டெல்லி  தீ விபத்தில் திருச்சி மருத்துவர் பலியானதை கண்டுபிடித்த சோக கதை ! 

0

டெல்லியில் கரோல்பார்க் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஓட்டலில் நேற்று முன்தினம் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் திருச்சியை சேர்ந்த டாக்டர் சங்கரநாராயணன் (வயது 55) உள்பட 17 பேர் பலியாகினர். டாக்டர் சங்கரநாராயணன் திருச்சி தென்னூர் காவேரி மருத்துவமனையில் பல் மருத்துவ நிபுணராக பணியாற்றி வந்தார். மேலும் திருச்சி புத்தூர் பாரதி நகரில் தனியாக பல் மருத்துவமனை நடத்தி வந்தார். ‘ஸ்டெம் செல்’ சிகிச்சையிலும் பெயர் பெற்றவர். இவரது வீடு திருச்சி ராமலிங்க நகர் 7–வது குறுக்குத்தெருவில் உள்ளது.

 

டாக்டர் சங்கரநாராயணனின் மனைவி பாரதி (50). இவர்களுக்கு ராகவ சிம்கன் (23) என்ற மகனும், ரங்க பிரியா (20) என்ற மகளும் உள்ளனர். மகன், அமெரிக்காவில் மருத்துவ மேற்படிப்பு படித்து வருகிறார். மகள் ரங்க பிரியா சென்னையில் தனியார் மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். சென்னையில் இ.சி.ஆர். ரோட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இவருக்கு வீடு ஒன்றும் உள்ளது.

 

சென்னையில் உள்ள வீட்டில் மனைவி, மகளும் தங்கி உள்ளனர். வாரத்தில் 2 நாட்களுக்கு மேல் டாக்டர் சங்கரநாராயணன் அங்கு தங்கியிருப்பது உண்டு. திருச்சி வீட்டில் டாக்டரும், அவரது தாயார் வேதவள்ளியும் வசித்து வந்தனர்.

 

ராணுவ வீரர்களுக்கான உயிர் காக்கும் சிகிச்சை முறையை டாக்டர் சங்கரநாராயணன் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதற்கான அனுமதியை பெறுவதற்காக டெல்லி சென்றபோது டாக்டர் சங்கரநாராயணன், தீ விபத்தில் சிக்கி பலியானார். அவரது புதிய மருத்துவ சிகிச்சை முறை குறித்து குழுவின் சக டாக்டர் அவினாஷ் கூறியதாவது:–

 

 

போரின் போது ராணுவ வீரர்கள் காயம் அடைந்தால் ஒரு இடத்தில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் ரத்தப்போக்கு அதிகமாக வெளியேறி உயிரிழப்பு ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காக ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா என்பதை பவுடராக்கி அதை காய்த்து வடித்த தண்ணீரில் கரையக்கூடிய வகையில் தயாரிக்கும் முயற்சியில் டாக்டர் சங்கரநாராயணன் ஈடுபட்டார்.

 

தட்டை அணுக்களை கரையக்கூடிய பொடியாக மாற்றும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமையும் பெற்றுள்ளார். இதனை நோயாளிகளுக்கு செலுத்தினால் உயிரை காப்பாற்ற முடியும்.

 

 

food

பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் திருச்சி வந்தபோது, இந்த புதிய மருத்துவ சிகிச்சை முறை குறித்து அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. அவரும் இதனை வரவேற்று, விரிவான அறிக்கையை கேட்டிருந்தார். இந்த சிகிச்சையை விலங்குகளிடம் இருந்து சோதனை அடிப்படையில் மேற்கொள்ளாமல் மனிதர்களிடம் சோதனை மேற்கொள்ள அனுமதி கேட்பதற்காக அவர் டெல்லி சென்றிருந்தார். அங்கு மருத்துவ துறை உயர் அதிகாரிகளை சந்திக்க இருந்தார். மேலும் இது தொடர்பான கருத்தரங்கும் அங்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக தீ விபத்தில் சிக்கி அவர் மூச்சுத்திணறி பலியானார்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

 

டாக்டர் சங்கரநாராயணனின் உடலுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை வேளச்சேரியில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. அவரது உடலை பெறுவதற்காக மனைவி, மகளும், உறவினர்களும் டெல்லி சென்றனர்.

 

 

திருச்சியில் உள்ள அவரது வீட்டில் வனஜா என்கிற மூதாட்டி சமையல் வேலை செய்து வருகிறார். வீட்டில் இருந்த அவர் கூறுகையில், ‘‘டாக்டர் மிகவும் நல்லவர். அன்பாக நடந்துகொள்வார். டெல்லி சென்று வந்துவிடுவேன் எனக்கூறியவர் இறந்துவிட்டாரே… என கண்ணீர் மல்க கூறினார்.

 

டாக்டர் நடத்தி வந்த மருத்துவமனைக்கு விடுமுறை விடப்படப்பட்டுள்ளது. தென்னூர் காவேரி மருத்துவமனையில் அவரது உருவப்படத்திற்கு டாக்டர்கள், ஊழியர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

 

டெல்லி சென்ற டாக்டர் சங்கரநாராயணனின் செல்போனின் எண் நேற்று முன்தினம் காலை முதல் ‘சுவிட்ச் ஆப்’ என வந்துள்ளது. இதனால் திருச்சியில் அவரது மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் அவினாஷ் சந்தேகமடைந்து அவரது செல்போனை ‘டிராக்’ செய்து பார்த்தபோது தீ விபத்து நடந்த ஓட்டலை காண்பித்துள்ளது.

 

இதைத்தொடர்ந்து அந்த ஓட்டலின் முகவரியை இணையதளத்தில் தேடியபோது, ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பான தகவல் அதில் வெளியாகி உள்ளது. இதையடுத்து அங்குள்ள தமிழக போலீசாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அங்கிருந்த டாக்டர் சங்கரநாராயணனின் உடலை செல்போனில் படம் எடுத்து டாக்டர் அவினாஷ்க்கு அனுப்பினர். அதை பார்த்தபிறகே தீ விபத்தில் டாக்டர் சங்கரநாராயணன் பலியானது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.