளைவுகளில் தொண்டை நிறைந்தது வயிற்றில் உள்ள உணவு. அச்சமும் உச்சத்தில் நின்றது.இருந்தும் எதையும் காட்டிக்கொள்ளாது பாடல் கேட்டுக்கொண்டிருந்தேன்.

இறைவன் வண்ணங்கள் கொண்டு வரைந்த உலகில் இங்கு மட்டும் பச்சை நிறத்தை கொட்டிவிட்டானோ ! என எண்ணங்களில் தோன்றியது. திரும்பும் திசை எங்கும் பச்சை வண்ண மரங்களும் அதில் கொஞ்சித் திரியும் பறவைகளும் என்னை இயற்கையோடு இணைந்து ரத்த நாளங்கள் உறைக்கும் குளிரில் பயணிக்க வைக்கிறது.

எதிரில் இருப்பனவன் கண்களில் தெரியாத மூடுபனி வழி நெடுக கேரட் விற்கும் விவசாயிகள் எங்கள் ஊரில் மாங்காய் விற்பது போல் தோட்டத்தின் முன்பே அமர்ந்து விற்றுக் கொண்டிருந்தனர்.
ஒன்றரை மணி நேரத்திற்கு பயணத்திற்கு பின் ஊட்டியை அடைந்தேன்.

D2

உறைக்கும் குளிரிலும் சாதாரணமாக நடந்து செல்லும் மனிதர்கள். அந்த வான் அவன் மலை அரசி மேல் காதல் கொண்டு அவளின் முகடுகளில் முட்டித்தான் காதல் உரைக்கிறான் நொடிப்பொழுதும் நிறுத்தாமல்,இவளும் ஏனோ முரைத்துக்கொண்டு தான் இருக்கிறாள்.

இவளை பார்த்துக்கொண்டே மலர்கண்காட்சி காண பயணத்தில் விரைந்தேன்.பத்து நிமிடங்களில் அடைந்தேன். இந்த ஊரில் மட்டும் ஏனோ காற்றின் வாசம் உணர்ந்திடாத நறுமணமாய் இருந்தது,அறிதாய் ஏதோ இங்கு மட்டும் கிடைக்கும் இன்பமாய்,புதையலாய் இருந்தது.

நுழைவுச்சீட்டு வாங்கி உள்நுழைந்தேன் வண்ணங்கள் நிறைந்த பெட்டியை வரிசையாய் அடுக்கித்தான் வைத்தர்களோ இவர்கள். இத்துணை வண்ண மலர்களை ஒரு சேரக் காணவே கண்கள் எத்துணை தவம் செய்திருக்குமோ!
ஒவ்வொன்றாய் கண்டு காதல் வானில் தான் கயிறு கட்டி யாரோ இழுப்பது போல் அந்த பூக்களுக்குள்ளே புதையுட தூண்டும் மலர்களின் காதல் மணம் .
வெளிச்செல்ல மனமில்லாது கட்டயமாய் கடந்து வந்து சிறிது தூரம் நடந்தேன்.
என்னை இசையால் வருடும் பறவைகள் கீச்சிட்டுக் கொண்டே பறந்து மரங்களில் அமர்ந்தன.

கூட்டில் இறக்கை முளைக்காத வானம்பாடி அது கீச்சிடும் சத்தம் மட்டும் தனியாய் கேட்கிறது.எங்கிருந்தோ தாய்ப் பறவை வந்தது அலகுகளில் உணவை பரிமாறிக்கொள்ளும் பக்குவம்,காணக் கிடைத்திராத காதல் காட்சி அது.

தோட்டபெட்டா மலை நோக்கிய பயணமாய் புறப்பட்டேன்.மீண்டும் மலைப்பாதை செங்குத்தான சாலை உயிர் பயம் மீண்டும் எட்டிப் பார்க்கத் தொடங்கியது.

N2

சற்றே விழிகள் மூடி உறங்கினேன்.திடீரென சத்தம் கேட்கவே எழுந்தேன்.யாரும் இல்லா பேருந்து நான் மட்டும் தனியே உறங்கிக் கொண்டிருந்தேனோ என அச்சம் என் முன் மலையாய் வளர்ந்து நின்றது.வெளியில் செல்ல முற்பட்ட போது பேருந்து ஆடத் தொடங்கியது.

.என்னவென்று அறியாது பொறுமையாக அடிமேல் அடிவைத்து நகர்ந்தேன். அனைவரும் வெளியே நின்று நடத்துனரையும்,ஓட்டுநரையும் திட்டிக் கொண்டு இருந்தனர்.

வாகனப் பழுது காரணமாய் நின்றிருக்கிறது என்பதை உணர்ந்து அவர்களுள் ஒருவனாய் செல்லும் வழி எண்ணி நானும் இருந்தேன்.
இறுதியாய் பழுது பார்ப்பவர் வந்து 2 மணி நேரம் பழுது பார்த்த பின் பேருந்து கிளம்பியது.
சிறிது நேரத்தில் மலையை அடைந்தேன்.
கோப்பையில் வெண்ணிலா சுவை பனிக்கூல் கட்டியாய் மேகங்கள் மலையின் மேல் முட்டிக்கொண்டும் முத்தங்கள் இட்டுக்கொண்டும் முன்பனியை தன் காதலின் பின் கொட்டின.

பனிக்கூலை அலங்கரிக்கும் வண்ண பழங்களாய் மக்கள் கூட்டம்,
பறவைகளாய் கொஞ்சும் காதல் ஜோடிகள்
பாறையின் மேல் எறும்பாய் பார்வையிடும் பார்வையாளர் கூட்டம்.

குழந்தை பருவம் அதில் கையில் பிடித்து கட்டிய வீடு அதை கண்ணில் பார்ப்பதாய் திரும்பும் திசையெங்கும் வீடுகள்.
பசுமை பார் அதை விழிகள் கண்டு தான் வியந்து நிற்குதே, வியர்வை காணாது பனியின் பஞ்சமில்லா நெஞ்சில் தவழ்ந்து விளையாடி என் நேரம் கழிந்தது.

வீடு நோக்கிய பயணம் தொடங்கினேன்.
கருமேகம் சூழ்ந்து வெண்ணிலவும் வருவதற்குள் மலைபயணம் முடித்தேன்.
மீண்டும் கோவை,இரவு ரயில் இனிமையான இசையோடு பயணம் முடித்து இல்லம் அடைந்தேன்.

தனிமை பயணம் அது என் வாழ்வில் அளிக்க முடியா மை கொண்டு மார்பை கிழித்து இதயத்தின் துடிப்புகளில் வாழ்வின் உண்மைகளை வயோதிகன் வழி எழுதிச்சென்றது.எனோ இந்த பயணம் பள்ளி காதலை மின்மினி பூச்சியாய் இரவில் தந்து பகலில் மறைய வைத்தது.
இத்தனை இன்பங்கள் அர்த்தங்கள் தந்த பயணமே என் இந்த தனிமை பயணம்.

-சண்முக நாதன்

N3

Leave A Reply

Your email address will not be published.