திருச்சியில் இடப்பற்றாக்குறை நெருக்கடியில்அங்கன்வாடி மையம் !

0
Business trichy

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 38வது வார்டில் அமைந்துள்ளது கவிபாரதி நகர் இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இயங்கிவருகிறது.


இந்நிலையில், வருடவருடம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அங்கன்வாடி மையத்தில் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. இடம் மிகவும் நெருக்கமாக இருப்பதால் அனைத்து குழந்தைகள் பள்ளியின் உள்ளே அமர முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமன்றி தற்போது இயக்கிவரும் அங்கன்வாடி மையம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு இயங்கிவருகிறது. எனவே, அரசுக்கு சொந்தமான இடத்தில் கான்கிரீட் கட்டிடம் கட்டித்தந்து குழந்தைகளின் கல்வியை பாதுகாத்திட வேண்டும் என இப்பகுதிமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ஞானலெட்சுமி
Half page

தற்போது இயங்கிவரும் அங்கன்வாடி மையத்திற்கு தன்னுடைய வீட்டை வாடகை விட்டிருக்கும் ஞானலெட்சுமி கூறுகையில், கவி பாரதி நகரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அங்கன்வாடி மையம் நடத்திக்கொள்வதற்கான அனுமதி அரசிடம் இருந்து வந்தது. ஆரம்பத்தில் எங்கள் பகுதியில் உள்ள கோயிலில் தான் ஆசிரியர் நடத்திவந்தார். சாத்தனூர் மற்றும் கவிபாரதி நகர் ஆகிய இரண்டு அங்கன்வாடி மையத்திற்கும் ஒரே ஆசிரியர் என்பதால் இங்கு ஆசிரியர் நியமிக்கும் வரையில் அவருக்கு உதவியாக உள்ளுரைச் சேர்ந்த ஜெயலெட்சுமி இருந்து வந்தார்.

 

இந்நிலையில், கோயிலை பள்ளியாக நடத்துவது சரிபட்டு வராது, அதேபோல் இடம் இல்லாமல் நடத்தவில்லை என்றால், மீண்டும் கவிபாரதி நகருக்கு அங்கன்வாடி மையம் கிடைப்பது கஷ்டம் என ஆசிரியர் கூறினார். எனவே, என்னுடைய வீட்டை மாத வாடகைக்கு அங்கன்வாடி மையத்திற்கு விட நான் சம்மதித்தேன். ஆரம்பத்தில் இங்கு குழந்தைகள் குறைவாகவே படித்தனர். அதனால், ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. இவர்களுக்கு உணவு கூட சமைத்து எடுத்து வர ஏற்பாடு செய்திருந்தார் ஆசிரியர். ஆனால், தற்போது கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர், இவர்களுக்கு உணவும் இங்கே தான் சமைக்கப்படுகிறது. எனவே, போதிய இடம் இல்லாததால் குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டுவருகின்றனர் என்றார்.

பார்வதி

இது குறித்து கவிபாரதிநகர் அங்கன்வாடி மையத்தை கூடுதல் பொறுப்பாக பார்த்து வந்த ஆசிரியை சுகந்தி கூறுகையில், கவிபாரதி நகருக்கு அங்கன்வாடி மையம் நடத்துவதற்கான ஒப்புதல் வந்தவுடன், எனக்கு கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இடம் இல்லாத காரணத்தால் கோயிலில் வைத்துநடத்தினோம். பின்னர், அங்கேயே வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து நடத்திவந்தோம். இதற்கான வாடகை தொகையை மாதமாதம் அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டோம். இந்நிலையில், பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், தற்போது செயல்படும் அங்கன்வாடி மையத்தின் இடம் போதவில்லை. ஆய்வுக்கு வரும் சிடிபிஓ அதிகாரியும் கூட தற்போது இருக்கும் மாணவர்களுக்கு இந்த இடம் போதாது, வேறு இடம் பாருங்கள் என்றார்.

 

இந்நிலையில், அந்த பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, இந்த அங்கன்வாடி மையத்திற்கு புதிய ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ள பார்வதி கூறுகையில், நான் இப்போதுதான், பணிக்கு வந்துள்ளேன். இனி தான் ஊருக்குள் சென்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பசொல்லவேண்டும். ஆனால், இங்கு ஏற்கனவே இடப்பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவதற்கு பெற்றோர்கள் யோசிக்கும் சூழ்நிலை ஏற்படும் என்றார்.
இது குறித்து கவிபாரதி நகர் மக்கள் கூறுகையில், எங்கள் பகுதி திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொகுதிக்கு உட்பட்டது.

குடிசையில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம்

பேருந்து நிறுத்தம், அங்கன்வாடி மையம், சாலைகளை சீர்அமைத்தல், மின்விளக்குகளை சரிசெய்தல் என பல்வேறு கோரிக்கைளுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்துள்ளோம். அங்கன்வாடி மையத்திற்கு வேறு இடம் பார்த்து வைத்தாலும், அரசிடம் இருந்து வரக்கூடிய குறைந்த பட்ச வாடகை தொகைக்கு யாரும் வீட்டை வாடகைக்கு விட மாட்டார்கள். அப்படியே விட்டாலும், வரும் காலங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அந்த கட்டிடமும் பற்றாமல் போய்விடும். எனவே, இதற்கு ஒரே தீர்வாக குழந்தைகளின் கல்வியை கருத்தில் கொண்டு இங்கு அங்கன்வாடி மையம் செயல்பட கான்கிரீட் கட்டிடம் கட்டித்தர அரசு முன்வரவேண்டும் என்றனர்.

குழந்தைகளின் வருகையை அதிகரித்து அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஆளும் அரசு பாடுபடும் நிலையில், குழந்தைகள் எண்ணிக்கை வருட வருடம் அதிகரித்து வரும் இந்த அங்கன்வாடிக்கு என கட்டடம் அமைத்து அந்த பகுதி மக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றுமா என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Full Page

Leave A Reply

Your email address will not be published.