காதல் செய்வது இன்பமா? காதல் செய்யப்படுவது இன்பமா?

காதல் அழகானதாம்
உன்னைக் காதலிக்கும்வரை
உணரவில்லை.
காதல் செய்வது இன்பமா?
காதல் செய்யப்படுவது இன்பமா?
காதலிப்பவளால் காதலிக்கப்படுவதே பேரின்பம்.
அந்தப் பேரின்பம் தந்த பெருமைக்குரியவள் நீ!

காதலிக்கத் தொடங்கி
18 ஆண்டுகள் கடந்துவிட்டது.
ஆண்டுகளின் எண்ணிக்கை போலவே- நம் காதலின் இளமை குறையாமல்
இன்னும் வளர்ந்துதான் வருகின்றது.

அடிக்கடி வரும் சண்டையில்,
என் மீது நீ! கொண்ட
காதலின் ஆழம் இமயமாய் என்னுள்
இதழ் விரிக்கும்.
நானும் நீயும்
நாமான பிறகு ,
நமக்குள்ளான காதலைவிட- உலகத்தின் மீதான காதலையே நிறையப் பேசி இருக்கிறோம்.
அரசியல் பற்றி அலசியிருக்கிறோம்
மனிதநேயம் பற்றி மணிக்கணக்கில் பேசியிருக்கிறோம்..
இயற்கை குறித்து
இன்னும் பேசி வருகிறோம்.
உன்னை அதிகம் நேசித்தாலும்
உலகின் மீதான நேசத்தில்
நமக்கான நேரத்தை
நிறைய திருடிவிட்டேன்.
நமக்கான நேரம் என்பதில்
நம் பிள்ளைகளின்
பேரன்பையும் நான்
பெரிதாய் இழக்கிறேன்.
இருந்தும் என்னை இயக்கும் இதயமாய்
நீ இருக்கிறாய் என்பது
எனக்குப் பெருமையே!
கவிஞனாக கவிதை எழுதத் தொடங்கினேன்.
எழுத்தாளனாக கட்டுரை எழுதத் தொடங்கினேன்.
பேச்சாளனாக மேடை ஏறத் தொடங்கினேன்.
ஆனால் ஒரு கணவனாக நான்
என்ன செய்தேன்? என்பதை என்னால் எதையும் சொல்ல முடியவில்லை.

என் கடமையைச் சரிவர
செய்யாதபொழுதும்
எனக்கான இடத்தில் எல்லாம் செய்கிறாய், எனக்கும் சேர்த்து,
எனக்காகவும் சேர்த்து…
நீங்கள் அருகிலிருந்தால் போதும் என்பதைத்தவிர,
உன் அதிகபட்ச ஆசை வேறெதையும் நான் கேட்டதில்லை.
என் வாழ்க்கையில்
கலந்தவள் நீ! எனச் சொல்லமாட்டேன்.
உன்னில் கலந்ததுதான்
என் வாழ்க்கை எனச் சொல்லுவேன்…
நான்
உயரங்களில் இருக்கும்பொழுதெல்லாம்
என் அருகில் இருக்க ஆசைப்பட்டதில்லை நீ!
ஆனால் – என் துயரங்களிளெல்லாம்
அருகில் இருந்தவள்
நீ மட்டுமே!
வெளியூர் கிளம்பும் தருணங்களில் எல்லாம்
நான் கேட்கும் குரல்கள் இவை..
சீக்கிரம் வந்துருங்கப்பா
மகள்..
எப்பப்பா வருவே
மகன்..
பத்திரமா வாங்க
நீ…
இப்பொழுதெல்லாம்
நிறைய யோசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.
என் மீதான காதலைப் போர்த்தி பயணிக்கிறேனா?
இல்லை
என்மீது நீ! கொண்ட
காதலைப் போர்த்திவிட்டுப் பயணிக்கிறேனா?
எதுவாயினும்
என்மீது என்னவள் நீ கொண்ட
காதலை நானறிவேன்…
நான்
எழுதத்தொடங்கும் பொழுதெல்லாம்
எனக்கும் உனக்குமிடையே
ஒரு கதவு தாழ்ப்பாளிட்டுக் கொள்கிறது.
என்னோடு
மல்லுக்கட்டும்- உன்
வார்த்தை மல்யுத்தம்
இன்னும் ஓயவில்லை.
என் மீதான
உன் காதல் இன்னும்
ஓயவில்லை என்பதை
எனக்குள் உணர்கின்றேன்..
எத்தனை திட்டினாலும்
எதிர்வினை இருக்காது.
நீ ! உணர்ந்தே வைத்திருக்கிறாய்
என்னையும்,
என் காதலையும்…
நல்ல மனைவி
நல்ல பிள்ளைகள்
இந்த வரிசையில்
நல்ல கணவனாய்
நானுமிருக்க நாளும் முயல்கிறேன்..
காதலுடன்….
சிகரம் சதிஷ்குமார்
