திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் நடந்த அவலம் பள்ளிச்சிறுவனை கடித்துக்குதறிய நாய்

0
gif 1

மனித இனத்தை தவிர மற்றெல்லா உயிரினமும் பிரதானுகூலம் பார்த்து செயல்படுவது இல்லை. ஆனால், மனிதர்களிடம் தொடர்ந்து பழகுவதாலோ என்னவோ, நாய்களும் இப்போது மனித குணங்களை கிரகித்துக்கொண்டு செயல்பட தொடங்கியுள்ளது போலும். நன்றி எனும் சொல்லுக்கு உரித்தான விலங்கினமாக இருந்த நாய்கள், இப்போது வெறிபிடித்தால் போல் மாற்று குணங்களையும் கையாள தொடங்குகின்றன.


திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் சூர்யா என்ற சிறுவனை கடந்த 5-ம் தேதி பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த வெறிநாய் கடித்துக் குதறிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அர்ஜுன்குமார், இவருடைய மகன் சூர்யா. அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் பள்ளியில் நடைபெற உள்ள நாடகப் போட்டியில் பங்கேற்றுள்ளார். அதற்காக இவருடன் இன்னும் 2 மாணவர்கள் சேர்ந்து வழக்கம் போல, காலை 11 மணிக்கு பயிற்சிக்கு சென்றுள்ளனர். அப்போது, பள்ளி வளாகத்தினுள் வெறிநாய் ஒன்று ஓடி வருவதைக்கண்டு 3 சிறுவர்களும் ஓடத்தொடங்கியுள்ளனர். அந்த சமயத்தில், எதிர்பாராமல் கால்தடுக்கி சூர்யா மட்டும் கீழே விழுந்துவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட வெறிநாய் சூர்யாவை கடித்துக்குதறி உள்ளது.

இது குறித்து சூர்யாவின் தந்தை அர்ஜுன்குமார் கூறுகையில், (பிப்ரவரி 5ம்தேதி) மதியம் 12 மணிக்கு பள்ளியில் இருந்து என்னை தொடர்பு கொண்டு சூர்யாவை நாய் கடித்துவிட்டதாக கூறினர். காலை 11 மணிக்கு நடந்த சம்பவத்தை ஒருமணி நேரம் கழித்தா, பெற்றோருக்கு தகவல் கொடுப்பது. அதுமட்டுமின்றி, என்னுடைய மகனை நாய் கடிக்கும் போது எந்த ஆசிரியரும் அவனைக் காப்பாற்ற முன்வரவில்லை. எங்கே தங்களை கடித்துவிடுமோ என்ற எண்ணத்தில் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர். இதை என் மகனே என்னிடம் கூறினான், அதுவே எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. பள்ளியில் முறையான பராமரிப்பு இல்லை. பள்ளியின் முக்கிய கதவு சாத்தப்படாமல் இருந்ததாலும் இதுவரை காவலாளி என்று யாருமே நியமிக்கப்படாததாலும், தெருவில் அலைய கூடிய நாய் பள்ளியின் உள்ளே வந்திருக்கிறது.

gif 3


திருச்சி அரசு மருத்துவமனையில் நாய்கடிக்கான ஊசி போட்டப்பிறகு, எடத்தெருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறோம். நாய் கடித்ததற்காக மொத்தம் 25 தையல் போட்டுள்ளனர் என்கிறார் வேதனையுடன்.

 

 

 

 

 

நாய்கடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

வானொலியில் தினம் ஒரு தகவல் கூறும் தென்கச்சி. கோ. சுவாமிநாதன் பேசியதிலிருந்து, நிபுணர்களின் கூற்றுப்படி, நாய்கள் திடீரென கடிப்பதில்லை அது கடிப்பதற்கு முன் சில அறிகுறிகளை காட்டும் அதை புரிந்து கொள்ளவேண்டும்.

1. நாய் வாலை ஆட்டிக்கொண்டு வருகிறது என்றால் அது பாசத்தில் மட்டும் அல்ல. அது குழப்பம், கோபம், பதட்டம் உள்ளிட்ட உணர்வின் போதும் அது தன்னுடைய வாலை ஆட்டும். இது புரியாமல், நாயைப்பற்றி நன்கு தெரிந்தவர்கள் கூட கடி வாங்கியதுண்டு.

2. நாயின் முன்னே சென்று சிரித்தால், அது தன்முனைப்பை காட்ட கடித்துவிடும். அதேபோல தலையில் தட்டினால் தன்னை அடக்கமுயல்வதாகவோ, அச்சுறுத்துவதாகவோ நினைத்து கடித்துவிடக்கூடும். நீங்கள் சும்மா இருங்கள். அதுவே உங்களிடம் வரும். அப்போது அதனிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள், தலையைத்தவிர மார்பு, தோல் உள்ளிட்டப்பகுதிகளில் தட்டிக்கொடுக்கலாம்.

3. ஒரு நாய் உங்களை துரத்தும் போது நீங்கள் ஓடினால் அது உங்களை துரத்தி வரும். அசையாமல் சிலைபோல் நின்று விடுங்கள் அது ஒன்றுமே செய்யாது. அதற்கு ஆர்வம் இல்லாமல் போய்விடும்.(பல நேரங்களில் தெருக்களில் ஓடி, விளையாடும் குழந்தைகளை நாய்கள் கடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்)

4. நாய் நம்மை கோபமாக பார்த்தால் நாம் வேறு பக்கம் பார்க்கவேண்டும்.

5. நாய் கோபமாக இருந்தால் அதன் வால் நேராக நிற்கும்.

gif 4

6. நாய் பணிந்தோ, பயந்தோ சென்றால் அதன் வாலை காலுக்கு நடுவில் வைத்துக்கொள்ளும்.

7. ஒரு நாய் உங்களைப்பார்த்து ஒதுங்கிசென்றால் நீங்கள் விலகிச் செல்லவேண்டும் என அது நினைக்கிறது.

8. இவன் நம்மைவிட பெரிய ஆள் வேறு வழியில்லாமல் இவனிடம் மாட்டிக்கொண்டோம் என்று நினைக்கும் போதே நாய் நம்மை கடிக்க ஆரம்பிக்கிறது.

9. சங்கிலியால் நாய்களை கட்டிப்போடுவதும் ஆபத்தானதே.

10. சின்ன குழந்தைகளை நாய்கள் கடிக்காது என கூறி நாய்களுடன் விளையாட வைக்கின்றனர். சின்ன குழந்தையும் நாய்கள் கடிக்கும். எனவே, அவ்வாறு விளையாட அனுமதிக்கக்கூடாது.

 

கண்டு கொள்ளாத அதிகாரிகள்…

மாநகராட்சிக்குட்பட்ட அனைத்துப்பகுதிகளில் தினமும் 100க்கும் மேற்பட்டோர் நாயால் கடிபட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். இது குறித்து எந்த அதிகாரிகளும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை, நடவடிக்கை மேற்கொண்டார்களா என்பதும் தெரியவில்லை. எனவே மக்களே தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டிய காட்டாயம் ஏற்படுத்துள்ளது.

 

நாய்கள் பெருக்கம் கட்டுப்படுத்தப்படுமா?

நகர கட்டமைப்பை சீரமைக்கவும், தூய்மை நகர பட்டியலில் இடம்பிடிக்க துடிக்கும் மாநகரட்சி நிர்வாகம், இவ்வாறு தெருவில் அலையும் நாய்களின் எண்ணிக்கையை இதுவரை கண்டுகொண்டாதாக தெரியவில்லை.

நமது இதழிலும், தொடர்ந்து நகரில் பெருகியுள்ள நாய்கள் குறித்து தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறோம்.
சமீப காலமாக அதிகரித்துள்ள இந்த தெரு நாய்களின் பெருக்கத்தால் பொதுமக்கள் சொல்லண்ணா துயருக்கு ஆளாகி வருகின்றனர். நாய்கள் பெருக்கத்தை தடுக்கும் வகையில் அதற்கான கருத்தடை நிலையம் மட்டுமே திறப்பது மட்டுமே தீர்வாகுமா என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.