அறிவோம் தொல்லியல்-4 பயணங்கள் முடிவதில்லை…

0
1

சென்ற தொடரில் சோழரின் தொன்மையை பறைசாற்றிய புகார் அகழாய்வு குறித்து கண்டோம், இனி வரும் தொடரில் சேரரின் தொன்மையை, தமிழ் எழுத்துருவின் தொன்மையையே முன்னோக்கி கொண்டு சென்ற கொடுமணல் அகழாய்வுகள் குறித்து காண்போம்.

ஊர் அமைவிடம்:

இன்றைய ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள சிற்றூர் கொடுமணல் உள்ளது. 1961ல் சீனிவாச தேசிகன் இங்கே சில மணிகள், கருப்பு சிவப்பு பானையோட்டு சிதறல்களை கண்டு, தொல்லியலறிஞர் நாகசாமியிடம் இதை தெரிவித்தார். அவர் அதை அரிய மணிகள் என கண்டு வியப்புற்று, அவ்விடத்தில் ஓர் சிறு ஆய்வு செய்தார். அதில், இங்கு தொல்லியல்மேடு உள்ளது உறுதியானது.

2

இதன் பின் 1985, 86, 89, 90, 97ல் தமிழக தொல்லியல்துறை, தமிழ்பல்கலைக்கழகம், சென்னைப்பல்கலைக் கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் தனித்தனியாகவும், இணைந்தும் ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன்பின் சென்ற ஆண்டு வரை அகழாய்வுகள் செய்யப்பட்டு வந்தன. இந்த மண்மூடிய இந்நாகரிகத்தின் எச்சம் இவ்வூரின் கிழக்கே சுமார் ஒரு கி.மீ தொலைவில், நொய்யல் ஆற்றின் வடகரையில் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது வாழ்விடம்(habitation), ஈமக்காடு(Burial ground) என்ற இரு பெரும் பிரிவுகளை கொண்ட முழுமையான ஒரு நகரம். பெரும்பான்மை பெருங்கற்கால சின்னங்கள் கிழக்குப்பகுதியிலேயே பரவி கிடக்கிறது. இச்சின்னங்கள் மக்களால் பாண்டியன் குழி, பாண்டிய வீடு என அழைக்கப்படுகிறது. ஊரிருக்கை(Habitation) பகுதியில் மொத்தம் 48 குழிகள் அகழப்பட்டது. இக்குழி ஒவ்வொன்றும் 10 சதுரமீட்டர் பரப்பு கொண்டது. இது குறித்து அடுத்தடுத்த பகுதிகளில் விரிவாக காண்போம். முதலில் கொடுமணல் குறித்த பழம் குறிப்புகளை அதாவது சங்ககால இலக்கியத்தின் வாயிலாக அறிவோம்.

கொடுமணம் எனும் கொடுமணல்
பதிற்றுப்பத்து சேரர்களின் புகழ்பாடும் சங்க இலக்கியம், இதில் வரும் மூன்று மன்னர்கள் குறித்து புகழூர் ஆறுநாட்டார் மலையில் வரும் சங்ககால தமிழி கல்வெட்டில் குறிப்புகள் வருகிறது! இலக்கியம் தவிர்த்த முதல் சேரர் கல்வெட்டுகள் என இதனை கூறலாம்.

இப்பதிற்றுப்பத்தின் 7ம் மற்றும் 8ம் பத்தில் அதாவது 67, 74ல் இவ்வூரை பற்றிய குறிப்புகள் கிடைக்கிறது! கொடுமணம் என்ற பெயரே தற்கால வழக்கில் மருவி கொடுமணல் என்றழைக்கப்படுகிறது.
67ம் பாடலில்,
“கொடுமணம் பட்ட நெடுமொழியொக்கலோடு
பந்தர்ப் பெயரிய பேரிசை………”
74 ம் பாடலில்
“………….
கொடுமணம் பட்ட வினைமா ணருங்கலாம்
பந்தர் பயந்த பலர்புகழ் முத்தம்…..
………..”
எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விரு பாடல்களையும் முறையே புகழ்பெற்ற புலவர்களான கபிலர், அரிசில் கிழார் ஆகியோர் பாடியுள்ளனர். இவ்வூரில் செய்யப்பட்ட அணிகலன்கள், கல்மணிகள் குறித்தே இப்பாடல்கள் விவரிக்கிறது.
கொடுமணலில் உற்பத்தி செய்யப்பட்ட அணிகலன்களுக்கு மிகச்சிறந்த மதிப்பு வெளிநாட்டிலும், அண்டைய தேசங்களிலும் இருந்தது.

கொடுமணலுக்கு அருகேயுள்ள பகுதிகளின் வரலாற்று பின்னணி:

1.வெள்ளலூர்

இவ்வூர் நொய்யலாற்றின் தென்கரையிலுள்ளது. இவ்வூரை வேள்+இல்+ஊர் என பிரித்து பொருள் காணலாம், வேளிர்கள் அரசமைத்த பகுதியாக கொள்ளலாம். இவ்வூரில் ஒப்பிலியர்மேடு என்ற பகுதியுள்ளது, இதில் நிறைய செங்காவி, கருப்பு சிவப்பு பானையோடுகள் பரவி கிடக்கிறது. இங்கு ரோமானியகாசுகள் உள்ளிட்ட பல்வேறு பொற்காசுகள், வெள்ளிக்காசுகள் கிடைத்துள்ளது. இதன் காலம் கி.மு 1 – கி.பி.4, பெருங்கற்கால சின்னமான கல்வட்டமும் உள்ளது.

2.சூலூர்:

பழங்காலத்தில் இதன் பெயர் ஆரலும். 9 ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டுகள் கிடைத்தது. இங்கும் ரோமானிய காசுகள் கிடைத்தது. நிறைய கல்வட்டங்கள் பரவியுள்ளது. இன்றும் கூட இப்பகுதியில் கல்மணிகள் ஏற்றுமதி வியாபாரம் புகழ்பெற்ற தொழிலாகும்.

3.போளுவம்பட்டி:

இங்கு கோட்டைமேடு என்ற பகுதியில் நிறைய பழங்கால சுடுமண்பொம்மைகள் கிடைத்தது. இங்கு 1980ல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மூவேந்தர் சின்னங்களும் சேவல் அமர்ந்துள்ள தாங்கி, எழுத்துப்பொறிப்புள்ள (கி.பி3-5) பொம்மைகள் கிடைத்தது.

4.பேரூர்

இங்கு நிறைய பண்டையமேடுகள் உள்ளது. நிறைய தாழிகள் 8ம் நூற்றாண்டு கட்டிட எச்சங்கள், சுடுமண் பொம்மைகள், சேரர் விற்பொறித்த முத்திரை, சிவலிங்கம் ஆகியவை கிடைத்துள்ளது.

 

கொடுமணலின் அகழாய்வு குறித்து பல தகவல்களை அடுத்தடுத்த வாரங்களில் காண்போம்…

3

Leave A Reply

Your email address will not be published.