பாதாளத்தில் இருந்த பூமியை வெளிக்கொண்டு வந்த நாள்-மாசிமகம்

0
1 full

மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளே மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது.

சிவபெருமான் வருணனுக்கு சாப விமோசனம் அளித்ததும் இந்நாளில் தான்.உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார். தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசிமகம் தான்.

பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான். இதனால் இந்நாள் பெருமாளை வணங்குவதற்குரிய நாளும் ஆகிறது.

2 full

மக நட்சத்திரம் பெருமாளுக்கும் உகந்த நாள். நீர் நிலை உள்ள இடங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதற்குக் காரணமானவர் புண்டரீக மகரிஷிதான். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளின் காலடியில் அன்றலர்ந்த தாமரை மலரை வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவலில் புண்டரீக மகரிஷி, மாமல்லை கடற்கரையில் மலரை வைத்துவிட்டு, பாற்கடலுக்கு வழி ஏற்பாடு செய்ய முயற்சித்தார். அதற்காக கடல்நீரை தொடர்ந்து இறைத்துக் கொண்டிருந்தார்.

இவரின் தளரா முயற்சியையும், தாளாத பக்தியையும் கண்ட திருமால் ஒரு முதியவராக உருக்கொண்டு முனிவரிடம் வந்து, எனக்கு பசியும் களைப்புமாக உள்ளது. ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல்நீரை உமக்காக இறைக்கிறேன் என்று அனுப்பினார். முனிவருக்கு உணவு வாங்கிவந்து பார்த்தபோது கடல் உள்வாங்கி இருந்தது. முதியவரைக் காணோம். அப்போது ஒரு குரல் கேட்டது. முனிவர் அவ்விடத்தைப் பார்க்க, தான் வைத்த மலரை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டு ரிஷிக்கு காட்சி தந்தார். ஸ்ரீமன் நாராயணனே தன் திருக்கரத்தால் நீர் இறைத்த இந்த அர்த்தசேது கடலில் மகத்தன்று நீராடுவது பெரும் புண்ணியம்.

ஆசை இருக்கும் வரை செயல்பாடுகள் இருந்து கொண்டே இருக்கும். ஆசைகள் நிறைவேறும்போது மகிழ்ச்சி உண்டாகிறது. நிறைவேறாதபோது துன்பம் உண்டாகிறது. மன்மதன் ஆசையின் கடவுளாக இந்து மதத்தினரால் வணங்கப்படுகிறான். ஆசையை தூண்டி உலக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு ஆற்றும் இவரை “காதலின் கடவுள்” என்றும் திருமாலின் மானச புத்திரன் என்றும் கூறுவர். இவரது மனைவி ரதிதேவி.

சிவன் பார்வதி இருவரின் மகனாக பிறக்கும் கடவுளாலேயே தன்னை வதம் செய்ய முடியும் என்ற அரிய வரத்தைப் பெற்ற சூரனை வதம் செய்ய, தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மன்மதன் (காமன்) தவத்தில் இருக்கும் சிவனின் மீது அம்பு எய்கிறான். இதனால் வெகுண்ட சிவன் அவனை எரித்து விடுகிறார்.

பின்னர் ரதிதேவியின் வேண்டுதலுக்கு இணங்க மன்மதன் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும்படி சிவன் வரம் தருகிறார்.

இந்த புராண நிகழ்வு காமதகன விழாவாகவே தமிழகத்தின் பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. நல்ல விளைச்சலையும், விருத்தியையும் கருதி செய்யப்படும் சமயச்சடங்காக இது கருதப்படுகிறது.

மாசி மாதத்தில் ஊரின் மையத்தில் கரும்பை நட்டு அதன் மீது தர்பையையும், மலர் மாலைகளையும் இட்டு அலங்கரிக்கின்றனர். இது மன்மதனாக பூசிக்கப்படுகிறது.

மாசி மகத்திற்கு முன் மன்மதன்-ரதி திருமணம் நடைபெறுகிறது. மாசி மகத்தன்று காமதகனம் நடைபெற்றதனை விளக்க அங்கு நட்டு வைத்த கரும்பை தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர். இது அதிகாலையில் நடைபெறும் நிகழ்ச்சியாகும். பின் ஒரு நல்ல நாளில் மன்மதனை எழுப்பும் ஐதீகம் நடைபெறுகிறது. மன்மதன் உயிர்ப்பிக்கப்பட்டபின் விழா நிறைவுறுகிறது.

காமன் விழா கொண்டாடப்படும் இடத்தில் சிறு சிவலிங்கம் அமைத்து வழிபடுகின்றனர்.

திருச்சியில் உள்ள பாக்குடி என்ற சிற்றூருக்கு அருகில் 15 நாள் திருவிழாவாக காமன் பண்டிகை ஒவ்வொரு மாசி மகத்தன்று ஆரம்பித்து 15 நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.