ஆதிமகள்-6

கருப்பு உடையணிந்திருந்தவள் தன்னை விசாலி கோகில கிருஷ்ணன் என அறிமுகப்படுத்தி கொண்டு, காயத்ரியை உள்ளே அழைத்து சென்றாள். காயத்ரியும் தன்னை அறிமுகப்படுத்தி அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, ஓ சண்முகநாதன் மகளா! என விசாலி கேட்பது சாதாரணமாக தோன்றினாலும் அதன் உள்ளே – உள்ள வார்த்தையின் அடி ஆழத்தில் சிறு துண்டு மின்னலாய், ஒரு பெரும் மரத்தின் சன்ன வேராய் வியப்பும், மகிழ்வும் – கனத்த சோகமென்னும் லேசான மேகத்தால் மூடப்பட்டிருந்தது. காயத்ரியும் அதை உணர்ந்தாள். அதுதான் காயத்ரியின் வெளிச்சம்.
வாசல் கடந்து வீட்டின் உள்ளே சென்று விசாலியும், காயத்ரியும் தனித்தனி ஆனார்கள். உள்ளே அழைப்பது மட்டுமே எனது பொறுப்பு, இனி இறந்து கிடக்கும் உடலை பார்த்து நீ கவலை கொள் – நான் ஏற்கனவே கவலையின் கலவரத்தால் தளர்ந்து போனேன், என்னை தனித்து விடு என்பது போல் காயத்ரியை விட்டு நகர்ந்து சென்று விட்டாள் விசாலி.
புதிதாக கட்டப்பட்ட வீடு என்பதால், வீட்டுப் புழக்கத்திற்கான எந்தப் பொருட்களும் அங்கு இல்லை. அந்த வீட்டினுள் இருந்தது ஒரு உயிரற்ற உடல், சில உயிருள்ள மனிதர்கள், முகம் வாடிய வெளிச்சம். ஓர் ஓரமாய் அலுமினியத்தால் செய்யப்பட்ட ஏணி ஒன்றும் சாத்தப்பட்டிருந்தது.
அந்த ஏணியின் அருகில் நின்றிருந்த சண்முக நாதன், அதை அங்கிருந்து எடுத்து வீட்டின் பின்புறம் சாய்த்து வைத்தார். இதைப்பார்த்து கொண்டிருந்த காயத்ரி அவருக்கு பின்னே சென்று ஏணியை வைத்துவிட்டு அவர் திரும்பும் வரை காத்திருந்தாள். ஏணியை வைத்துவிட்டு திரும்பி பார்த்த சண்முக நாதனுக்கு அந்த இடத்தில் காயத்ரி நின்றுருப்பதை திடீரென பார்த்த போது தன்னுடன் அவள் வந்திருந்தை இவ்வளவு நேரம் தான் மறந்து விட்டேன் என நினைவுபடுத்திக் கொண்டார்.


அங்கு நின்று பேசக்கூடிய சூழல் இல்லாததால் இருவரும் வீட்டிற்கு வெளியே வர ஹாலை கடந்த போது, அங்கு இருந்தவர்களில் ஒரு சிலர் இவர்கள் இருவரையும் பார்த்தனர். அவர்கள் பார்ப்பதை உணர்ந்த காயத்ரிக்கு அவர்கள் நம்மை பார்க்கிறார்கள் என்ற எண்ணம் சங்கடத்தை ஏற்படுத்தியது. நடை சில அடிகள் என்றாலும் வெகு தூரம் போலிருந்தது கால்களுக்கு.

அப்போது விசாலி, சண்முக நாதனை சண்முகம் எனப்பெயர் சொல்லி அழைத்தாள் சண்முகம் அவள் அழைத்தவுடன் வேகமாக அவள் அருகே நடந்து சென்றார். இருவரும் ஏதோ பேசிக்கொண்டனர்.
காயத்ரி அங்கிருந்த சவப்பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த கோகுல கிருஷ்ணனை பார்த்தாள். இதுவரை உயிருடன் இவரை நான் பார்த்தது இல்லை இனியும் இவரை நான் பார்க்கப்போவதில்லை. இவர் நாளை எரிக்கப்படலாம் அல்லது புதைக்கப்படலாம், இனி இவருக்கானது என எதுவுமில்லை. சில நாட்கள், சிலரது நினைவுகளில் இவர் நினைவு வந்து போகலாம். இவரது இழப்பு, இவரால் பலன் அடைந்தவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும். எதிரிக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். ஒரு வேளை இவர் தனக்கு அறிமுகமானவராக இருந்திருந்தால் இந்த தத்துவார்த்த நினைவு வராமல், இருவருக்குமான நினைவுகள் மட்டுமே வந்து போயிருக்கும். வருத்தத்தையும், சோகத்தையும், சில நாள் கவலைக்கான துக்கத்தையும் கால அளவீட்டில் மனம் கணித்து அவருக்கான கணக்கை தீர்த்து கொள்ளும். அவ்வளவு தான், அவ்வளவே தான், இவருக்கான வாழ்க்கை முடிந்தே போனது, என காயத்ரி சிந்தித்தாள்.
சண்முகநாதன் விசாலியிடம் பேசிவிட்டு காயத்ரியிடம் வந்தவுடன், இருவரும் சேர்ந்து வெளியே வந்தனர். ஆட்டோ டிரைவர், ஆட்டோவின் பின் சீட்டில்படுத்து தூங்கிக்கொண்டிருந்தார் இவர்கள் வரும் சத்தம் அருகாமையில் கேட்க அவரும் விழித்துக்கொண்டார்.
சண்முக நாதன் காயத்ரியிடம், நீ போம்மா நான் இருந்து பார்த்துவிட்டு வர்றேன், இறந்து போனவரோட மகன் வெளியூரில் இருந்து வந்திட்டு இருக்கார். அவர் வந்தவுடன் காலையில் சீக்கிரமாகவே மயானம் போய் எல்லா வேலையையும் முடிச்சிட்டு நான் வந்தர்றேன், அப்புறம் முக்கியமா உன்னை விசாலி மேடம் நாளைக்கு சாயந்திரமாய் வர சொல்லி கேட்டுக்கிட்டாங்க, உனக்கு சம்மதம்னா நீ நாளைக்கு வந்திட்டு போ எனக்கூறி சண்முக நாதன் பேச்சின் நடுவில் சில இடைவெளிவிட்டு, நான் நினைக்கிறேன். இங்கு சொந்த பந்தம்னு பெண்கள் யாரும் விசாலி மேடத்துக்கு இல்லை, அதான் உன்னை வரச்சொல்றாங்க போலிருக்கு, எனக்கூற சிறிது நேர மௌனத்துக்கு பின் நாளைக்கு தானப்பா பார்க்கலாம் என்றாள். காயத்ரி!
மீண்டும் வருவாள்…
