வடக்கு கர்நாடகத்தில் உள்ள முருதீசுவரர் ஆலயம்

0
1

முருதீசுவர் என்பது கர்நாடகத்தின் வட கன்னட மாவட்டத்தில் உள்ள ஊர் ஆகும். இந்நகரம் அரபிக்கடலோரம் அமைந்துள்ளது. முருதீசுவரர் என்பது இறைவன் சிவனின் இன்னொரு பெயராகும். இந்நகரத்தில் உள்ள முருதீசுவரன் கோவில் புகழ்பெற்றது. மும்பை-மங்களூரு கொங்கன் தொடருந்து பாதையில் முருதீசுவரர் என்ற பெயரில் இங்கு தொடருந்து நிலையம் உள்ளது. முருடேஷ்வர் சிறிய ஊர் தான். ஆனால் சமீபகாலங்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வரும் இடமாக ஆகியிருக்கிறது.


கொங்கன் ரயில்வேயில் நாங்கள் எங்கள் பயணத்தை பன்வேல் இருந்து தொடங்கினோம். வழியெங்கும் தென்னை மரங்கள் செறிந்த கடற்கரையின் விளிம்புகளும் காயல்களும், சிறு வாய்க்கால்களும் தென்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இங்கே பொதிந்து கிடக்கும் பொக்கிஷங்கள் பல. இங்கு ரயில் பாதை உருவான பின்னர் சிறிது சிறிதாக வெளிச்சத்துக்கு வந்த இடங்களில் ஒன்றுதான் முருதீசுவர்.

2

நாங்கள் பயணித்த மத்ஸ்யகன்யா விரைவு வண்டி கோவா வழியாகத்தான் சென்றது. சரக்குத் தொடர்வண்டியில் இராணுவ டிரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்வதைப் பார்த்து இருக்கின்றேன். ஆனால் சரக்கு ஏற்றப்பட்ட, தனியார் லாரிகளை முழுக்க முழுக்க ஏற்றிக்கொண்டு சென்ற இரண்டு மூன்று சரக்குத் தொடர்வண்டிகளை இந்தத் தடத்தில்தான் பார்த்தேன். அதை ரோரோ ரயில் என்கிறார்கள்.


இக்கோவில் கன்டுக்க மலையில் மூன்று புறமும் அரபிக்கடலின் நீர் சூழ அமைந்துள்ளது. முருடேஷ்வரத்தின் சிறிய பழைய கோயில் பழுதடைந்து விட்டதால், 1970களில் தமிழக ஸ்தபதிகளின் கைவண்ணத்தில் முற்றிலும் புதிதாக கட்டப்பட்டிருக்கிறது. உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய சிவன் சிலை இதுதான். கடற்கரையை நோக்கிய வண்ணம் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். எதிரே நந்தியின் சிலை உள்ளது.

கோயிலுக்கு முன்னால் மிகப்பெரிய ராஜகோபுரம் உள்ளது கன்துகா என்ற குன்றின் மேல் கோயில் அமைந்துள்ளது. இதன் ராஜகோபுரம் 20 மாடிகளை உடையது. கோபுரத்தின் உச்சிக்கு செல்ல மின்தூக்கி உள்ளது. அங்கிருந்து பார்த்தால் 123 அடி உயரமுடைய சிவனின் அற்புதக்காட்சியைக் காணலாம். மலையின் அடிவாரத்தில் இராமேசுவர் லிங்கம் உள்ளது. இதற்கு பக்தர்களே வழிபாடு செய்யலாம். சிவன் சிலைக்கு அருகில் சனீஸ்வரன் கோவில் உள்ளது, கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகளின் நுழைவாயிலில் இரு முழு உருவ யானை சிலைகள் பைஞ்சுதை மூலம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இராசகோபுரத்தின் உயரம் 237.5 அடி ஆகும். இது உயரமான கோபுரங்களில் ஒன்று. கருவறை தவிர இக்கோவிலின் அனைத்து பகுதிகளும் புனரமைக்கப்பட்டதாகும்.

இந்த இடத்துக்கு செப்பனிடப்பட்ட சாலை உள்ளது. கோபுரம் சில இடங்களில் தங்கக் கவசங்கள் மின்னுகின்றன. உள்ளே மூலவர் அகோர மூர்த்தியாய் முகலிங்க கவசம் சாத்தியிருக்கிறார்கள். உருண்டையான திருமுகத்தில் முறுக்கு மீசையுடன் காட்சி தருகிறார் முருடேஷ்வரர். கீழே பழமையான லிங்கமும், ஆவுடையாரும் உள்ளன. கோயில் மிகத் தூய்மையாக நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது.
ஸ்தல புராணக் கதையை வண்ணச் சிற்பங்களாக ஒரு குகை போன்ற அரங்கில் செய்து வைத்திருக்கிறார்கள். சிற்பங்கள் மிக அழகாக கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. கந்துக கிரி மலை மீதிருந்து தெரியும் கடல் காட்சியும் அற்புதம்.

 

ராமாயண காலத்தில் கடுமையான தவத்திற்குப்பின் சக்தி வாய்ந்த ஆத்மலிங்கத்தைப் பெறுகிறான் ராவணன். கயிலாயத்திலிருந்து வேகவேகமாக ஆத்மலிங்கத்தை கையில் தாங்கி இலங்கையை நோக்கி வருகிறான். எக்காரணம் கொண்டும் ஆத்மலிங்கத்தைக் கீழே வைக்கக் கூடாது என்று நிபந்தனை. இருட்டுவதற்குள் இலங்கையை அடைந்து விட வேண்டுமென்பது இலக்கு. சிவனாரின் சக்தி சொரூபமான அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் அவன் வெல்லமுடியாதவனாகி விடுவானே என்று தேவர்கள் கலக்கமுறுகின்றனர். மும்மூர்த்திகளும் வினாயகரை பிரார்த்திக்கின்றனர்.

 

4

மேற்குக் கடற்கரைப் பக்கமாக ராவணன் வரும்போது விஷ்ணு மாயையால் அந்தி சாய்கிறது. அடடா மாலைக் கடன்களுக்கான நேரம் வந்து விட்டதே என்ன செய்வது என்று ராவணன் யோசித்துக் கொண்டிருக்கும்போது பசுமாடுகளை மேய்த்துக் கொண்டு ஒரு பிரம்மச்சாரி சிறுவன் வருவதைப் பார்க்கிறான். அவன் கையில் ஆத்ம லிங்கத்தைக் கொடுத்து ஜாக்கிரதையாகக் கையிலேயே வைத்திருக்கச் சொல்லிவிட்டு போகிறான் ராவணன். போன கொஞ்ச நேரத்திலேயே கத்திக் கூப்பிடுகிறான் சிறுவன். பதைபதைப்புடன் ஓடி வந்து ராவணன் பார்க்க தூக்க முடியாமல் லிங்கத்தைக் கீழே வைத்துவிட்டதாக சொல்கிறான் சிறுவன்.

என்ன முயன்றும் கீழே வைத்த லிங்கத்தை ராவணனால் பெயர்த்தெடுக்க முடியவில்லை. ஆத்திரத்தில் சிறுவனாக வந்த வினாயகரை தலையில் ஓங்கிக் குட்டுகிறான். அதையும் ஏற்று குட்டுத் தழும்புடன் அந்தத் தலத்திலேயே அமர்ந்து விடுகிறார் வினாயகர். ராவணன் கைப்பட்டு முறுகியதால் பசுவின் காது போல சிவலிங்கத் திருமேனி வளைகிறது. பசுவின் காது போன்ற (கோ-கர்ணம்) வடிவம் கொண்ட அந்த அழகிய கடற்கரையில் அவ்வாறே நிலைபெற்று எம்மை வழிபடும் பக்தர்களுக்கு அருள்வோம் என வானில் சிவபெருமான் தோன்றி ஆசியருளுகிறார். இப்படியாக கோகர்ணம் ஆத்மலிங்க ஸ்தலமாகிறது.

ராவணன் கொணர்ந்த ஆத்ம லிங்கேஸ்வரரின் கதை இங்கும் தொடர்கிறது. சிவலிங்கம் கோகர்ணத்தில் நிலைபெற்று விட்டது. கோபம் அடங்காத ராவணன் லிங்கம் இருந்த பூஜைப் பெட்டியை வீசி எறிய, அது சஜ்ஜேஸ்வரத்தில் சென்று விழுந்தது. அதன் மூடி இப்புறம் குணேஸ்வரத்தில் விழுந்தது. அதன் மீது சுற்றியிருந்த நூல்கயிறு தென்புறம் தாரேஸ்வரத்தில் சென்றது. லிங்கத்தின் மீதிருந்த வஸ்திரத்தைத் தூக்கி எறிய அது கந்துக கிரியின் மேல் முருடேஷ்வரத்தில் வந்து விழுந்தது.


எனவே மேற்குக் கடற்கரையில் இந்த ஐந்து இடங்களுமே ஆத்ம லிங்க ஸ்தலங்களாக அறியப்படுகின்றன. ஐந்து கோயில்களும் சுமார் 70 கி.மீ. தொலைவுக்குள் உள்ளன.
கோயிலில் கணபதி, அனுமன், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள் போன்ற துணை தெய்வங்களுக்கும் தனித்தனியாக சந்நிதிகள் உள்ளன. ஆலயத்துக்குப் பின்னால் இரு அழகான தீர்த்தங்கள் (குளங்கள்) உள்ளன.

தொடுவானத்தின் எல்லையற்ற காட்சிகளும் வெண்மையான மணல் துகள்களில் நுரை பொங்கப் பரவும் நீரும் எல்லைக் கோடு போல் அணி வகுத்து அசையும் பனை மற்றும் தென்னை மரங்களும் நிறைந்த இப்பகுதி தியானம் செய்வதற்கு ஒரு அருமையான இடம்.

சீதா சரவணன்

-சீதா சரவணண்

முகவரி: முருதேஸ்வர் நகரம், பட்லர் தாலுக்கா, உத்தரகன்னர் மாவட்டம், கர்நாடக மாநிலம் – 58135.
பயணிக்க: மும்பை மற்றும் மங்களூரில் இருந்து (15 மணி நேரம்)

3

Leave A Reply

Your email address will not be published.