9 வருடத்தில் 1,686 பேருக்கு இலவசமாக செயற்கை கால்கள் பொருத்தி திருச்சி இந்து மிஷன் மருத்துவமனை சாதனை

0
Full Page

மருத்துவத்துறையில் பல்வேறு சேவைகள் செய்து வரும் திருச்சி இந்து மிஷன் மருத்துவமனையில் கடந்த 8 வருடங்களில் 1686 செயற்கை கால்கள் இலவசமாக மாற்றி சாதனை புரிந்துள்ளது.

இந்து மிஷன் மருத்துவமனையானது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் நோக்கில் திருச்சி, அண்ணாநகர், தென்னூரில், 1987ம் ஆண்டு நல்லுசாமி எம்எல்ஏ முன்னிலையிலும், அடைக்கலராஜ் எம்பி மற்றும் விஸ்வநாதன் ஐஏஎஸ் ஆகியோர் தலைமையிலும், இந்து மிஷன் மருத்துவமனையின் தலைவர் சுப்பிரமணியபிள்ளையால் திறந்து வைக்கப்பட்டது. 30வருடங்களுக்கு மேலாக இம்மருத்துவமனை, சென்னையில் இயங்கிவருகிறது.


குறைந்த கட்டணத்தில் பொதுவான மருத்துவச்சேவைகள் மட்டுமே வழங்கி வந்த இம்மருத்துவமனையில், கடந்த 2010ம் ஆண்டு விவிஎஸ்.சுப்ரமணியன் செயலாளர் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பிறகு, இம்மருத்துவமனையின் சேவைகளை முன்னேற்றும் விதமாக கண்புரை அறுவை சிகிச்சை முகாம், செயற்கை கால் வழங்கும் திட்டம் உள்ளிட்ட 5 வகையான சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், 2010ம் ஆண்டு முதல் 2018 டிசம்பர் மாதம் வரையில் சங்கரா ஹெல்த் பவுன்டேஷன், ரோட்டரி சங்கம் திருச்சிராப்பள்ளி மிட்டவுன், கரூர் வைஸ்யா வங்கி ஆகியவற்றின் நிதி உதவியுடன் 5906 கண்புரை அறுவை சிகிச்சை, 2576 இருதய நோய் அறுவை சிகிச்சை, 1686 செயற்கை கால்கள் வழங்குதல், 9978 மாமோக்ராம் மூலம் மார்பக கட்டி கண்டறிதல் மற்றும் கருப்பை வாய் பரிசோதனை சிகிச்சை ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

தற்போது அந்த வரிசையில் ரூ.1.6கோடி மதிப்பீட்டில் டயாலிசிஸ் மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், டயாலிசிஸ் அறுவை சிகிச்சைக்காக ரூ.950 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற மருத்துவமனைகளைக் காட்டிலும் இந்த தொகை மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்து மிஷன் மருத்துவமனையின் செயலாளர் விவிஎஸ்.

 

சுப்ரமணியனிடம் கூறுகையில், 30ஆண்டுகளுக்கு மேலாக இந்து மிஷன் மருத்துவமனை மக்களுக்கு சேவை புரிந்து வருகிறது. ஏழை மக்களுக்கு சேவை வழங்குவதே இம்மருத்துவமனையின் நோக்கம். அதன்படி, இவ்வளவு ஆண்டுகளாக குறைந்த செலவில் மக்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. நான் பதவியேற்ற பிறகு சரிசெய்யவே முடியாது என பொருளாதார அளவில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நினைக்கும் சிகிச்சைகளை இலவசமாக தர வேண்டும் என்று நினைத்தேன்.

Half page

அதன்படி ரோட்டரி, ஜெஎப்ஏ உள்ளிட்டோரின் நிதிஉதவியால் இலவச செயற்கை கால், இருதய நோய் சிறப்பு முகாம், கண்புரை அறுவை சிகிச்சை என தொடர்ந்து சேவைசெய்ய முடிகிறது. இதுபோன்ற சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகளுக்கான ரசீதை நேரடியாக அவர்களிடம் கொடுத்து அதற்குண்டான தொகையை நாங்கள் பெற்றுகொள்வோம். செயற்கை கால்களைப்பொறுத்தவரையில் வெளி மருத்துவமனைகளில் ரூ.50ஆயிரம் முதல் ரூ.1லட்சம் வரை பெறுகின்றனர். அதை வாங்க முடியாதோருக்கு இங்கு இலவசமாக கொடுக்கும் போது, அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையும் பார்க்கமுடிகிறது.

 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கையில் இருந்தும் இதற்காக இங்கு வந்துள்ளனர். வாகன விபத்துகளில் கால்களை இழந்தவர்களே பெரும்பாலும் இங்கு வருகின்றனர். அதேபோல் இன்று பலர் இருதய கோளாறுகளால் இறக்கின்றனர். அதற்கு பணமும் ஒரு காரணியாக இருக்கிறது. எனவே, இதற்கும் இலவச அறுவைசிகிச்சையே தீர்வாக இருக்கும் என நினைத்து இருதய அறுவை சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறோம்.

திருச்சி இந்து மிஷன் மருத்துவமனையின் செயலாளர்
வி.வி.எஸ். சுப்ரமணியம்.

தற்போது ஒரே சமயத்தில் 6 நபர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நபர் ஒருவருக்கு சிகிச்சைக்கு ஆகும் செலவான ரூ.950மட்டும் வசூலிக்கப்படும். அதேபோல கண்புரை அறுவை சிகிச்சையை சங்கரா கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவசமாக செய்து வருகிறோம். இது டெல்டா பகுதிமக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பொருளாதாரம் இல்லை என இதுவரையில் எந்த சிகிச்சையும் நின்றதில்லை. இனியும் அதுபடியே இருக்கும் என நம்புகிறேன் என்றார்.

பணம் பறிக்கும் மருத்துவமனைகளுக்கு மத்தியில் சேவையை மட்டுமே பிரதானமாக கொண்டு செயல்படும் இம்மருத்துவமனையில் காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரையில் பொதுமருத்துவப்பிரிவு செயல்படுகிறது. இதற்கான கட்டணமாக, 65வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.10ம், 65வயதிற்குட்பட்டோருக்கு ரூ.20ம் வசூலிக்கப்படுகிறது.

மேலும், பிப்ரவரி மாத இலவச முகாம்களாக வரும் 16ம் தேதி இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாமும், 17ம் தேதி இலவச இருதய நோய் சிறப்பு மருத்துவ முகாமும், 23ம் தேதி மார்பக கட்டி பரிசோதனை முகாமும், 24ம் தேதி செயற்கை கால் மைய முகாமும் இம்மருத்துவமனையில் நடைபெறஉள்ளது.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.